"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்" - வைகைச் செல்வன் கேள்வி

வீடியோவில் உள்ளபடி ஜெயலலிதா ஆரோக்கியமாக இருந்தார் என்றால் அரவாக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஏன் கைநாட்டு வைத்தார் என்று ஆளும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் வினா எழுப்பினார்.
இதுதொடர்பாக அவர் நக்கீரன் இணையதளத்திடம் பேசியது...
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ என்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டவர், தினகரனோ அல்லது அவர் சம்மந்தப்பட்டவரோ அல்ல. வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியிட்டதற்கும், தினகரனுக்கும் சம்மந்தமில்லை என்று வெற்றிவேலின் வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.
தேர்தலுக்காகத்தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது என்பது அப்பட்டமாக தெள்ளத்தெளிவாகிறது. ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சமூக ஊடங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் தொடர்ந்து ஒரு ஐயப்பாட்டை வெளியிட்டு வந்தார்கள்.
அப்போதெல்லாம் இந்த வீடியோவை வெளியிடாமல் தற்போது வெளியிட்டிருப்பதன் மூலம் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. ஜெயலலிதா மரணம் குறித்தோ, சிகிச்சை குறித்தோ ஏதேனும் ஆதாரம் இருந்தால் அதனை விசாரணை ஆணையத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு தன்னிச்சையாக ஒரு நபர், வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அது உள்நோக்கம் இல்லையா?
ஜெயலலிதா ஆரோக்கியமாக இருந்தார் என்று சொன்னால் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் இடைத்தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்க ஏ மற்றும் பி படிவங்களில் தானே கையெழுதிட்டிருப்பாரே. அவருடைய கைநாட்டு பெற்றதன் ரகசியம் என்ன? இவ்வளவு ஆரோக்கியமாக இருந்தால் அவர் கையெழுத்திட்டிருப்பாரே என்கிற சந்தேகம் எழுகிறது. ஜெயலலிதாவை திட்டமிட்டு கொச்சைப்படுத்துகிற நிகழ்வாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம் என்றார்.
வே.ராஜவேல்