சமீபத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ரஜினியின் பேட்டி ஏற்படுத்திய பரபரப்பு, அவரின் அரசியல் பார்வை, காலா படம் ஏற்படுத்திய விவாதங்கள், ரஜினியை ஆதரிப்பதன் காரணம்.. இவை குறித்து தமிழருவி மணியன் கூறியது...
"நான் இந்த இரண்டு செய்திகளுக்காகத்தான் 50 ஆண்டு காலமாக அரசியலில் இருக்கிறேன். ஒன்று சிஸ்டம் கெட்டுவிட்டது. இந்த சிஸ்டம் கெட்டவிட்டது என்று சொன்னால், அவர் இந்த திமுக, அதிமுக ஆட்சியை அவர் அகற்ற வேண்டும் என்று நினைக்கிறார். இரண்டாவது அந்த இடத்திலேயே அவர் அறிவிக்கிறார், ‘என்னை வைத்துகொண்டு பணம் சாம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போதே என்னைவிட்டு விலகிவிட வேண்டும்’ என்று. அரசியல் வைத்து பணம் சாம்பாதிக்க கூடாது என்பதுதான் என்னுடைய முதல் கோரிக்கை. அரசியல் என்பது நீங்கள் எப்போது பொது வாழ்க்கைக்கு வருகிறீர்களோ அப்போதே உங்களிடம் இருப்பதை இழப்பதற்கு முன்வர வேண்டும். அரசியலுக்கு வந்து இருக்கக்கூடியதை கொள்ளையடிப்பதற்காக வரக்கூடாது. ஆனால் இந்த இரண்டு திராவிட கட்சிகளின் மீது என்ன கோபம் என்றால், இதில் இருக்கக்கூடியவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் பஞ்சர்களாய், சமானியர்களாய் இருந்தவர்கள். அது ஒன்றும் குற்றம் இல்லை. ஏழையாக இருப்பது தவறும் அல்ல. ஆனால் அப்படி இருந்தவர்கள் இன்றைக்கு கோடி, கோடியாக வைத்து கொண்டு வசதியான வாழ்க்கையை அனுபவித்து கொண்டு இருக்கிறார்களே. எப்படி இவர்களுக்கு இந்த வாழ்வு வந்து சேர்ந்தது.
இவர்கள் இருந்த ஆட்சி, அந்த ஆட்சி தந்த அதிகாரம், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் செய்த தவறு, அந்த தவறுகள் மூலமாக வந்த வசதி வாய்ப்புகள்தானே. இது அகற்றப்பட வேண்டும். எனவே நான் பதவிக்காகவோ, பணத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ யார் பின்னாடியும் போய் நிற்கவில்லை. என் பொதுவாழ்வு என்பது தூய்மையாக இருக்க வேண்டும், அதை வைத்து பணம் சாம்பாதிக்க கூடாது. அதைதான் அந்த மனிதன் சொல்கிறார். 50 ஆண்டு காலமாக சிஸ்டம் கெட்டுவிட்டது, நான் நினைப்பதைதான் அந்த மனிதன் சொல்கிறார். ஒரு மையப்புள்ளியில் இருவருடைய சிந்தனைகளும் இணைந்ததன் காரணமாகதான் நாங்கள் சேர்ந்தோம். இன்னும் ஒன்று சொல்கிறேன். நானாக ரஜினிகாந்தை சென்று பார்க்கவில்லை. இந்த உலகத்தில் எதையும் தேடி சென்று அதில் ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து வாழ்பவன் இல்லை நான். ரஜினிகாந்த் என்னை சந்திக்க வேண்டுமென்று நினைத்து, ஒரு நம்பரை கொடுத்தார். நான் அவரை சந்தித்து ஒரு பயனும் இல்லை என்று கருதிஅதை மறுத்துவிட்டேன்.
அதற்கு அடுத்தநாள் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் சொன்னார், அய்யா உங்கள் பேச்சை எல்லாம் கேட்டு இருக்கிறேன். நான் அரசியல் கட்சி தொடங்கத்தான் போகிறேன், நான் உங்களை சந்திக்க வேண்டும். நீங்கள் வருகிறீர்களா அல்லது, நான் வரட்டுமா என்று கேட்டார். இல்லை நானே வருகிறேன் என்று சொன்னேன். நான், அவர் ஒரு நடிகர் இவரை சந்திப்பதால் எந்த பெரிய மாற்றங்களும் ஏற்பட்டுவிடாது என்ற நம்பிக்கையில்தான் போனேன். 90 நிமிடங்கள் அவரிடம் பேசியபோது, அவரின் தூய்மையான எண்ணங்கள், அவர் இந்த தமிழ்நாட்டுக்கு என்னனென்ன செய்ய வேண்டும் என்ற கனவுகள். என்னோடு ஒத்திருந்தன. அதன்பிறகு நாங்கள் பலமுறை சந்தித்து பேசினோம்.