அமெரிக்காவுக்குள் மனிதர்கள் எப்போது நுழைந்திருப்பார்கள் என்பதில் பல குழப்பமான முடிவுகள் இருந்தன. சைபீரியா மற்றும் கிழக்கு ஆசியாவில் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் கடந்த பனிக்கட்டிக் காலத்தில் பெரிங் நீரிணை வழியாக வட அமெரிக்காவுக்குள் நுழைந்தனர்.
பெரிங் நீரிணை மட்டுமல்ல வட அமெரிக்காவின் பெரும்பகுதி பனியாய் உறைந்திருந்தது. அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் இரண்டு பிரிவாக பிரிந்து பயணத்தைத் தொடர்ந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர் வட அமெரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இன்னொரு பிரிவினர் தென்னமெரிக்காவுக்குள் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டனர்.
சிலி நாட்டின் தெற்கு பகுதியில் மோண்டி வெர்டே என்ற இடத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட ஆயுதம் கிடைத்தது. அது 14 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது.
இப்படி தென்னமெரிக்காவில் பயணித்த மூத்தகுடியினர் ஆண்டிஸ் மலையின் உச்சியில் குடியேறினர். வேட்டைக்காரர்களாக வாழ்க்கையைத் தொடங்கிய அவர்கள், பிறகு மலைப்பகுதியிலே ஓரிடத்தில் கூட்டமாக வாழத் தொடங்கினர் என்கிறார்கள்.
பெரு நாட்டின் ஆண்டிஸ் மலை உச்சியில் இப்போது வாழும் பூர்வ குடிகளின் இதயம் விரிவடைந்து பெரிதாகவும், சற்று கூடுதலான ரத்த அழுத்தத்துடனும் வாழ்கிறார்கள். அதாவது ஆண்டிஸ் மலையின் உச்சியில் வாழ்வதற்கு ஏற்றபடி அவர்களுடைய உடலமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதாவது பூர்வகுடிகள் மலை உச்சியிலும் சமவெளியிலுமாக மாறிமாறி வாழ்ந்ததை மாற்றி, உயரமான மலைகளில் தொடர்ச்சியாக வாழத் தொடங்கிய பிறகே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இவர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் மலையுச்சியில் வாழத் தொடங்கியிருப்பார்கள். இவர்களுடைய மரபணுக்களை ஆய்வு செய்தால் அந்த காலகட்டத்தை முடிவுசெய்யலாம் என்று விஞ்ஞானிகள் கருதினர். அதாவது 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூத்தகுடிகள் ஆண்டிஸ் மலையில் வேட்டையாடி, கூடி வாழும் கூட்டத்தினராய் இருந்திருக்கலாம். 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் மலையிலேயே வசிக்கத் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்பட்டது.
மூன்று வேறுபட்ட கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்களுடைய புதைக்கும் இடத்திலிருந்து எலும்புகளில் இருந்து மரபணுக்களை சேகரித்தனர். 8 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த சோரோ மிகயா பாட்ஜ்ஸா என்ற கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களின் மரபணுவை சேகரித்தனர். பிறகு, 3 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விவசாயத் தொழில் செய்த கூட்டத்தைச் சேர்ந்த கைலாசுரோ என்ற கலாச்சார மக்களின் மரபணுவும், ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முந்தைய ரியோ அன்கல்லேன் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களின் மரபணும் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, இந்த மூன்றுவகை மரபணுக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். சமவெளிகளில் வசிக்கும், பழங்கால, நவீனகால தென்னமெரிக்க மக்களின் டிஎன்ஏவையும், மலையுச்சியில் வசிக்கும் பூர்வீக அமெரிக்கர்களின் டிஎன்ஏவையும் ஒப்பிட்டனர். முடிவில், மலையுச்சியில் நிரந்தரமாக மக்கள் குடியிருக்கத் தொடங்கிய காலம் 8 ஆயிரத்து 750 ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளனர். மலையுச்சியில் வாழ்ந்தவர்களின் உடல்கூறு மாற்றத்துடன் அவர்கள் அதிக அளவில் ஸ்டார்ச்சை உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மலையுச்சியில் வாழ்ந்த பூர்வகுடிகள் சோளம், உருளைக்கிழங்கு போன்றவற்றை பயிரிட்டு உணவாகக் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால், மலையடிவாரத்தில் வாழ்ந்தவர்கள் வேட்டையாடியே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள் என்று அந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.