Skip to main content

‘ஆண்களின் மனப்போக்கு அவமானத்திற்குள் தள்ளுகிறது’ - ஒரு பெண் எழுத்தாளரை புலம்பவைத்த பதிப்பாளர்

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Woman Writer complaint on publisher Sendhuram Jagadeshan

 

ஒரு எழுத்தாளரால், எழுத்து மூலம் தன்னையும் தன் வலியையும் மற்றவர்களுக்கு எளிதாகக் கடத்திவிடமுடியும். அப்படி ஒரு வலியைத்தான் பொதுவெளியில் கடத்தியிருக்கிறார் ஒரு பெண் எழுத்தாளர். அவருடைய மனக்குமுறல், அவரது வரிகளிலேயே.. ‘என்னுடைய புத்தகத்தை பப்ளிஷ் பண்ணணும்னு ஒருவரை சந்திக்கச் சென்றிருந்தேன். சில மோசமான நிகழ்வில் இருந்து தப்பித்து வந்ததில் இருந்து எவரையும் தனித்து சந்திக்க விருப்பம் இருந்தது இல்லை. எனக்கு ஆண்கள் மூலம் வரக்கூடிய எந்த வித offerகளையும் தவிர்த்தே வந்தேன். என்னுடைய யூட்யூப் சேனலிற்கு promote செய்து தருகிறேன் என்று கூறியவர்களையும் கூட மறுத்துவிட்டேன்.

 

நீண்ட காலமாக உடலரசியல் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசையின் பொருட்டு எழுதலாம் என்று இருந்தேன்.  எப்போதும் தானாக வரும் opportunityயைக்கூட அலசி ஆராய்ந்தே ஏற்றுக் கொள்ளும் பழக்கம் உண்டு எனக்கு. ஒரு இரு மாதத்திற்கு முன்பு ஒரு பப்ளிகேஷன் முதலாளி, அவர் பப்ளிகேஷனில் எழுத முடியுமா என்று கேட்டிருந்தார். சரி என்று அதைப் பற்றி பேச ஒரு மாலில் காபி சாப்பிட்டுக் கொண்டு பேசலாம் என்று சம்மதித்திருந்தேன். அவ்வப்போது அது தள்ளிச் செல்ல,  இன்று கண்டிப்பாக சந்திப்பதாக உறுதி அளித்திருந்ததால் சென்றேன்.

 

என்னை விட ஒரு இருபது வருடங்கள் மூத்தவராக இருக்கக்கூடும். முதன் முதலில் சந்திக்கிறேன். எந்தவித முகநூல் தொடர்புமே கிடையாது. இருந்தும் சுற்றிச் சுற்றி வளைத்து அவர் சொன்னது இதுதான். அவரின் உடல் தேவைக்கு நான் மனது வைக்க வேண்டும் என்று. இங்கு நான் உடலரசியல் எழுதுகிறேன். உடல் தேவையைப் பற்றி பேசுகிறேன் என்றால் என்னையே கூப்பிட்டுவிடுவார்களா? என்று மனதுக்குள் பற்றி எரிந்தாலும்,  அமைதியாக மிகத் தெளிவாக பொறுமையாக அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

 

Woman Writer complaint on publisher Sendhuram Jagadeshan

 

“நான் குடும்பத்தில் இருக்கிறேன். கணவரோடும் குழந்தையோடும் மிக மிக சந்தோஷமாக இருக்கின்றேன். எனக்கும் ஆண் நண்பர்கள் உண்டு. அவர்கள் எப்போதும் வெறும் நண்பர்கள் மட்டும் தான். எப்போது எல்லைகள் மீறுகிறார்களோ, அப்போது அந்த உறவு அத்தோடு துண்டிக்கப்பட்டுவிடும். Strictly I am not that kind of girl..” என்று பொறுமையாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

 

போன வாரம் அவர் என்னை முகநூலில் காணாமல்,  சனிக்கிழமை போகும் கோவிலுக்கு தேடி வந்ததாகவும், அங்கேயே எனக்காக குறிப்பிட்ட நேரத்தில் காத்திருந்ததாகவும்,  அங்கு யானை பக்கத்தில் நின்று எடுத்த புகைப்படத்தையும் காண்பித்தார். பொதுவெளியில் இங்கு போகிறேன், அங்கு போகிறேன் என்று, புகைப்படம் அங்கு சென்று வந்து போடுவது கூட எவ்வளவு தவறு என்று அப்போதுதான் புரிந்தது. 

 

புதிதாக மரியாதைக்குரிய பெரியவரை சந்திக்கச் செல்கின்றேன் என்று நல்ல நீட்டான சல்வாரில் துப்பட்டாவை எல்லாம் மடித்துப் போட்டுக்கொண்டு, மறைக்க வேண்டியதை எல்லாம் மறைத்துக்கொண்டு சென்றும்,  அவருடைய  பார்வை அவ்வப்போது உடலை அளவெடுத்துக் கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது. யாரையும் நான் பசியோடு அனுப்பி வைத்ததில்லை. வாங்க சாப்பிடலாம் என்று பூடமாக அவர் சொன்னதை உணர்ந்து,  எனக்கு காபியின் கசப்பே இன்னும் நாக்கில் ஒட்டிக் கொண்டிருந்ததால், உணவு செரிக்காது வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். திடமாக,  திமிராகப் பேசிவிட்டு வந்துவிட்டாலும்,  உள்ளுக்குள் அத்தனை அழுத்தமாக, அவமானமாக இருந்தது.  பலவந்தப்படுத்தவில்லைதான். ஆனாலும், இதுபோன்ற ஆண்களின் மனப்போக்கு அவமானத்திற்குள் தள்ளுகிறது.

 

அப்படியென்றால், என் எழுத்துகளில் நிஜமாகவே அரங்கேற்றம் கொள்ளும் அளவுக்கு ஏதுமில்லையா?  என்னை நெருங்கும் ஆண்களிடம் why should I? என் முகத்தைப் பார்த்தா, இவளை ஈஸியா ஏமாத்திடலாம்னு தெரியுதா? Am I a sex doll? எனக்கென்று உணர்ச்சிகள் எதுவும் இல்லையானு நாலு அறைவிட்டு கேட்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் எத்தனை கனவுகளோடு ஒரு opportunityயை நோக்கிப் போய்,  இதுபோல் எதாவது நடந்து தொலைந்து,  ஒரு மூளையில் போய் முடங்கிக் கொண்டு அழ வைத்துவிடுகிறது.

 

எதன் பொருட்டு வருகிறார்கள்? எதன் பொருட்டு அன்பு செலுத்துகிறார்கள்? பின்பு எது கிடைக்கவில்லை என்று விட்டுவிட்டு செல்கிறார்கள்? என்பதே பல சமயம் புரியாத குழப்பத்தோடு இருக்கும்போது,  நானெல்லாம் எதுக்கு எழுதறேன்? எனக்கெல்லாம் என்ன வெங்காயம் தெரியும்? என்று உள்மனம் செருப்பால் அடிக்குது.’ என்று கொட்டித் தீர்த்திருக்கிறார். 

 

அந்தப் பெண் எழுத்தாளருக்கு  ‘மனக்காயத்தை’ ஏற்படுத்தியவர் யார்? 

 

தனியார் சேனல் ஒன்றில் புதையல் என்ற பெயரில் எழுத்தாளர்கள் வாழ்க்கை குறித்த ஆவணப்படங்களையும், சிற்றிதழ்களின் வரலாற்றையும்,  22 வாரங்களுக்கு அரைமணி நேர நிகழ்ச்சியாக வழங்கியவர் செந்தூரம் ஜெகதீஷ். இவர், அந்தப் பெண் எழுத்தாளருடனான வலைத்தள அரட்டையில், ‘உன்னை நான் கைப்பிடிச்சு இழுத்தேனா? உனக்கு சம்மதம்னா இணங்கு,  புத்தகம் பிரசுரிக்கிறேனுதானே சொன்னேன். என்கிட்ட எந்தப் பொண்ணு வந்தாலும் இணங்கிப் போய்தான் புக்கு போடுவா. பெரிய சீதாப்பிராட்டினு நெனப்பா உனக்கு? சும்மா செய்வாங்களா உதவி உனக்கு? என்கிட்ட ஏற்கனவே புக்கு போட்ட பொண்ணு நீ என்னை பத்தி போஸ்ட் போட்டத எடுத்துட்டு வந்து தந்தா. பப்ளிக்கா போஸ்ட் போடவேண்டியதுதான? அவதான் என்கிட்ட சொன்னா, நீ பலபேருகிட்ட போகக்கூடிய பொம்பளைனு. என்னை கிழவன்னு எழுதிருக்கியாம். கிழவன்னா கசக்குமா உனக்கு? உடலளவில் நான் கிழவன் இல்லை.’ என்று பிதற்றியிருக்கிறார். 


ஒருகட்டத்தில் செந்தூரம் ஜெகதீஷ்  ‘ஒரு சிறிய பிரியத்தைத்தான் கேட்டேன். எதுவும் வேண்டாம். என்னிடம் உனக்கு விருப்பம் இல்லை என்று பலமுறை நீயும் சொல்லிவிட்டாய். உன்னை நீ மூடிக்கொள். உனக்கு பிடித்தவர்களுடன் பேசு. எனக்கு எதுவும் வேண்டாம். என்னைவிட்டு தூரமாகவே விலகியிரு. நானும் என்றாவது உன்னைவிட்டு விலகிவிடுவேன். உன் அழைப்பு கேட்க முடியாத தூரத்தில் போய்விடுவேன். இன்னொரு அழகான தேவதை, மாமா என்று என்னை அழைக்கும்போது, வாழ்க்கை விரட்டிவிடுபவர்களை விடவும், அழைப்பவர்களை நோக்கித்தான் ஓடுகிறது.’ என்று உருகியிருக்கிறார்.

 

அந்தப் பெண் எழுத்தாளரோ, ‘புள்ளைப்பூச்சினு நினைச்சேன். அப்படி இல்லை போல. ஒரு பெண் அவனை (செந்தூரம் ஜெகதீஷ்) பத்தி அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்டுகள், நூறுக்கும் கிட்ட. பொண்ணுங்க No-னு சொன்னா No-னு புரியாம திரும்பத் திரும்ப டார்ச்சர் பண்றதுக்கு பேரு அறிவீனம். அவனுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் இருக்கு’ என்று குமுறலை வெளிப்படுத்தியதோடு, ‘என் கணவருக்கு இந்த விவகாரம் தெரிந்துவிட்டதால், என்னால் இதை எளிதாகக் கையாள முடிகிறது. நாளையோ, நாளை மறுநாளோ என்னை என் கணவரோடு சந்திக்கத் தயாராக இருங்கள். தவறு செய்திருக்கும் பட்சத்தில் உகந்த தண்டனை கிடைக்கப்பெறும்’ என்று செந்தூரம் ஜெகதீஷை எச்சரித்திருக்கிறார். 


தனக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு பெண் எழுத்தாளர்கள் சிலரிடம் ஆதாரங்கள் இருப்பதாக நம்புவதாலோ என்னவோ, தன்னுடைய முகநூல் பக்கத்தில் தன்னைப் பற்றிய சுயவிபரங்களை புதியவர்கள் யாரும் தெரிந்துகொள்ளக்கூடாதென்று, தற்போது ‘lock’ செய்திருக்கிறார். செந்தூரம் ஜெகதீஷை அவருடைய கைபேசி எண் 98******37-ல் தொடர்புகொண்டு விளக்கம்பெற முயற்சித்தபோது, தொடர்ந்து ‘switch-off’ நிலையிலேயே இருந்தது. வாட்ஸ்-ஆப்பில் குறுந்தகவல் அனுப்பினோம். அவருடைய ஜி-மெயிலுக்கும் கடிதம் அனுப்பினோம். அவரிடமிருந்து பதில் இல்லை. அவர் தன்னுடைய கருத்துகளையோ, விளக்கத்தையோ நம்மிடம் பகிரும் பட்சத்தில் அதனை வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.  

 

பாட்ஷா திரைப்படத்தில், மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவியை கெஸ்ட் ஹவுசுக்கு வரச் சொல்வார் அந்தக் கல்லூரி நிர்வாகி. ஒரு பெண் எழுத்தாளரின் புத்தகத்தை பப்ளிஷ் பண்ணுவதற்காக, அதே ரீதியில் பேசியிருக்கிறார் செந்தூரம் ஜெகதீஷ்.

 

இந்த ஆபாச அழைப்பு குறித்து இன்னொரு பெண் எழுத்தாளர், “கிண்டில், பிரதிலிபி, பிஞ்ச், புஸ்தகா போன்ற தளங்களும், ஸ்டோரிடெல், குக்கூ எப்.எம்., பிரதிலிபி எப்.எம். போன்ற ஆடியோ நாவல் செயலிகளும், இன்னும் எத்தனையோ வலைத்தளங்களும் உள்ளன. புத்தகமாக அச்சிட்டுத்தான் ஆகவேண்டுமென்றால், நோஷன்பிரஸ் போன்ற நிறுவனங்கள் இருக்கின்றன. இல்லை, புக்பேர்ல புக் வைக்கிற பதிப்பகம்தான் வேண்டுமென்றால், pod முறையில் பதிப்பித்து விற்றுத் தரவும், பல பதிப்பகங்கள் தயாராக இருக்கின்றன. புத்தகத்தின் கருவை/கொள்கையை அடிப்படையாக வைத்து இயங்கும் பதிப்பகங்கள் பல உள்ளன. எனினும், முற்காலம் போல, புத்தக பதிப்பிப்பிற்காக, என்னென்னவோ நடப்பதெல்லாம் / நடக்க வேண்டுமென எதிர்பார்ப்பதெல்லாம் கேட்கவே விசித்திரமாக உள்ளது. எந்த நூற்றாண்டில் வாழ்கிறார்கள் இவர்களெல்லாம்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.