Skip to main content

ஏன் அவசரம்..? அதிமுக தலைமை மீது ர.ர.க்கள் விமர்சனம்... கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி!

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

 AIADMK

 

அதிமுகவில் விருப்ப மனு பெற்றவர்களிடம் கடந்த 4ஆம் தேதி ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது. 8,200 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் அனைவரிடமும் எப்படி ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது என்ற கேள்விக்கு, அது வெறும் கண்துடைப்புதான் என அதிமுகவைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்.

 

கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பாஜக (நேற்று இரவு 20 தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டது), தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் என வெளியிடப்படாத நிலையிலும், 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என பட்டியல் கொடுக்காத நிலையிலும், நேற்று (05.03.2021) அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நமக்கு எந்தெந்த தொகுதி என்று சொல்வதற்கு முன்பே அடுத்தக் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிடுமா என்ற கேள்வியும் கூட்டணி கட்சிகளுக்குள் எழுந்துள்ளது. இதனால்தான் தேமுதிக, எந்தெந்த தொகுதிகள் என ஒதுக்கிவிட்டு கூட்டணி உடன்பாடு வைத்துக்கொள்ளலாம் என்கிறது. மேலும் அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 6 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆறு தொகுதிளிலும் விருப்ப மனு அளித்தவர்களிடம் பெயருக்கு நேர்காணல் நடத்தியுள்ளனர். விருப்ப மனு அளித்தவர்களுக்கு கட்சியில் வேறு பொறுப்பு அளிக்கப்படுமா? அந்த தொகுதியில் உள்ள வேறு சமுதாயத்தினருக்கு கட்சி என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் அதிமுக ரரக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அதிமுகவைச் சேர்ந்த சிலரிடம் நாம் பேசியபோது, முகூர்த்த நாள் என்பதால் முதல் கட்டமாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராசியான எண் ஐந்து, எடப்பாடி பழனிசாமிக்கு ராசியான எண் ஆறு. ஆகையால்தான் ஐந்தாம் தேதி ஆறு பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மற்றப்படி வேறொன்றும் இல்லை. கூட்டணிக் கட்சிகளிடம் எத்தனை தொகுதி என்று பேசும்போதே எந்தெந்த தொகுதி என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றனர். 

 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். இவர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

 

சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறார். இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் எஸ்.தேன்மொழி போட்டியிடுகிறார். இவர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். 

 

 

சார்ந்த செய்திகள்