சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சரவையை மாற்றும்படி எடப்பாடியிடம் போர்க்கொடி உயர்த்துவார்கள் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஆம்பூர் பாலசுப்பிரமணி கூறினார்.
நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி…
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு 3வது நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு சென்றுள்ளது. அதைப் பற்றி?
எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நினைக்கிறோம். நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்க தயார்.
சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வந்தாலும்?
ஏற்க தயார்.
அப்படியென்றால் நீங்கள் இடைத்தேர்தலுக்கு தயாராக இருக்கிறீர்கள்?
ஆமாம். இடைத்தேர்தலை சந்திக்க தயார்.
18 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில்தான் போட்டியிடுவீர்களா?
சசிகலா, தினகரன் முடிவெடுப்பார்கள். குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு 18 தொகுதிகளிலும் முன்பைவிட அதிக வாக்குகள் வித்தியாசம் பெற்று வெற்றி பெறுவோம்.
முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பாவம். தினகரனை நம்பி ஏமார்ந்துவிட்டார்கள் என்று அமைச்சர்கள் ஒவ்வொரு மேடையிலும் சொல்லி வருகிறார்களே?
நாங்கள் அதுபோல் நினைக்கவில்லை. யாரால் நாங்கள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.
ஓட்டு போட்ட மக்களை நினைக்கவில்லையா?
மக்கள் பணி செய்யமுடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. அதனால்தான் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார். சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வந்தாலும் ஏற்க தயார். அதன் பிறகு சசிகலா, தினகரன் சம்மதம் பெற்று இடைத்தேர்தலை சந்தித்து மக்கள் பணியை ஆற்றுவோம்.
மீண்டும் ஆம்பூரில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
நிச்சயமாக 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நான்தான். 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதில் பாதி வித்தியாசத்தில் கூட இந்த மாவட்டத்தில் மற்றவர்கள் வெற்றி பெறவில்லை.
ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் 18 எம்எல்ஏக்களுக்கும் கொடுத்து தன் பக்கம் வைத்திருக்கிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறாரே?
இப்ப இருக்கிற அமைச்சர்கள் அனைவரும் டி.டி.வி. தினகரனிடம் நீங்கள்தான் துணைப்பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று கூவத்தூரில் கெஞ்சினார்கள். அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்கள் முன்பாக நடந்த சம்பவம் இது. அமைச்சர்கள்தான் எங்களைப்போன்ற எம்எல்ஏக்களிடம் தினகரனை ஆதரிக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தினார்கள். கெஞ்சினார்கள். அப்போது அந்த அமைச்சர்கள் பணம் வாங்கிக்கொண்டுதான் கெஞ்சினார்களா? சசிகலாதான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பார் என்று எங்கள் முன்பு சொன்னார். விசுவாசம் இல்லாமல் அவரை இவர்கள் எதிர்த்தால் என்ன நியாயம்.
18 தொகுதியிலும் ஜெயலலிதாவை நம்பித்தான் ஓட்டு போட்டார்கள். இந்த 18 பேர்களையோ, தினகரனை நம்பியோ மக்கள் ஓட்டு போடவில்லை. ஆகையால்தான் அந்த 18 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகளும், நலத்திட்ட உதவிகளும் மற்ற தொகுதிகளைப்போல வழங்கப்படுகிறது என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறாரே?
தொகுதியை சுற்றிப் பார்த்தால் தெரியும் ஆட்சியாளர்களின் கொடுமையை. ஜெயலலிதா மறைந்த பிறகு, நான் எம்எல்ஏவாக இருந்த நேரத்தில் மாவட்ட வறட்சி நிதிகள் உள்ளிட்டவை அமைச்சர்கள் தொகுதிக்கு மட்டுமே சென்றது. இதனை முதல் அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்றோம். அப்போது ஆளும் கட்சியில் இருந்து என்ன பயன், ஓட்டு போட்டவங்க காறித்துப்புறாங்க, அவுங்களுக்கு பதில் சொல்ல முடியல, பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று ஆரம்ப கட்டத்திலேயே முதல்வரிடம் சொன்னேன். ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்ற ஒரு மாதத்திலேயே சொன்னோம். அதற்கு எந்த பதிலும் இல்லை. ஆகையால்தான் முதல்வரை மாற்ற வேண்டும் என்று தினகரன் பக்கம் உறுதியாக இருந்தோம்.
சகதியில் காலைவிட்டவர்கள் போல் தினகரனிடம் மாட்டிக்கொண்டு 18 எம்எல்ஏக்களும் முழிக்கிறார்கள். விரைவில் அவர்கள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் என்று அமைச்சர்கள் தொடர்ந்து சொல்கிறார்களே?
100 சதவீதம் அது நடக்காது. கூடிய விரைவில் 105 எம்எல்ஏக்கள் அங்கிருந்து தினகரன் பக்கம்தான் வருவார்கள்.
எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள். ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் உள்ளது. மத்திய அரசுக்கு பணிந்து செல்வதால் அந்த ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்கிறார்களே?
ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருக்கட்டும். அங்கு என்ன பிரச்சனை நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். அங்கு உள்ள அமைச்சர்களுக்குள் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஒரு குரூப் அமைச்சர்கள் மட்டும்தான் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். 32 அமைச்சர்களில் எத்தனை பொத்தல்கள் இருக்கிறது என்பதை தெரிந்ததால்தான் சொல்கிறோம்.
நடப்பு சட்டமன்றத் தொடர் முடிந்த பின்னர் அங்கிருக்கும் அதிமுக எம்எல்ஏக்களில் எத்தனைப் பேர் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி தூக்குகிறார்கள் என்று பாருங்கள். ஜெயலலிதா இருந்தபோதே அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது. அப்படி இருக்கும்போது இப்போது ஏன் இருக்கக்கூடாது.