சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் அரசுக்கும் ஆளுநருக்குமான மோதல், நடப்பு அரசியல் பிரச்சனைகள் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " தமிழகத்தில் ஆளுநர் போக்கு பற்றி என்னிடம் கேட்கிறீர்கள், ஒரு விரலில் ஐந்து விரலுக்கு அதிகமாக ஒரு விரல் இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் ஆளுநரின் செயல்பாடு இருக்கிறது. அதனால் அந்த விரலை வெட்டி விட வேண்டும், அதைப்போல ஆளுநர் நமக்குத் தேவையில்லாத ஒருவர், எட்டு கோடி மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசை இயங்க விடாமல் இடையூறு செய்கிறார் என்றால் அவரை என்ன சொல்ல முடியும்.
ஆன்லைன் மசோதாவில் இவர் எதற்குக் கையெழுத்துப் போடாமல் இருந்தார். ஏனென்றால் இதற்குப் பின்னணியில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். எல்லாம் பாஜக தானே இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு பின்பு இருந்து செயல்படுகிறது. மார்டீன் அவர்கள் பாஜகவுக்கு ஐம்பது ஐம்பது கோடியாகப் பணம் கொடுத்தாரா இல்லையா? இவர்கள் பணம் பெற்றுக்கொண்டு இருந்தால் அப்புறம் எப்படி ஆன்லைன் ரம்மி விளையாடுவதைத் தடுப்பார்கள். எல்லாவற்றிலும் அரசியல் செய்வார்கள், இதிலும் அவர்களால் முடிந்த அளவுக்கு ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். ஆனால் இதில் இருக்கும் அரசியல் பின்புலம், எதனால் சந்தேகம் கேட்கிறார்கள், திருப்பி அனுப்புகிறார்கள் என அனைத்தும் தமிழக மக்களுக்குத் தெரியும். நீண்ட காலம் மக்களை ஒன்றும் தெரியாதவர்களாக நீங்கள் வைத்திருக்க முடியாது.
தமிழ்நாட்டில் பலரும் இருக்க இடமில்லாமல் கிடைத்த இடத்தில் இருக்கிறார்கள், அதுவும் இல்லாதவர்கள் ரோட்டில் தவித்து வருகிறார்கள். ஆனால் இவருக்கு 600 ஏக்கர் பரப்பளவில் பங்களா தேவைப்படுகிறது. மக்கள் அவதிப்பட்டாலும் தான் சந்தோஷமாக இருந்தால் போதுமென்ற மனநிலையில் இருப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும். மக்களைப் பற்றி சிறிது கவலை இருந்தாலும் கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மக்களைப் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாதவர்களைப் பற்றி நாம் என்ன சொல்ல முடியும். நம்முடைய விதி இவர்கள் கீழெல்லாம் நாம் வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது.
இதையெல்லாம் நாம் நம்முடைய தலைவிதி என்று நினைத்து கடந்து போய்விட வேண்டும். முன்பெல்லாம் அதாவது கலைஞர்,ஜெயலலிதா, எம்ஜிஆர் இருக்கின்ற போதெல்லாம் ஆளுநர்கள் இந்த மாதிரி எதாவது இடையூறு கொடுத்தார்களா? அவர்கள் அவர்களுடைய வேலை என்னவோ அதை மட்டுமே பார்த்தார்கள். ஏதாவது பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெற்றால் அதற்குச் சென்று பட்டம் கொடுக்கும் வேலையை மட்டுமே பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது அத்துமீறி வருகிறார்கள். இது தவறான ஒன்று, ஆளுநர் அவர்களுக்கு உள்ள வேலையை மட்டும் பார்த்தால் சிறப்பாக இருக்கும்" என்றார்.