சென்னையை அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. அதில் ஒன்று ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும், தென்கொரியாவின் பிரபல நிறுவனமான சாம்சங் நிறுவனம். அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் 14 அம்ச கோரிக்கை நிறைவேற்ற கூறி போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்பாக கடந்த நக்கீரன் இதழில் தொழிலாளர்கள் போராட்டத்தைப் பற்றி பதிவு செய்தோம். இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, தொழிலாளர்கள் 900 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்தப் போராட்டம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு தொழிற்சங்கத்தை சார்ந்த முத்துக்குமாரை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் அடிப்படை உரிமைக்காக, 14 அம்ச கோரிக்கையை முன்வைத்து வைத்தனர். ஆனால் நிறுவனத்தினர் முன்வராத காரணத்தினால், சிஐடியு தொழிற்சங்க யூனியனை துவங்கினார்கள். இதனால் தொழிலாளர்கள் மிரட்டப்பட்டனர். கடந்த செப்டம்பர் 9 தேதியில் இருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். சாம்சங் நிறுவனமோ, தொழிலாளர் நலத்துறையோ மற்றும் தமிழக அரசோ இதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இந்தப் தொடர் போராட்டம் 32 நாளை கடந்து நடந்து கொண்டிருந்த சமயத்தில் சிஐடியு சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை, கடந்த 16 .9 .2024 அன்று கைது செய்து பொய் வழக்கை பதிவு செய்தனர். மீண்டும் இதை கண்டித்து அக்டோபர் ஒன்றாம் தேதி தொழிலாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் என் மீதும், தொழிலாளர்கள் 900 பேர் மீதும் கொலை மிரட்டல், கலவரத்தை தூண்டுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை முன்வைத்து நாங்கள் சிஐடியு சங்கத்தை துவங்கினோம். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எங்களுக்கு சங்கத்தை பதிவு செய்ய ஒத்துழைக்கவில்லை” என்றார்.
மேலும் இந்தப் போராட்டத்தை பற்றி சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் நம்மிடம் பேசினார். அப்போது அவர், “எந்த ஒரு தொழிற்சாலை துவங்கியதும் அதில் தொழிலாளர்கள் பல கனவுகளுடன் வேலைக்கு செல்வார்கள். ஆரம்பத்தில் அவர்களது உரிமை என்னவென்று தெரியாது. பின்னர் தொழிற்சாலை நிர்வாகம் அவர்களை அடிமை போல் நடத்துவதும், தொழிலாளர்கள் உழைப்பை சுரண்டுவதும், புரிந்த பின்பு தான் தொழிற்சங்கத்தை அமைப்பார்கள். அந்த வகையில் சாம்சங் நிறுவனம் கடந்த 2006 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 16 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தின் பண பலத்தில் அவர்களே உருவாக்கிய சங்கம் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த ஜூன் மாதம், சிஐடியு தொழிற்சங்கம் சாம்சங் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் சங்கத்தை துவங்கினர். அன்றிலிருந்து அந்த நிறுவனத்தை சார்ந்த உயர் அதிகாரிகள் தொழிலாளர்களை தனித்தனியாக மிரட்டி வந்தனர். இந்த நிலையில் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த குணசேகரன். மிரட்டலை தட்டி கேட்டார். எச் ஆர் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்த பாலாஜி உத்தரவின் பெயரில், சாம்சங் நிர்வாகத்தின் குண்டர்கள் அவரை தாக்கி, ஐந்து நாள் ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.
பின்னர் தொழிலாளர்கள் மூலம் அவர் மீட்கப்பட்டார். 1,810 தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வருகின்றனர் அதில் 1,450 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவார்கள். தொழிலாளர்களின் உரிமைக்காக கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தொழிலாளர் நலத்துறையோ, அதை சார்ந்த அதிகாரிகளோ செவி சாய்க்கவில்லை. இத்துறை அமைச்சர் கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் சாம்சங் நிறுவனத்தை ஆதரித்து பேசி வருகிறார். ஒரு சங்கம் துவங்கி 45 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். 106 நாள் கடந்தும் இதுவரை இந்த நிறுவன ஊழியர்களின் சங்கத்தை பதிவு செய்யவில்லை. மாறாக காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றது. நியாயமான கோரிக்கையை வைத்து போராடும் தனது உரிமைக்காக போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக பொய் வழக்கை பதிவு செய்து வருகின்றனர். ஒரு பக்கம் தொழிலாளர்கள் விரட்டப்பட்டு வருகின்றனர். 85 சதவீத தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தை ஆதரவளித்து வரும் நிலையில் தொழிற்சங்க பதிவாளர் இணை ஆணையர் ரமேஷ் 45 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டிய எங்கள் சங்கத்தை, கடந்த 106 நாட்களாக பதிவு செய்யாமல் இந்திய அரசியல் சாசனத்திற்கும், தொழிலாளர்கள் நலனுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். இது குறித்து இத்துறை அமைச்சர் கணேசனிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தொழிற்சங்கத்தை சார்ந்த சில தொழிலாளிகள் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி 650 பேர் கைது செய்யப்பட்டு சுங்குவார்சத்திரத்தில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபம் மற்றும் குரு மகாலில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், வன்னியரசு, ஆதவ் அர்ஜுன் ஆகியோர் தொழிலாளர்களை சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முதல்வரிடம் எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறுகையில், “தொழிலாளர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டது என்றும் அதேபோல தொழிற்சங்கத்தினர் சிஐடியு தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உள்ளனர் ஆனால் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தற்போது சங்கத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் உள்ளது” என்றார். செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ”தொழிலாளர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் சாம்சங் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தை தொடர்ந்தால் அது தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் இதை அரசியல் ஆக்க வேண்டாம்” என்றார். சாம்சங் நிறுவனம் சார்பாக வெளியிட்ட தகவலில், ‘தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, உணவு பிரச்சனை, குளிர்சாதன பஸ் வசதிகள் போன்ற 14 கோரிக்கைகளில் 13 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது உள்ள கமிட்டியே செயல்படும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளான முத்துக்குமார், சௌந்தரராஜன் போன்ற வெளிநபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டம் பற்றி நம்மிடம் பேசிய சாம்சங் நிறுவன தொழிலாளி, “நாங்கள் முன்வைத்த கோரிக்கையை பூர்த்தி செய்வதாக நிறுவனம் தெரிவித்த நிலையில் தற்போது முதற்கட்டமாக மாத சம்பளத்தில் ஐந்தாயிரம் ரூபாயை, இந்த மாதத்தில் இருந்து உயர்த்தி தருவதாகவும், பி கமிட்டி வரும் மார்ச் மாதத்தில் நடக்கும் போது சாம்சங் ஊழியர்களை வைத்து அவர்களின் நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதாக கூறியுள்ள நிலையில் எங்களுக்கு இனி போராட்டம் வேண்டாம். மேலும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பெரும்பான்மையானவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் தான். நிறுவனம் சார்பில் இந்த போராட்டத்தை தொடர்ந்தால் நொய்டாவுகோ, கிளை ஆந்திராவுக்கு மாற்றப்படும் என்ற ஒரு தகவல் வெளிவருகிறது. அப்படி வந்தால், தற்போது இங்கே வேலை செய்யும் சுமார் 2000 தொழிலாளர்கள் மற்றும் ஆயிரம் மறைமுக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், இந்த இந்த சியுபிஐ தொழிற்சங்கம் எல்லாம் தென்குரிய நிறுவனங்களை குறி வைத்து போராட்டங்களை நடத்துகின்றது. ஏன் சீன நிறுவனங்களை பற்றி பேசுவது கூட கிடையாது” என்று முடித்துக் கொண்டார்.
இந்த தொழிலாளர்கள் கைது பற்றி காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம் அதற்கு அவர், “போராட்டம் என்ற பெயரில் அத்துமீறி நடந்து கொள்வதால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது. மேலும் போராட்டத்தின் போது மணிகண்டன் என்ற எஸ்எஸ்ஐ, கீழே வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டார். இதனால் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் ஏழு பேர் உடனடியாக இரவோடு இரவாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். நீதிபதி உடனடியாக அவர்களை பிணையில் விடுவித்தார். மேலும், இரண்டு பேர் தலைமறைவாகி நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 10ஆம் தேதி இந்தப் போராட்டம் அனுமதியின்றி தொடர்வதால் தற்போது தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.