அண்மையில் வாட்ஸாப் எனப்படும் மொபைல் குறுந்செய்தி செயலி மூலம் சில நபர்களால் பாலியல் தொழிலுக்கு அழைப்பு வந்ததாக குற்றசாட்டை முன்வைத்து பரபரப்பை கிளப்பியவர் நடிகை ஜெயலட்சுமி. அவர் தற்போது இது தொடர்பாக நக்கீரனுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் மனம்திறந்திருக்கிறார்.
நான் ஜெயலட்சுமி ஆரம்பத்தில் பல திரைப்படங்களிலும் தற்போது சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் போன்றவற்றில் நடித்து வருகிறேன். மேலும் தற்பொழுது ஜூனியர் அட்வகேட் மற்றும் பாலிசி செல்லராகவும் இருக்கிறேன்.
இரண்டு வாரத்திற்கு முன் என் மொபைலில் டேட்டிங் ரிலேஷன்ஷிப் என்ற பெயரில் ஒரு தேவையில்லாத ஒரு குறுஞ்செய்தி வந்தது அதை நான் முதலில் பெரிதுபடுத்தவில்லை அந்த மொபைல் நம்பரை பிளாக் பண்ணினேன். அந்த குறுஞ்செய்தியில் நீங்கள் இந்த அழைப்பை ஏற்றுவந்தால் வந்தால் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பாரிக்கலாம் என்று இருந்தது. இந்த மெசேஜை பார்த்தவுடனே ஒரு நடிகை என்பதால் இப்படியா? என மனம் வெறுத்து அந்த மெசேஜை டெலிட் செய்தேன். அதன் பிறகு அதேபோல் வேறு ஒரு நம்பரிலிருந்து அதேபோல் பாலியல் தொழிலுக்கு வருமாறு அழைக்கும் விதமாக மெசேஜ் வந்தது அதில் மேலும் பல பிரபலங்களின் புகைப்படங்களும் இருந்தது தற்போது பிசியாக இண்டஸ்ட்ரியில் நடித்துக்கொண்டிருக்கும் பல பிரபல நடிகைகள் புகைப்படங்களும் இருந்தது. இதையெல்லாம் பார்த்து அதிர்ந்துவிட்டேன். மெசேஜ் வந்த நம்பரை வைத்து புகார் கொடுக்கலாமா? அல்லது வேண்டாமா? என எதுவும் தெரியாமல் இருக்கும் பொழுதுதான் ஒரு விஷயம் தெரியவந்தது எனக்கும் மட்டுமல்ல என்னனுடைய சக தோழிகளாக இருக்கும் நடிகைகளுக்கும் இதேபோல் மெசேஜ் வந்ததை அறிந்து மேலும் அதிர்ந்தேன்.
அதுமட்டுமின்றி எனது தோழியின் 18 வயது மகளுக்கும் இதேபோல் ஒரு மெசேஜ் வந்தது என கேள்விப்பட்ட என்னால் இதற்குமேலும் இதை விடக்கூடாது என என் நண்பர்கள், சக நடிகை தோழிகளின் ஆதரவுடன் புகார் கொடுத்தேன். இந்த காலத்தில் சாதாரண குடும்ப பெண்களுக்கே இதுபோன்ற தவறான மெசேஜ்கள் வருகிறது. அதும் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. அண்மையில் என் நடிகை தோழியின் மகளை பெண் பார்க்க வந்த ஒருவர் தனக்கு அந்த பெண் பிடித்திருப்பதாக கூறி திருமணம் ரெடியாகும் சூழலில் பெண்ணின் அம்மா நடிகை என்பதால் இறுதியில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இப்படி நடிகை என்பதால் சமூகத்தில் எல்லா இடங்களிலும் பாதிக்கப்படுகிறோம்.
விளம்பரம் தேடுவதற்காக இந்த புகாரை சொல்லவில்லை எவ்வளவோ நடிகைகள் இதுபோன்ற தேவையில்லாத தொந்தரவுகளை வெளிகாட்டமால் வாழ்ந்துவருகிறார்கள். ஆனால் என் நண்பர்கள் கொடுத்த தைரியம்தான் என்னை ஊக்குவிக்கிறது. எனக்கு தெரிந்த வகையில் என் பார்வையில் நான் பழகும் தமிழ் சினிமா நல்ல முறையில்தான் இருக்கிறது. ஆனால் நடிகைகள் என்ற வார்த்தையே சிலரிடம் தவறான புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. நடிப்பு என்பது என் தொழில் அதை கடவுளாக ஏற்று கிடைக்கும் சிறு பாத்திரத்தை கூட நன்கு பெர்பார்ம் பண்ணவேண்டும் என்று நினைக்கும் நடிகைதான் நான்.
சின்னத்திரை நடிகைகளுக்கு மட்டுமல்ல எல்லா நடிகைகளுக்கும் சொல்லவிரும்புவது என்னவென்றால் நமக்கு பின் இப்படியொரு கூட்டம் செயல்பட்டு வருகிறது அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் துணித்து நிற்கவேண்டும் என்பதே.