
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தைச் சேர்ந்த பகுதிகளில் வரும் 25ஆம் தேதி வரை 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடத்த, மிதிவண்டி, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கத்தி, கம்பு, கற்கள், அரசியல், சாதி கொடிக் கம்புகள் அபாயகரமான ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.