விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை மறுநாள் (13.02.2024) விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவாதாக அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஹரியானாவில் உள்ள அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத், சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இணைய சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு நாளை விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி நாளை (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், இந்த பேச்சுவார்த்தையின் போது மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்தாராய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அதேசமயம் உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். இந்நிலையில் டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க ஹரியானா மாநில எல்லையில் உள்ள சாலைகளில் இரும்பு ஆணிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அம்பாலா போலீஸ் டிஜிபி அர்ஷ்தீப் சிங் கூறுகையில், “விவசாயிகள் போராட்டத்தால் ஷம்பு எல்லைக்கு சீல் வைத்துள்ளோம். விவசாயிகள் இங்கு வரும்போது, அவர்களுக்கு இந்த எல்லையை தாண்டி செல்ல அனுமதி இல்லாததால், இதைத் தாண்டி செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்வோம். விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.