தமிழ் சினிமா வளர்ச்சிக்கு திருட்டு விசிடி என்பது பெரும் தடைக்கல்லாகவே இருந்து வருகிறது. அதுவும் வெளிநாடுகளுக்கு கொடுக்கப்படும் ரைட்ஸ் மூலமே திருட்டு பிரிண்ட் வெளிவருகிறது என்பதை விட தற்போது தமிழக சினிமா தியேட்டர்களிலே புது படம் வெளியான அன்று திருட்டு வீடியோ எடுக்கப்பட்டு வருவது அண்மை காலங்களில் அதிகாரித்து வருகிறது.
அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படம் வெளியான 2 மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இப்படி உடனுக்குடன் எப்படி படம் திரையரங்கில் வீடியோ எடுக்கப்படுகிறது? எந்த திரையரங்கில் எடுக்கப்படுகிறது என்பது எல்லாம் மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது மயிலாடுதுறையில் உள்ள ஒரு திரையரங்கில் ஒரு குப்பைக் கதை திரைப்படம் திருட்டு வீடியோ எடுக்கப்பட்டது ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை எப்படி சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர் என்பதில் தான் பெரும் ரகசியம் அடங்கியுள்ளது.
ஒரு குப்பைக் கதை கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியான அடுத்த நாளே தியேட்டரில் எடுத்த தியேட்டர் பிரிண்ட் வீடியோ தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது. மேலும் படத்தின் திருட்டு விசிடிகள் விற்பனையும் தமிழகம் முழுவதும் கனஜோராக நடைபெற்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பு குழுவினர். இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் முகமது இஸ்லாம் தலைமையில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் க்யூப் நிறுவனம் மூலம் தியேட்டர் பிரிண்ட்டில் வெளியான வீடியோ எந்த தியேட்டரில் எடுக்கப்பட்டது என்பதை ஆராய்ந்து, அந்த திரைப்படம் அந்த திரையரங்கில் தான் திருடப்பட்டது என்கிற ஆதாரத்துடன் துள்ளியமாக கண்டறியப்பட்டு கடலூர் வீடியோ பைரசி போலீசிடம் புகார் கொடுக்கப்பட்டது.
தயாரிப்பாளர் கொடுத்த புகார் ஆதாரத்தின் அடிப்படையில் மயிலாடுதுறையில் உள்ள கோமதி தியேட்டரில் தீடீர் சோதனை நடத்தினர். இந்த தியேட்டரை திருச்சி தில்லைநகரை சேர்ந்த சேது என்பவர் லீசுக்கு எடுத்து அதை திருச்சி ஜீபிடர் பிலீம் நிறுவனத்தினர் நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது.
இந்த தியேட்டரில் ஒரு குப்பைக் கதை திரைப்படம் கடந்த மே மாதம் 25ம் தேதி ஒரு நாள் மட்டுமே ஓடியுள்ளது. இந்த திருட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டதும் கடந்த 25ம் தேதி மதியம் 2.10 மணியிலிருந்து 4.10 வரை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் தியேட்டரின் மேலாளர் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுந்தர், ஆப்பரேட்டர் மயிலாடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தியேட்டரை லீசுக்கு எடுத்த தில்லைநகர் சேது என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் சிக்கியது எப்படி?
இப்போது வெளியாகும் திரைப்படங்களில் பாரன்சிக் வாட்டர் மார்க் என்கிற சாப்ட்வேர் மூலம் ஒவ்வொரு தியேட்டருக்கும் தனித்தனி பார்கோர்டு உள்ள ரகசிய எண் வழங்கப்படும். இணையதளத்தில் ஒரு குப்பைக் கதை படம் வெளியானவுடன் அந்த படத்தை எடுத்து பாரன்சிக் எண்ணை வைத்து ஆய்வு செய்த போது அந்த பிரிண்ட் மயிலாதுறையில் உள்ள கோமதி தியேட்டரில் எடுக்கப்பட்டது என்பது கண்பிடிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையிலே இவர்கள் கையும் களவுமாக சிக்கயுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் தமிழ்ராக்கர்ஸ் கும்பலை சேர்ந்தவர்களா? அல்லது இவர்களுக்கு தமிழ்ராக்கர்ஸ் கும்பலுடன் தொடர்புகள் உள்ளதா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவர்களை வைத்து எப்படியாவது தமிழ்ராக்கர்ஸ் கும்பல் குறித்த தகவலையாவது அறிந்துவிடாலம் என காவல்துறையும், திரையுலகமும நினைக்கிறது.