Skip to main content

"ஆமாம் ஸ்டாலின் என் அண்ணன்தான்; எங்க சண்டையில் பாஜக நுழைவதை ஏற்கமாட்டோம்..." - சீமான்

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

ுி

 

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் நாம் தமிழக முதல்வர் எங்கள் அண்ணன், அவருடன் எங்களுக்கு இருப்பது செல்லச் சண்டைதான் என்று தெரிவித்திருந்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர் கூறியதாவது, " உண்மைதான் கூறியிருக்கிறேன். அவர் என்னுடைய அண்ணன்தான். தயாளு அம்மாவை நான் அம்மா என்றுதான் கூப்பிடுவேன், ராஜாத்தி அம்மாளையும் அம்மா என்றுதான் கூப்பிடுவேன். 

 

உறவுகள் வேறு, ஆட்சியில் நடக்கும் தவறுகள் வேறு, இரண்டையும் எப்படி ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியும். எங்களுக்குள் நடப்பது அண்ணன் தம்பி சண்டைதான். அதில் எப்படி பாஜகவை உள்ளே அனுமதிப்பது. இது திராவிட கட்சிக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் இடையேயான கருத்து வேறுபாடு. அதை நாங்கள் எங்களுக்குள் பார்த்துக்கொள்வோம். அதில் பாஜகவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.

 

மேலும் வாரிசு படம் நேரடியாக ஆந்திராவில் ரீலிஸ் செய்ய அம்மாநில வினியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி குறித்துப் பேசிய அவர், " இது மிகவும் தவறான ஒன்று. எல்லா மொழிகளைச் சேர்ந்த படங்களும் தமிழ்நாட்டில் திரையரங்கங்களில் ரீலிஸ் செய்யப்படுகிறது. இதில் தமிழ்ப்படம், தெலுங்கு படம் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. பாகுபலி, ஆர்ஆர்ஆர் எனப் பல படங்கள் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. நாங்கள் ஏன் தமிழ்ப்படங்கள் ரீலிஸ் செய்யப்படும் அன்று அந்தப் படங்கள் வருகின்றது என்று கேட்கவில்லை. நாங்கள் கலையைக் கலையாகத்தான் பார்க்கிறோம். அந்த மாநிலம் அந்த நடிகர் என்று இதுவரை பிரித்துப் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கும் பழக்கமும் எங்களுக்கு இல்லை.

 

குறிப்பாக அந்த வாரிசு படம் கூட தெலுங்கு இயக்குநர், தெலுங்கு தயாரிப்பாளர் என்று இருவருமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான். அப்படி இருக்கையில் இது நேரடி தமிழ்ப்படம், அதனால் பண்டிகை காலங்களில் வெளியிட முடியாது என்று கூறினார் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இவர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறோம். அதில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நல்ல முடிவு வரவில்லை என்றால் நாங்களும் வேறு முடிவு எடுக்க வேண்டி வரும். தெலுங்கு படத்தைத் தமிழகத்தில் திரையிடலாம் என்று அவர்கள் நினைத்துக்கூட அவர்களால் பார்க்க முடியாது" என்றார்.