மூத்த பத்திரிகையாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு யூடியூப்பில் பேசி வருபவர் சிவசுப்பிரமணியம். சமீப காலங்களில் வீரப்பன் பற்றி நான்கு புத்தங்களையும் பதிப்பித்துள்ளார். அதில் அவர் ஏற்கனவே எழுதி வெளியிட்ட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு முற்றிலும் மாறாக வீரப்பனை சந்தித்த நிகழ்விலும், நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டு, அவரை மீட்பதற்காக அரசாங்க தூதுவராக நக்கீரன் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற மீட்புப் பணிகள் குறித்தும் தவறான தகவல்களை எழுதியிருக்கிறார்.
அரசாங்கத்தின் சார்பாக அனுப்பட்ட நக்கீரன் ஆசிரியர் தலைமையிலான குழுவிற்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. பரிமாற்றப்படவில்லை என தனது ''பொய் வழக்கும் போராட்டமும்'' புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவசுப்பிரமணியம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புத்தகத்தின் மூன்றாம் பாகத்திலும் சமீபத்திய வீடியோ பதிவிலும் நக்கீரன் ஆசிரியர் பணம் கொண்டு சென்றதாகவும் அதில் பணம் குறைவாக இருந்ததாகவும் அதைப்பற்றி வீரப்பனும் அவனோடு இருந்தவர்களும் தன்னிடம் பேசியதாகவும் அப்பட்டமான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.
இது சட்டப்படி அவதூறு குற்றச்சாட்டாகும். ஏற்கனவே நக்கீரன் சார்பாக கொடுக்கப்பட்டிருக்கிற அறிவிப்பின்படி, அவர் நக்கீரனில் பணியாற்றிய காலத்தில் செய்துவந்த நடவடிக்கைகள் அனைத்துமே காப்பிரைட் சட்டத்தின்படி நக்கீரன் பத்திரிகைக்கு பாத்தியப்பட்டது. இந்தநிலையில் தமிழ் இந்து - காமதேனு பத்திரிக்கை பேட்டியின்போது நக்கீரன் ஆசிரியர் அனுப்பிய அறிவிப்பை பெற்றுக்கொண்டதாகவும் தான் நக்கீரனில் பணியாற்றிய காலத்தில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அது சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை பற்றி பேசப்போவதில்லை என்றும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது நக்கீரன் ஆசிரியரிடம் ரஜினிகாந்த் பணம் கொடுத்து அதை ஆசிரியர் வீரப்பனிடம் கொண்டுபோனதாகவும் அதில் ரூபாய் 22 லட்சம் குறைந்திருந்ததாகவும் ஒரு செய்தியை உருவாக்கி தன்னுடைய வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.
இந்த அவதூறு நடவடிக்கை சம்மந்தமாக இன்று சென்னை இரண்டாவது கூடுதல் மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இதுபோன்ற அவதூறு செய்திகளை வீடியோ மற்றும் யூடியூப் பக்கங்களில் பரப்பக்கூடாது என சிவசுப்பிரமணியம் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் என். மனோகரனுடைய வாதத்தையும், ஆவணங்களையும் பரிசீலனை செய்த நீதிமன்றம் சிவசுப்பிரமணியம் இனி இந்த விஷயத்தைப் பற்றிய வீடியோக்கள் எதையும் பதிவேற்றக்கூடாது என இடைக்கால உருத்துக்கட்டளை பிறப்பித்திருக்கிறது.