திருவான்மியூர்! கெட்ட காரியங்களுக்கு ஒரு காலத்தில் வேடந்தாங்கலாக இருந்த ஏரியா! 1980களிலிருந்து தப்புச்செயல்களுக்கு அதுதான் தலைநகரம். போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் போட்டு தங்கள் நீள அகலமான கவலையைப் பெருமூச்சுடன் தெரிவிக்க அன்றைய டி.எஸ்.பி.க்கு செம கண்டனக்கணைகள்!
ரௌடிகள் அட்டகாசம், கள்ளச்சாராய கால்வாய், எல்லாவற்றுக்கும் மேலாக விபச்சாரம்! காவல்துறையின் பெயர் கணிசமாக நாறிப்போனது. போலீசின் "மாமூல்' வாங்கும் வாழ்க்கை செழிப்பாக நடந்ததே தவிர, ஜனங்களின் "மாமூல்' வாழ்க்கைக்கு பயங்கர பாதிப்புகள்!
அனுமந்தராவ், ஹரிநாயுடு, ரவணம்மா, அனுசூயா இந்த நான்கு பேர்களும் ஆந்திரா பேர்வழிகள். தேசிய ஒருமைப்பாட்டுக்கு முன்னுதாரணமாக கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா என பல ஊர் சங்கதிகளை ஊர்பேர் சொல்லி போணி செய்தனர். அவர்கள் செய்தது லாட்டரி பிசினஸ் இல்லை. பலான பெண்களை வைத்துக்கொண்டு நடத்திய விபச்சாரம்.
மேலே குறிப்பிட்ட நான்கு பேரும் மாமாக்கள் மட்டுமில்லை. தாதாக்களும்கூட. போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத ஜல்லிகட்டுக்காளைகள்! டி.எஸ்.பி.யால் அடக்கவும் முடியவில்லை. பிடிக்கவும் முடியவில்லை. பிடிக்க வருவதை முதலிலேயே மோப்பம் பிடித்து (கீழ்மட்டத்துக்கு எலும்புத்துண்டுகள் வீசிதான்) தேடிவரும் போதெல்லாம் அகப்படாமல் எப்படியோ தப்பித்துக் கொண்டிருந்தார்கள். நான்குபேரில் யாராவது ஒருத்தர் அகப்பட்டுக்கொண்டாலும், மற்ற மூன்று பேரும் "தொழில்வளம்' குன்றாமல் ஒலிம்பிக் ஜோதி மாதிரி அணைந்துபோகாமல் அடைகாத்தனர். அப்படியொரு "தொழில் பக்தி”!
தன் கீழ்மட்ட போலீசை வைத்துக்கொண்டு இந்த நான்கு மாமாக்களையும் அடக்கிவிட முடியாது என்பது டி.எஸ்.பி.க்குத் தெளிவாக புரிந்துபோயிற்று. ஆழமாக யோசித்தார்.
"டி.எஸ்.பி. தங்கையா வரச்சொன்னார்'' - சுகுமார் வந்து சொல்ல நெற்றியில் வியந்தேன்.
"டி.எஸ்.பி.யா...? என்னைக் கூப்பிட்டாரா? எதுக்கு?'' என்றபடி பார்க்கப்போனேன்.
காதோரம் மெளிதான நரை! தோள் பட்டையில் நட்சத்திரம்... வீங்கின வயிறு... மிடுக் தோற்றம் கொடுத்தார் டி.எஸ்.பி. மரியாதையை ஒற்றைப் புன்னகையில் ஏற்றுக்கொண்டு எதிர் நாற்காலியில் அமரச்சொன்னார். நாற்காலி நுனியில் பட்டும் படாமலும் பரவுகிறேன். முகத்தில் கணிசமான மரியாதை...
"சங்கர்...! நாலு தெலுங்குக்கார பயலுக பயங்கர தலைவலியா இருக்காங்க...! நாலு பேரையும் ஏரியாவை விட்டு துரத்தணும்... இந்த ஹெல்ப்பை நீ செய்வியா?''
அடர்த்தியாகச் சிரித்தேன்.
"என்ன சார்... ஹெல்ப் கில்ப்புன்னுகிட்டு... செய்யிடான்னா செய்து கொடுத்துட்டுப்போறேன்.... யாரு சார் அவனுக... என்ன பண்றாங்க?''
"அம்பது அறுபது பொம்பிளைகளை வச்சுக்கிட்டு பிராத்தல் பண்றானுக... அனுமந்தராவ், ஹரிநாயுடு, ரவணம்மா, அனுசூயான்னு நாலுபேரு. நம்ப சரகத்திலே இருக்கிற போலீஸாலே அவங்களைக் காலி செய்யமுடியாது. நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்குத் தெரியாது. நாலு பேரும் இடத்தைக் காலி செய்யணும்... புரியுதா...?''
ரொம்பவும் குஷியாகிப்போனது. ரொம்ப நாளாக "இதை யாராவது ஒழிக்க மாட்டாங்களா...?” என்று ஏங்கிக்கொண்டிருந்த சங்கதி, ஒழியப்போகிறது... அதுவும் ஒழிக்கப் போகிற பொறுப்பும் இந்த சங்கருக்கே... எத்தனை சந்தோஷமான செய்தி! சட்டென்று வியூகம் அமைத்தேன்.... தளபதிகள் இன்னொரு போருக்குத் தயாரில் இருந்தனர். விதம்விதமான தாக்குதல்கள்... தினுசு தினுசான போர் முறைகள். போலீஸையே மிஞ்சும் செயல்பாடுகள். தேடிப்போனதும் ஆள் அகப்படவில்லையென்றால் போலீஸ் திரும்பிவிடும். அல்லது அந்த நபருக்கு பொறிவைத்துக் காத்திருக்கும். நம்மளோட ஸ்டைலே வேறு!
ஆள் இல்லையென்றதும் கூடுதல் தெம்பு சேர்ந்துகொள்ள வீட்டுக்குள் தர்பாராக நுழைந்து இடத்தை ரணகளப்படுத்தினேன். கலர் டி.வி. சுக்கு நூறாக உடைபட்டது. கட்டில்கள், டேப் ரிக்கார்டு, ஃபிரிஜ் எல்லாமும் துவம்சம். வீட்டிலிருந்த பெண்மணிகளை வேனில் ஏற்றிச்சென்று சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு! "வேலைசெய்து பிழைங்கடி! ஒருசாண் வயித்துக்காக எண்சாண் உடம்பை விக்கறீங்களே... கேவலமா தெரியலை? இன்னொரு தடவை நான் இங்கே வரப்போ உங்களைப்பார்த்தா வெட்டி கொன்னுருவேன்!''
ஒரு மாசம் தொடர்ந்து கலாட்டா. பலமான போலீஸ் சப்போர்ட் வேறு... ஆந்திர ஆசாமிகளுக்கு ஓடுவது தவிர வழியில்லாது போயிற்று. துண்டைக்காணோம் துணியைக் காணோம் என மறைந்துபோனார்கள். ஒருமட்டிலும் திருவான்மியூரிலிருந்து விபச்சாரத் தொழிலைச் சுத்தமா துடைத்தெறிந்தாகிவிட்டது. அப்பாடா!
ஒலிம்பிக் பதக்கம் வென்ற திருப்தி. எத்தனையோ யுத்தமும் ரத்தமும் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்த கலாட்டாவிலும் கிடைக்காத பரிபூரண திருப்தி இதில் கிடைத்தது. ஏனென்றால், ஒரு அவலத்தை ஏரியாவைவிட்டு துரத்தியாயிற்று! ஒரு சாக்கடையை அப்புறப்படுத்தியாகிவிட்டது! ரகளை மூலமாக முதன்முதலாக ஒரு சமூக சேவையைச் சாதித்திருப்பதாகவே தோன்றியது.
அதே போல் ஏரியாவாசிகளில் பலரும் நேர்முகமாய் பாராட்டினார்கள். ஊர் பெரியவர்கள் மனமார வாழ்த்துச் சொன்னார்கள். "நல்லகாரியம் பண்ணியிருக்கீங்க சங்கர்! நீங்க நல்லா இருக்கணும்''. மனசு கொள்ளாத சந்தோஷம். பெருமிதமும் கர்வமும் ரெட்டைத் தண்டவாளமாக நெஞ்சு நெடுக ஓட டி.எஸ்.பி.யைப் பார்க்கச் சென்றேன். அவர் ஆர்வத்துடன் என் விரல்களை வாங்கிக்கைக்குள் பொத்திக்கொண்டு விடாமல் கைகுலுக்கினார். 'பரம்வீர் சக்ரா' விருது கிடைத்த சந்தோஷம் பொங்கிற்று மனசுக்குள்.
அமரச் சொன்ன தங்கய்யா... "சங்கர்... இன்னொரு உதவிகூட நீ செய்யணும்'' என்றார். "சொல்லுங்க சார்...'' என்றேன் ஆவலாக...
முந்தைய பகுதி:
நான் திருட்டுத்தனமா பாலை கறந்தேன், அவன் கழுத்தை அறுத்து ரத்தத்தைக் கறந்தான்! ஆட்டோ சங்கர் #7
அடுத்த பகுதி:
அதிமுகவின் பிளவு... ஆட்டோசங்கருக்கு லாபம்! - ஆட்டோசங்கர் #8