கரோனா பாதிப்பால் உள்ளுரில் பலா் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனா். அதேபோல வெளிநாடுகளில் பணியாற்றி வந்த தொழிலாளா்களும் தங்களுடைய வேலை வாய்ப்பை இழந்து தாயகம் திரும்பி உள்ள நிலையில், வருமானம் இல்லாமல் பலருடைய வீடுகளில் பண்டிகை கொண்டாட்டம் என்பது மிகப்பெரிய கேள்விகுறியாகி உள்ளது.
இதனிடையே அதிமுக அரசு தங்களுடைய தொண்டா்களுக்கும், ஆதரவாளா்களுக்கும், ஒரு சிறப்பு பரிசு தொகையுடன் பட்டு வேட்டி, பட்டு சேலை வழங்க திட்டமிட்டு அதனை செயல்படுத்தவும் ஆரம்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பரிந்துரையின்படி தமிழகத்தில் உள்ள மாவட்ட வாரியாக அதிமுக தொண்டா்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதில் மாவட்டத்தில் ஆரம்பித்து, கிளை, வட்டம், அடிப்படை உறுப்பினா் என்று மொத்த பட்டியலுடன் அதிமுகவினா் களத்தில் இறங்கியுள்ளனா்.
பகுதி செயலாளா்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும், வட்டகழக செயலாளா்களுக்கு ரூபாய் ஐந்தாயிரமும், பூத் கமிட்டி உறுப்பினா்களுக்கு ரூபாய் இரண்டாயிரமும், கிளை கழக செயலாளா்களுக்கு ரூபாய் 1000 மற்றும் பட்டு வேட்டி, பட்டு சேலை தீபாவளி பரிசாக கொடுத்து அதிமுக அவா்களை உற்சாகபடுத்தி வருகின்றனா்.
தோ்தல் நேரத்தில் சோர்ந்து போகாமல் பணியாற்ற இந்த தீபாவளியை தேர்தல் தீபாவளியாக மாற்றி தங்களுடைய தொண்டா்களை உற்சாகப்படுத்தி அவா்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது அதிமுக தலைமை கழகம்.