Skip to main content

பசுமை சாலைக்காக முடக்கப்பட்டதா புதிய இரயில்வே பாதை ?. - வெளிவரும் புதிய தகவல்கள்

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை திண்டிவனம் டூ ஜோலார்பேட்டைக்கு புதியதாக இரயில் பாதை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை. நீண்டகால கோரிக்கை கடந்த 2008ல் செயல்பாட்டுக்கு வந்தது. அந்த திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. அந்த திட்டம் நிறுத்தப்பட காரணம்மே சேலம் – சென்னை இடையிலான பசுமை வழி விரைவுச்சாலை திட்டம் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 


திண்டிவனத்தில் இருந்து பெங்களுரூ செல்ல வேண்டும் என்றால் செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, ஓசூர் என 270 கி.மீ சாலை வழியாக பயணம் செய்து பெங்களுரூ செல்ல வேண்டும். திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி வரை இருவழிப்பாதை, அதுவும் கண்டும் குழியுமான சாலை. திண்டிவனத்தில் இருந்து பெங்களுரூ போய்சேர போய்ச்சேர 10 மணி நேரமாகிவிடும். இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளில், கார்களில் பயணம் செல்கின்றனர். திண்டிவனத்தை விட செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, சிங்காரப்பேட்டை மக்கள் ஆயிரக்கணக்கில் பெங்களுருவில் உள்ளனர். அவர்கள் அனைவரும்மே பேருந்தையே பயன்படுத்துகின்றனர். இந்த மார்கத்தில் இரயில்பாதை அமைத்து இரயில் சேவை தொடங்கினால் மக்களின் பிரச்சனை தீரும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இதனை பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தது.
 


2004ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்துக்கொண்டு இருந்தபோது, அந்த அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கு வகித்துக்கொண்டு இருந்தது. அப்போது மக்களின் நீண்ட கால கோரிக்கையான திண்டிவனம் டூ ஜோலார்பேட்டை, திண்டிவனம் டூ நகரி இடையே இரயில் பாதை அமைக்கும் திட்டத்தினை கொண்டு வந்தார் இரயில்வே இணை அமைச்சராக இருந்த வேலு. அதற்கான ஆய்வுக்கும் நிதி ஒதுக்கினார். திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இரயில் சேவை கிடையாது. அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரூக்கும் இரயில் சேவை கிடையாது. சென்னைக்கு இரயில் இயக்க வேண்டும்மென்றால் வேலூர், காட்பாடி வழியாகத்தான் இயக்கவேண்டும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து பெங்களுரூக்கு ரயில் இயக்க வேண்டும் என்றாலும் திருவண்ணாமலை, வேலூர் காட்பாடி வழியாகத்தான் செல்ல வேண்டும். இது தலையை சுத்திக்கொண்டு மூக்கை தொடும் வேலை. இதுவே, திண்டிவனம் டூ ஜோலார்பேட்டைக்கு திருவண்ணாமலை வழியாக இரயில் பாதை அமைத்தால் வேலூர், காட்பாடி செல்லாமல் பெங்களுரூவுக்கும், சென்னைக்கும் திருவண்ணாமலையில் இருந்து செல்லலாம், நேரம் குறைவு, எரிபொருள் மிச்சம், வாரியத்துக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், இந்த ஒரு பாதையால் என இரயில்வே துறை அதிகாரிகள் கணக்கிட்டனர்.

 

Was the new railway path frozen for the green road? - new information coming out


 


திண்டிவனத்தில் இருந்து செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை, திருப்பத்தூர் வழியாக ஜோலார்பேட்டைக்கு 160 கி.மீ தூரம் இரயில்பாதை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக திண்டிவனம் டூ திருவண்ணாமலை இடையே முதலில் இரயில் பாதை அமைக்க 2008 செப்டம்பர் மாதம் செஞ்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. திண்டிவனம் டூ திருவண்ணாமலை இடையே 71 கி.மீ மின்பாதை 227 கோடி திட்டமதிப்பில் அமைப்பது என மத்தியரசு அறிவித்தது. இந்த பாதையில் 8 பெரிய பாலங்கள், 68 சிறிய பாலங்கள், திண்டிவனம் டூ திருவண்ணாமலை இடையே 8 இடங்களில் இரயில் நிலையங்கள் அமைப்பது எனவும், திருவண்ணாமலையை ஜங்ஷனாக மாற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக முதல்கட்டமாக 2008ல் 10 கோடி, 2009ல் 20 கோடி, 2010ல் 40 கோடி, 2011ல் 20 கோடி என மத்திய இரயில்வே துறை ஒதுக்கியது. சங்கராபரணி, வராகநிதி, துரிஞ்சலாறு கடக்கும் பகுதியில் மட்டும் இரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தி தரப்படும் வேலைகள் அடுத்து வந்த ஜெ ஆட்சிக்காலத்தில் நொண்டியடித்தன. இதனால் ஒதுக்கப்பட்ட பணம் திரும்ப சென்றதால் 2012க்கு பின் நிதி ஒதுக்குவதை மத்திய இரயில்வே வாரியம் நிறுத்திவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 


அதற்கான காரணம் இப்போதுதான் வெளிவந்துள்ளது.  திருவண்ணாமலையை அடுத்த கவுத்திமலையில் இரும்புதாது வெட்டியெடுக்க ஜிண்டால் முயன்றது. அந்த நிறுவனத்துக்கு சேலத்திலும் நிறுவனம் உள்ளது. இங்கு வெட்டியெடுக்கப்படும் கனிம வளத்தை சேலத்துக்கு அனுப்பி அங்கு அதை பிரித்துயெடுத்து மீண்டும் சென்னை துறைமுகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுயிருந்தது. இதற்கு சாலை மார்க்கத்தை விட இரயில் மார்க்கம் சரியாக இருக்கும் என திட்டமிடப்பட்டுயிருந்தது. திண்டிவனம் – ஜோலார்பேட்டை பாதை அமைத்தால் ஜிண்டாலுக்கும் சாதகமாக இருக்கும் என கணக்கிடப்பட்டது. திருவண்ணாமலைக்குள் ஜிண்டால் வரவிடாமல் தடுத்து விரட்டியது மக்கள் போராட்டம். அந்த நிறுவனம்மே இந்த திட்டத்தை முடக்க காரணமாகிவிட்டது என்கிறார்கள் சிலர்.
 

நிதி ஒதுக்கப்படாமல் நிறுத்தப்பட்ட இந்த திட்டத்தினை மோடி பிரதமராக வந்தபின் சேலம் – சென்னை இடையே பசுமை விரைவுச்சாலை அமைக்கப்படும்போது, வர்த்தக ரீதியாக திருவண்ணாமலை டூ திண்டிவனம் ரயில்பாதை திட்டம் நட்டத்தில் இயங்கும், நட்டத்தில் இயங்குவதற்கு எதற்கு புதிய மின்பாதை அமைக்க வேண்டும் என முடிவு எடுத்து இந்த திட்டத்தினை நிறுத்திவைத்துள்ளார்கள் என்கிறார்கள் பசுமைவழி சாலை எதிர்ப்பு போராட்டக்குழுவில் உள்ள சிலர். இந்த திட்டத்தை செயல்படுத்துங்கள் என எம்.பியாகி 4 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை திருவண்ணாமலை எம்.பி வனரோஜா, ஆரணி எம்.பி செஞ்சி.ஏழுமலை என இரண்டு அதிமுக எம்.பிக்களும் குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, இந்த திட்டம் முடங்கியிருக்க பசுமை வழிச்சாலையும் ஒருக்காரணம் என்கிறார்கள். அரசாங்கம் என்பது மக்களுக்கானது என்கிற கருத்து மெல்ல மெல்ல அழிந்து கார்ப்பரேட்களுக்கு என்பது வெட்ட வெளிச்சமாகிவருகிறது.

 

சார்ந்த செய்திகள்