தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் மேற்கு நோக்கி நகர்ந்துவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வரும் 18ஆம் தேதி (இன்று) தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழ்நாடு இடையே கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன், ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாலாற்றில் சுமார் 20,000 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் பாலாற்றின் கரையோரம் உள்ள
1.அரப்பாக்கம்
2.கீழ்மின்னல்
3.பூட்டுத்தாக்கு
4.நந்தியாலம்
5.விசாரம் (சாதிக் பாஷா நகர்)
6.வேப்பூர்
7.காரை
8.பிஞ்சி
9.திருமலைச்சேரி,
10.பூண்டி
11.குடிமல்லூர்
12.சாத்தம்பாக்கம்
13.கட்பேரி
14.திருப்பாற்கடல்
15.ஆற்காடு
16.சக்கரமல்லூர்
17.புதுப்பாடி
ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் யாரும் ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் ஆற்றங்கரையோரம் வேடிக்கை பார்க்கவும் கரைகளைக் கடக்கவும் யாரும் முற்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.