கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அக்டோபர் 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். அதற்குள் காரில் இருந்த ஒருவர் முற்றிலுமாகத் தீயில் எரிந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த மாநகர காவல்துறையினர் 9 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். இந்த வழக்கு தமிழக போலீசாரிடமிருந்து என்.ஐ.ஏ அமைப்புக்கு மாற்றப்பட்ட நிலையில், கார் வெடிப்பு விபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில் 5 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று பூந்தமல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என அறிவித்த நிலையில், 5 பேரையும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். விசாரணை மனுவை மீண்டும் நாளை விசாரிப்பதாக நீதிபதி இளவழகன் தெரிவித்ததையடுத்து 5 பேரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.