"பர்த்டே கொண்டாட்டங்களில் ஆரம்பித்து கெட்டுகெதர் பார்ட்டிவரை வீக்கெண்ட்டுகளில் கொண்டாடப்படும் எந்த பார்ட்டியாக இருந்தாலும் இளம்பெண்கள்தான் டார்கெட்'' என்று ஷாக் கொடுக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் பேச்சுகொடுத்தால் இளம்பெண்களுக்கு போதையேற்றி பாலியல் ப்ளாக் மெயில் செய்யும் விவகாரங்கள் நம் அடிவயிற்றில் அணுகுண்டை வீசுகின்றன.
"ஃபேஷன்ங்குறதே அடுத்தடுத்த கட்டத்துக்கு மாறிக்கிட்டே இருக்கிறதுதானே? அப்படின்னா, போதையில மட்டும் சரக்கு, கஞ்சான்னு இருந்தா அது ஃபேஷன் இல்லைதானே?'' எஸ்... சரக்கு, கஞ்சாவைத் தாண்டி எல்.எஸ்.டி., கோகைன், கேட்டியம், ஸ்னேக் பைட் உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருட்கள் இந்தமாதிரி வீக்கெண்ட் பார்ட்டிகளில் ரொம்ப சர்வ சாதாரணமா புழங்க ஆரம்பிச்சுடுச்சு. கடல் கடந்து வரும் சர்வதேச போதைக் கும்பல்களுக்கு இந்தமாதிரி வீக்கெண்ட் பார்ட்டிகளில் ஹைலெவல் போதைப் பொருட்களை புழக்கத்துல விடுறது ரொம்ப ஈஸியாவும் இருக்கு. ஏன்னா, இந்தமாதிரி பார்ட்டிகளுக்கு வர்ற பசங்க, பொண்ணுங்க பணத்தைப் பற்றி கொஞ்சம்கூட கேர் பண்ணிக்க மாட்டாங்க.
அதுவும், சமீபத்தில் கைப்பற்றப்பட்ட "எல்.எஸ்.டி. ஸ்டாம்' போதைப்பொருள் ரொம்பவே ஆபத்தானது என்று ஷாக் கொடுக்கிறார்கள் போதை தடுப்புப்பிரிவு போலீஸார். இப்படிப்பட்ட பார்ட்டிகளை ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்கிற பெயரில் அரேஞ்ச் பண்றாங்க. இந்த மாதிரி ஹைலெவல் போதைப் பொருட்களை விற்பதற்கு கோவாதான் தற்போது கேட் வேயாக உள்ளது. சமீபத்தில், கோவாவுக்கு சென்று பார்ட்டியில கலந்துக்கிற இளசுகளை இந்த போதை நெட் ஒர்க் பயன்படுத்தி, தமிழ்நாட்டிலும் எண்ட்ரி ஆகுது. அதுவும், ஜோடியா வந்தா ஃப்ரீன்னு இளம்பெண்களை உள்ள வரவைக்கிறாங்க. அப்படி உள்ள வரும் பெண்கள்தான் போதைக் கும்பலிடம் சிக்கி தங்களோட வாழ்க்கையை வீணடிச்சுக்கிறாங்க.
அப்படித்தான் கடந்த 5 -ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் சென்னை- பாண்டிச்சேரி ஈ.சி.ஆர். சாலையில் பட்டிப்புலத்தை அடுத்த சாலாங்குப்பம் ஒடூர் ரிசார்ட்டில் "ரவுடிகள் பார்ட்டி' நடக்குதுன்னு டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு இரகசிய தகவல் வந்தது. காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி விடுமுறையில் இருப்பதால் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. பொன்னிக்கு தகவலை பாஸ் செய்தார்.
ரோந்து பணியிலிருந்த பொன்னி திருவள்ளூரிலிருந்து ஒரு ஸ்பெஷல் டீம் காஞ்சிபுரத்திலிருந்து ஒரு ஸ்பெஷல் டீம் என இரண்டு டீமை அனுப்பினார். 100-க்கு மேற்பட்ட போலீஸார் ஈ.சி.ஆர். கோவளத்தில் முகாமிட்டாங்க. சுமார் இரவு 12:30 மணியளவில் அதிரடியாக அந்த ரிசார்ட்டின் உள்ளே நுழைந்தபோது ரவுடிகள் யாரும் இல்லை. 150-க்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஓப்பன் கிரவுண்டுல லேசர் லைட் எஃபெக்ட் விட்டு விட்டு எரிய... காதைப் பிளக்கும் சத்தத்துடன் டி.ஜே. இசையில் போதையில் தள்ளாடிக் கொண்டிருந்ததை பார்த்துச் சுற்றி வளைத்தனர்.
அப்போதுதான், இளசுகளை வெச்சு டிக்கெட் ஷோங்குற பேர்ல போதையாட்டம் நடத்திக்கிட்டிருந்ததை கண்டுபுடிச்சாங்க. பிறகு, அவுங்க எல்லோரையும் கைது செய்து வேன்ல ஏற்றி மாமல்லபுரத் திலுள்ள சௌமியா மஹாலில் அடைத்துவைத்து விசாரணை நடத்தினாங்க. சம்பந்தப்பட்ட பெற்றோர்களை வரவெச்சு அட்வைஸ் பண்ணி அனுப்பிட்டாங்க. பார்ட்டியில கலந்துக்கிட்ட 7 இளம்பெண்கள் அரை குறை ட்ரெஸ்ஸில், போதையில் தள்ளாடிய படி இருந்ததைப் பார்த்து எஸ்.பி. பொன்னி ரொம்பவே வருத்தப்பட்டார்.
"இந்தமாதிரி, பார்ட்டிகள் கலாச்சார சீரழிவு மட்டுமில்ல. நாட்டுக்கே எதிரான சதி. ஒரு நாட்டை ராணுவத்தை வெச்சு வீழ்த்துறதைவிட போதைப் பொருட்கள் மூலம் இளைஞர்களின் மூளையை மழுங்கடிச்சுட்டா ஈஸியா வெற்றியடைஞ்சுடலாம்ங்குறது எதிரி நாடுகளின் தியரி'' என்கிற காவல்துறை, அங்கிருந்த பவுன்சர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கைது செய்துள்ளது. என்ன தான், அடிக்கடி அதிரடி நடவடிக்கை எடுத்தாலும் லோக்கல் போலீஸை கவனித்துவிட்டு போதை ஆட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பொள்ளாச்சி விவகாரம் தமிழகத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் சூழலிலும்கூட இதேபோன்ற வீக் கெண்ட் போதை கோவை சேத்துமடை அக்ரி நெஸ்ட்’ என்ற ரிசார்ட்டில் கொண்டாடி கைதாகியிருக்கிறார்கள் 160-க்குமேற்பட்ட கல்லூரி இளசுகள். இதிலும், கஞ்சா மட்டுமல்ல, கஞ்சா ஆயில், கோகைன் மற்றும் போதை ஊசிகள் பயன்படுத்தியதை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் தலைமையிலான போலீஸாரின் அதிரடி நடவடிக்கை யில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தனை ஆண்கள் மத்தியில் ஒரே ஒரு பெண் போதையில் ஆட்டம் போட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. டெல்லியை சேர்ந்த கரன்ஸ்பாதி, ரஷ்யாவை சேர்ந்த வில்லி ஜேம்ஸ் உள்ளிட்ட போதைக்கும்பல் மூலம் போதைப் பொருட்கள் சப்ளை ஆகியிருப்பதை முதல்கட்ட விசாரணையில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஹைலெவல் போதைகளுக்கு அடிமையாகிறவர்கள் தங்களுக்கு மட்டும் ஆபத்தானவர்கள் அல்ல. சமூகத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இப்படியே தொடர்ந்தால் இளைய சமுதாயம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல எதிர்கால சமுதாயமே சீரழிந்துவிடும் அபாயம் தொலைவில் இல்லை.
-அரவிந்த், அருள்குமார், மனோ