கடந்த மே 20 ஆம் தேதி நண்பகல் நேரத்தில் பாளை புறநகர் கே.டி.சி.நகரிலுள்ள ரவுண்டானா பகுதியிலிருக்கும் ஒரு ஹோட்டலில் சாப்பிடுவதற்காக இளவயது ஆணும், பெண்ணும் காரில் வந்திருக்கின்றனர். காரிலிருந்து இறங்கிய அந்த இளம் பெண் ஹோட்டலுக்குள் சென்றபோது, வந்த காரை பார்க் செய்வதற்காக அந்த வாலிபர் காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் செல்வதற்காக காரை விட்டு இறங்கியிருக்கிறார். அந்த நேரம் பின்தொடர்ந்து காரில் வந்த கும்பல் அரிவாளால் அவரை வெட்ட முயன்ற போது சுதாரித்துக்கொண்ட அந்த வாலிபர் தப்பியோடியிருக்கிறார். பரபரப்பான சாலையில் நடமாடும் ஆட்களுக்கிடையே தப்பியோடிய வாலிபரை மர்ம கும்பல் தொடர்ந்து விரட்டிச் சென்றிருக்கிறது.
உயிர் தப்பிக்கும் பொருட்டு ஓட்டலுக்குள் நுழைய முயன்ற வாலிபரை மடக்கிச் சுற்றி வளைத்த ஆறு பேர் கொண்ட அந்த கும்பல் அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியிருக்கிறது. ரத்தச் வெள்ளத்தில் கதறிய அந்த வாலிபர் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்துள்ளது. பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் அந்த ஏரியாவே பதற்றத்திலும் திகிலிலுமாக இருக்க ஓட்டலின் உள்ளே இருந்து ஓடிவந்த அந்த இளம் பெண் வாலிபரின் உடலைக் கண்டு கதறியிருக்கிறார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாளைங்கோட்டை கிழக்கு மண்டல துணை கமிஷ்னர் ஆதர்ஷ் பச்சோரா, இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் விசாரணையை வேகப்படுத்தியதில், கொல்லப்பட்டவர் பாளையருகே மூன்றடைப்பு பக்கமுள்ள வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தீபக்ராஜன். உடன் வந்தவர் அவரது காதலியான அதே ஊரைச் சேர்ந்த திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவருக்கும் ஜூன் 03 அன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் அதற்காக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பதற்காக கே.டி.சி.நகர் ஹோட்டலுக்கு காதலியுடன் தீபக்ராஜன் வந்த போதுதான் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது.
இதற்காக தீபக்ராஜனை பல நாட்களாக தொடர்ந்து உலவு பார்த்திருக்கிறது எதிர் தரப்பு கும்பல் ஒன்று. தீபக் ராஜன் ஒன்றும் சளைத்தவரில்லையாம். இவர் மீதும் அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் மூன்றடைப்பு காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளதால் காவல் நிலையம் அவரை சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ரவுடி பேனலில் வைத்திருக்கிறது.
ஆரம்ப காலங்களில் கொத்தனார் வேலை செய்து வந்த தீபக்ராஜனின் பெயர் தீபக்பாண்டியன் என்றிருந்திருக்கிறது என்று குறிப்பிடுகிற தனிப்பிடையின் அந்த அதிகாரி, “பசுபதி பாண்டியனின் ஆதரவாளராக மாறிய போது தீபக்ராஜன் என்று மாற்றிக் கொண்டார். பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்களில் குறிப்பிடப்படுகிற டீமான தன்னுடைய வாகைக்குளம் கிராமத்தின் முத்து மனோவின் டீமில் இணைந்த தீபக்ராஜன் அவரைப் போலவே சமுதாய நலன் பொருட்டு முன் நிற்பவர் என தன் ரூட்டை மாற்றிக் கொண்டார்.
கடந்த 2021 இன் போது நெல்லை மாவட்டத்தின் பணகுடி நகர பள்ளி ஒன்றில் வெவேறு சமூகத்தை சார்ந்த ஒரு மாணவனும், மாணவியும் காதலித்து வந்த தகவல் வெளியாகியது. அவர்களின் காதல் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் அந்த மாணவியின் தரப்பாக களமிறங்கிய முத்துமனோ, தீபக் ராஜன் குரூப் அந்த மாணவனிடம் அவனுக்கு ஆதரவாக நைசாகப் பேசி அவனை களக்காடு பக்கம் உள்ள சிங்கிகுளம் மலைக்காட்டுக்கு அந்த மாணவனை வரவழைத்தவர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்.
முத்து மனோ டீமை வளைத்த களக்காடு போலீசார் அவர்களை ஸ்ரீவைகுண்டம் சப்-ஜெயிலில் அடைத்தனர். அங்கே முத்து மனோவின் எதிர்க் கோஷ்டியினர் இருந்ததால் அவர்களால் முத்து மனோவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதால் முத்து மனோவையும் உடன் அவரது சகா இருவரையும் பாளை மத்திய சிறையிலடைத்திருக்கிறார்கள். செல்லில் அவரை அடைப்பதற்கு முன்பு அங்குள்ள ஹாலின் சுவரின் பக்கம் முத்து மனோவை இருக்க வைத்த சிறை அதிகாரிகள், சில ஃபார்மாலிட்டிகளை முடித்துவிட்டு வருவதற்குள் ஜெயிலில் வளாகத்தில் முத்து மனோவைப் பார்த்துவிட்ட அவரது எதிர்தரப்பினர் முத்து மனோவை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் முத்து மனோ ஏரியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது சம்பவம் தொடர்பாக சிறையிலிருந்த ராக்கெட் ராஜாவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முத்துமனோ கொலையான சம்பவத்தால் பழிக்குப்பழி ஆத்திரத்திலிருக்கிறாராம் தீபக்ராஜன். அதே வேளையில் எதிர் கோஷ்டியினரும் தீபக்கின் மீது கண்ணாய் இருந்திருக்கிறார்கள். இதற்கிடையே கடந்த வருடம் தாழையூத்து நகரில் கட்டிட வேலை நடந்த போது அந்த வேலையிலிருந்த தீபக் ராஜனுக்கும் கட்டிட காண்ட்ராக்டருக்குமிடையே ஏற்பட்ட கூலித் தகராறில் காண்ட்ராக்டர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது தொடர்பாக தீபக்ராஜன் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் கொலை வழக்கும் பதிவாகியிருக்கிறது. இதுபோன்று கோஷ்டியாகச் செயல்பட்ட தீபக் ராஜன் மீது விருதுநகர், தாழையூத்து, தூத்துக்குடி, ஆத்தூர், முறப்பநாடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கேங்ஸ்டர் அடிதடி, கொலை முயற்சி, கொலை வழக்கு என்று 23 வழக்குகள் பதிவாகியுள்ளன” என்கிறார் அந்த நுண்ணறிவு பிரிவு அதிகாரி.
இதற்கிடையே கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வாகைகுளம் கிராமத்தில் முத்துமனோவின் சமாதியில் பூஜைகள் நடத்தப்பட்டு மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. அது சமயம் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் முத்துமனோ கொலையில் கவனக்குறைவாக செயல்பட்ட ஜெயில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சிடப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து சில நாட்களில் ஒரு விவகாரம் காரணமாக தீபக்ராஜன் கோஷ்டிக்கும் எதிர் கோஷ்டிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கடுமையாக முட்டிக் கொண்ட சம்பவமும் நிகழ்ந்தேறியிருக்கிறதாம். அதோடு இவர்களில் ஒரு கோஷ்டியினர் ரூரல் காவல் அதிகாரி ஒருவரை மொபைல் காலில் தொடர்பு கொண்டவர்கள், திருநெல்வேலி ஏரியாவுலேயே நாங்கதான் ரவுடி கேங்க் என்ற தொனியில் பேசிவிட்டு தொடர்பை துண்டித்திருக்கிறார்களாம். இந்த தகவலையும் தனிப்படையினர் வாசனை பிடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
தீபக் ராஜன் படுகொலைச் சம்பவம் நாங்குநேரி, வாகைக்குளம் ஏரியாவில் கொந்தளிப்பைக் கிளப்பிய வேளையில், சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்கள் நடத்திய சாலை மறியலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதே வேளையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷ்னர் மூர்த்தி, சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைக்கு அமைத்த இரண்டு தனிப்படையினர் குற்றவாளிகளை நெருங்கியுள்ளனராம். கேங்ஸ்டர் வாரால் தீபக்ராஜன் படுகொலையான சம்பவத்தால் தென்மாவட்டங்கள் பதற்றத்திலும் திகிலிலும் இருக்கின்றது.