
வட மாநிலங்களில் பனிக் காலம் முடிந்து அடுத்து வரும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது வட மாநில இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
வட மாநிலங்களில் இந்த வசந்த காலத்தை வண்ண மயமாக வரவேற்க ஒருவர் மீது ஒருவர் எந்தவித வேறுபாடுமின்றி வண்ணப் பௌடர்களை பூசிக் கொண்டாடுவர். வட மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் எங்கு வசித்தாலும், ஹோலி பண்டிகைக்கு அவரவர் ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடுவார்கள். முடியாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். வடமாநில அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த கொண்டாட்டத்தில் அடங்குவார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு புறம் இருக்க, ஹோலி பண்டிகையின் போது கலர் பவுடர் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம் என்று பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களும் நடைபெற்று வருகிறது.
சமீப காலமாக நிறுவனங்கள் சில சமூக அக்கறை கொண்ட விளம்பரங்களைக் கொண்டு தங்கள் பொருட்களையோ, சேவையையோ விளம்பரம் செய்து வருகின்றன. அந்த வகையில் இந்த வருட ஹோலி பண்டிகைக்கு பாரத் மேட்ரிமோனி ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், ஹோலி கொண்டாட்டம் எனும் பெயரில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை காட்சிப்படுத்தி ‘சில வண்ணங்கள் அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது’ என்றும் இதனால் பெண்கள் ஹோலியை கொண்டாடுவதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. அதேசமயம், இந்த ஆண்டு அப்படியில்லாமல் அனைவரும் இணைந்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது. இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், அந்த இணையத்தை புறக்கணிக்கவும் சமூக வலைத்தளங்களில் அடிப்படைவாதிகளால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பெரும் கலவரத்திற்கு நடுவில் கடந்த 8ம் தேதி ஹோலி பண்டிகையும் கொண்டாடி முடிக்கப்பட்டது. ஹோலி பண்டிகை கொண்டாடி முடிக்கப்பட்டாலும், அந்த திருமண இணையதளத்தை புறக்கணிக்க முன்னெடுக்கப்பட்ட அதே ஹேஷ்டேக்-கில் மேலும் சில வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோக்கள் 2023ம் ஆண்டு நடந்த ஹோலி கொண்டாட்டத்தின் போது எடுத்ததா என்று தெளிவான தரவுகள் இல்லை என்றாலும், நிச்சயம் அது ஹோலி கொண்டாட்டத்தில் எடுத்தவை என்பதை மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

அந்த வைரல் வீடியோக்களில் ஒன்றில், டெல்லியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணின் உடலை பலரும் கலர் பவுடர் பூசுவது போல் தவறாகத் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் இளைஞர்கள் கூடி நின்று அந்த பெண்னின் தலை எதையோ கொண்டு அடித்து விளையாடுகின்றனர். அந்த பெண் தன்னை தற்காத்து கொள்ள முயன்றாலும் தொடர்ந்து அந்த இளைஞர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதேபோன்று மற்றொரு வீடியோவில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் பெண் இருவர் சாலையில் நடந்து செல்லும்போது ஹோலி பண்டிகை கொண்டாடிய ஆண்கள் அந்த வெளிநாட்டு பெண்ணின் உடலை அனுமதியின்றி தொட்டு கலர் பவுடர் பூசுகின்றனர். மேலும், அந்த பெண்ணிற்கு கலர் பவுடர் பூசி, கட்டிப் பிடித்து கட்டிப் பிடித்து ஒவ்வொரு இளைஞராக சென்று கொண்டிருக்கிறார்கள். இதனை அந்த பெண்ணுடன் வந்த ஆண் நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
அதே வரிசையில் இஸ்லாமிய பெண் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் போது அவர் மீது சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் சிலர் வண்ணப்பொடி பாக்கெட்டை வீசியெறியும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இதே போன்று பல வீடியோக்களில் ஹோலி பண்டிகையின் போது பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. டெல்லியில் பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் விவகாரத்தில் மூன்று பேரை போலீஸ் கைது செய்துள்ளது.