இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும், மாநிலங்களும், தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசி தயாரிப்பாளர்களிடமிருந்து தடுப்பூசியை நேரடியாக வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து சீரம் நிறுவனம், மத்திய அரசுக்கு தடுப்பூசி விலை 150 ரூபாய் என்றும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்றும், தனியார்களுக்கு 600 ரூபாய் என்றும் விலை நிர்ணயித்தது.
ஆனால் தடுப்பூசியை விலை கொடுத்து வாங்குவது மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்றும், எனவே மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு கரோனா தடுப்பூசியை 150 ரூபாய்க்கே கொள்முதல் செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.