அரசு திட்டங்களான தொகுப்பு வீடு, பசுமை வீடுகள் கட்ட அரசு அனுமதி கொடுக்கிறது. ஆனால் அந்த வீடுகளை கட்ட மணல் கொடுக்க மறுக்கிறது. ஆறுகளின் ஓரங்களில் உள்ள மக்கள் கூட தங்கள் தேவைக்கு ஒரு பிடி மண் எடுக்க அனுமதியில்லை, அப்படி எடுத்தாலும், போலீஸ் வருவாய்துறை ஓடிவந்து பிடித்துக்கொள்கிறது. அபராதம், தண்டனை விதிக்கிறது.
ஆனால் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியில் மணிமுத்தாற்றில் மணல் கொள்ளை நடப்பதை வனத்துறை, வருவாய்துறை - காவல்துறை என எந்த துறையும் கண்டுகொள்ளவில்லை. ஏன்? எல்லாம் மாமூல் மழைதான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
கூத்தக்குடி கோமகி ஆற்றங்கரையோரம் உள்ளது வனத்துறைகாடு. இந்த பகுதி ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் மக்கள் நடமாட்டம் குறைவு. இங்கே தனி நபர் பட்டாவில் கொஞ்சமாக செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக போக்குகாட்டிவிட்டு அதனை சுற்றியுள்ள வனத்துறை மற்றும் அரசு புறம்போக்கு பகுதிகளில் எல்லாம் நெய்வேலி சுரங்கம் போல மண்ணை தோண்டி இரவு முழுவதும் விழுப்புரம், சேலம், பெரம்பலூர், கடலூர் என பல மாவட்டங்களுக்கு கடத்தப்படுகிறது.
இந்த பகுதிக்குள் நடக்கும் மண் - மணல் கொள்ளை பற்றி கேள்விப்பட்ட நாமும் டூவீலரில் கூத்தாடி அண்ணாநகர் பகுதியில் மேற்கு நோக்கி மண் சாலையில் பயணித்தோம் 50 மீட்டர் தூரத்திற்கு இரண்டு பேர் என யாரும் உள்ளே செல்லவிடமால் தடுத்துமிரட்டி அனுப்பினார்கள். பிறகு சில நாட்கள் கழித்து காணாமல்போன மாட்டை தேடும் போகும் விவசாயி போல கையில் கயிற்றோடு தலையில் தலைப்பாகையோடும் அப்பகுதிக்கு சென்று பார்த்தோம்.
அங்கு நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. வனத்துறையின் காட்டில் ஆடு, மாடுகள் மேய்க்க கூடாது. காய்ந்த விறகுகளை பொறுக்கக் கூடாது. மீறினால் வழக்குப்போட்டு அபராதம் வசூலிப்பார்கள். இந்த காட்டில் மான், மயில், காட்டுபன்றிகள் என வனவிலங்குகள் ஏராளம் வாழ்கின்றன. அப்படிப்பட்ட வனத்துறை காட்டில் சுரங்கம்போல பல அடி அழத்துக்கு மண்ணை தோண்டி கடத்திய காட்சி நம்மை மிரள வைத்தது. அங்கு நடமாடிய விவசாயி ஒருவரை கேட்டோம். இது எப்படி? என்று அக்கம், பக்கம் பார்த்துவிட்டு தம்பி பகல்ல இந்த பக்கம் யாருமே வரமுடியாது.
தடிதடியாட்கள் விரட்டுவார்கள். நீங்க எப்படி வந்தீங்க... சீக்கிரம் போங்க... அவங்க கண்ணில மாட்டினால் அவ்வளவு தான் என்றவர், பல அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துவிட்டு இரவு டிராக்டர், டிப்பர் லாரிகள் மூலம் மண், மணல் கடத்தப்படுகிறது. வனத்துறை ஆட்கள் யாருமே இங்கே எட்டிக்கூட பார்ப்பதில்லை. மணல் மாபியாக்கள் ராஜ்யம் இங்கே கொடிகட்டி பரக்கிறது என்றார் அந்த பெரியவர். நாமும் மாடு தேடிபோன மாதிரியே மீண்டும் போன வழியில் வராமல் காட்டை சுற்றி வேறு வழியில் வெளியேறினோம்.
மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி மணல் கொள்ளையர்கள் செங்கல் சூளை முதலாளிகள், இரவுக் கொள்ளையடிக்கிறார்கள். எந்த பயமும் இல்லாமல் சாதாரண மக்கள் ஆற்றங்கரையோரம் அரிசியை எடுத்துபோனாலும் மணல் கடத்தலா என்று சோதனை போடுகிறார்கள்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி வட்டாச்சியர் சுப்பிராயலுவிடம் கேட்டோம். ''அப்படியா? இது பற்றி என் கவனத்திற்கு வரவே இல்லையே... உடனடியாக விசாரிக்கிறேன்'' என்றார் இரண்டே வரியில் தமது பதிலை.