திமுக செயல்தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்தும்., ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் 25 ந் தேதி திமுகவினர் தமிழகம் முழுவதும் கடை அடைப்பு செய்ததுடன் சாலை மறியலும் செய்தனர்.
அதே போல திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் வடுவூரில் சாலை மறியல் செய்த திமுகவினரை வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றார். அப்போது ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன் பிறந்த நாள் என்று சொல்லி கேக் வாங்கி வந்தனர்.
காவல் நிலைய மேசையில் வைத்து இன்ஸ் மற்றும் போலிசார், திமுகவினர் புடைசூழ ஜெயச்சந்திரன் கேக் வெட்ட பிறந்த நாள் வாழ்த்தை இன்ஸ் சொல்ல, முதலில் ஜெயச்சந்திரனுக்கு கேக்கை இன்ஸ் ஜெயந்தி ஊட்டினார். அடுத்து ஒ.செ. ஊட்டினார்.
தொடர்ந்து சிறிது நேரத்தில் ஒ. செ. வுக்கு ஒரு பெண் ஏட்டு கேக் ஊட்ட ஒ. செ. ஏட்டு விரலை கடித்து விளையாட ஒரே ஜாலியாகவே போகிறது அந்த வீடியோ பதிவுகள்.
இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவவிடப்பட்ட நிலையில், இது குறித்து மன்னார்குடி டி.எஸ்.பி. அசோகனை விசாரித்து அறிக்கை தர எஸ். பி கேட்டுள்ளாராம்.
இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடுவூரில் அதிமுக கொடிக்கம்பத்தில் தினகரன் அணி ஏற்றிய கொடியை கீழே இறக்கிவிட்டு அதிமுக கொடியை ஏற்றியதும் இன்ஸ் ஜெயந்தி தான். அந்த வீடியோவும் பரபரப்பாக வெளியானது. இப்போது கேக் ஊட்டுவது.. இது போல வேற என்ன வீடியோக்கள் வருமோ என்கின்றனர் சக காக்கிகளே.. முதல் வீடியோவுக்கே நடவடிக்கை எடுத்திருந்தால் மறுபடி இப்படி நடந்திருக்குமா?