![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/zpFCBMbmZ1T6uR-oPj2Yl-_CbrEuCtjVbN3YxMSEfeM/1615965360/sites/default/files/inline-images/560_8.jpg)
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தேர்தலுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால், அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய வாக்குப் பதிவு இயந்திரத்தை, இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் எடுத்துச் சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில், 144 என்று ஒட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வாக்குப் பதிவு இயந்திரம் மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்டது என்பதும், அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை மண்ணச்சநல்லூரில் இருந்து அவர்கள் எடுத்து வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.
அவர்கள் மண்ணச்சநல்லூர் பகுதியிலிருந்து ஸ்ரீரங்கம் வந்து கரூர் பைபாஸ் ரோடு வழியாக இருசக்கர வாகனத்தில் கடந்து சென்றனர். அவர்களை வழிமறித்து இதுகுறித்து கேட்கையில், தாங்கள் அங்கு பணியாற்றுவதாக கூறுகின்றனர். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல குளறுபடிகள் ஏற்படுத்துவதாக தொடர்ந்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வது வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புத் தன்மையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர், “இன்று ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதற்காக, அந்த வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டது. எடுத்துவந்தவர்கள் பணியாளர்கள்தான். இதில், எந்தவிதக் குளறுபடியும் நடக்கவில்லை. அவர்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டுவந்துவிட்டனர்” என விளக்கம் அளித்துள்ளார்.