சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ தினகரன் தனது தொகுதிக்கு ஆதரவாளர்களுடன் நேற்று சென்றபோது, எதிரணியினர் அவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அமமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி,
ஆர்.கே.நகரில் மக்கள் வாக்களித்துதான் தினகரன் வெற்றி பெற்றார். ஒரு எம்எல்ஏவாக அவர் தனது கடைமையை செய்ய தொகுதிக்கு போகும்போதெல்லாம் சுயநல இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் அரசு வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகிறது. டோக்கன் கொடுத்து ஜெயித்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதுபோன்று சொல்லி மக்களை கேவலப்படுத்துகிறார்கள். அவர்கள் 6 ஆயிரம் கொடுத்தது உலகத்திற்கே தெரியும்.
சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் நன்றாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். சுயேட்சையாக வெற்றி பெற்ற எம்எல்ஏ சென்னையில் தனது தொகுதிக்கு சென்று தனது கடைமையை செய்ய முடியவில்லை. நலத்திட்ட உதவிகள் செய்ய முடியவில்லை. மக்களை சந்திக்க முடியவில்லை. என்ன சட்டம் ஒழுங்கு இங்கு நன்றாக உள்ளது. சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்திருந்தால் நேற்று இந்த சம்பவம் நடந்திருக்குமா? போலீசார் நின்றுகொண்டிருக்கும்போதே ஆளும் கட்சியினர் கல் வீசி தாக்குகின்றனர். போலீசார் கண் முன்பே இது நடக்கிறது.
இதுபோன்று கல்வீசி தாக்கினால், எதிர்ப்பு கோஷம் போட்டால் தினகரன் பயப்படுவார் என்று நினைக்கிறார்கள். எவ்வளவோ பிரச்சனைகள், வழக்குகளை சந்தித்து வந்தவர். இதற்கெல்லாம் தினகரன் அஞ்சமாட்டார். மத்திய அரசை எதிர்த்து, துரோக அரசான மாநில அரசை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
யாரால் வாழ்வு வந்தது என்று நினைக்காமல் ஆளும் கட்சியினர் பிரச்சனை செய்கிறார்கள். நேற்று இவ்வளவு ரகளை நடந்துள்ளது. கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. இதிலிருந்து இது ஆளும் கட்சியின் வேலை என்று தெரியவில்லையா? கல் வீசியது பொதுமக்கள் என்று பழிபோடுகிறார்கள். ஒருவர் கூட பொதுமக்கள் இல்லை. அனைவரும் ஆளும் கட்சியினர்தான்.
ஆர்.கே.நகரில் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செய்வதில்லை. சாதாரண சாக்கடை அடைப்பு என்று போனால்கூட, யாருக்கு ஓட்டு போட்டீங்களோ, அவர்களிடம் போய் சொல்லுங்க என்று அதிகாரிகளை வைத்து பதில் சொல்கிறார்கள். அணையப்போகிற விளக்கும் பிரசாசமாக எரியும் என்பதைப்போல ஆட்சி போகிற கடைசி நேரத்தில் ஆட்டம் போடுகிறார்கள். மிக சீக்கிரமாக இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு காலம் வரும். இந்தக் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள். இந்தக் கட்சி ஜூரோவாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு கூறினார்.