கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில், கோடீஸ்வரர்களுக்கு 40 சதவீதம் வரை வருமானவரியை உயர்த்தலாம் எனவும், நான்கு சதவீதம் கரோனா செஸ் வரி விதிக்கலாம் என்றும் அரசுக்கு ஐடியா கொடுத்த அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கரோனா பரவலால் நாடு முழுவதும் முடங்கியுள்ள சூழலில், இந்தியப் பொருளாதாரமும் கடும் சரிவைக் கண்டுள்ளது. இந்த நிலையில் 50 இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரிகள் ஒன்றிணைந்து ஃபோர்ஸ் என்ற தலைப்பில், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சில யோசனைகளை அரசிடம் முன்வைத்தனர். அவர்களது அந்த திட்டப்படி, ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீத வரியை 40 சதவீதம் வரை உயர்த்தலாம் எனவும், ரூ.5 கோடிக்கு மேலான நிகர சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கு வரி விதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த இரண்டு வரி விதிப்பு மூலம் அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கூடுதலாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு, கோவிட்-19 நிவாரண செஸ் என 4 சதவீதம் வரி விதிக்கலாம். இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.18 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என அந்த தெரிவிக்கப்பட்டது.
இந்த பரிந்துரைகள் இணையத்தில் வைரலான நிலையில், இதுபோன்ற பரிந்துரைகளைத் தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடவில்லை எனவும், இதைப் பொதுவெளியில் வெளியிடும் முன் எங்களிடம் அந்த அதிகாரிகள் அனுமதியும் கோரவில்லை எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்தது. மேலும், இது ஒழுக்க நெறிமுறைகளை மீறிய செயல் என்பதால், இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.