இன்று இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள். கடந்த ஆண்டு இதே நாளில் 'ஒரே ஒரு பாலச்சந்தர்' என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது கே.பாலச்சந்தர் அறக்கட்டளை. அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கரு.பழனியப்பன், பாலச்சந்தர் குறித்து பேசியது...
பாலச்சந்தர்தான் இளையராஜாவிடம் வந்து சேர்ந்த கடைசி இயக்குனர். இளையராஜா தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டு இருந்த காலகட்டத்தில் இயக்குனர்கள் அனைவரும் இளையராஜாவிடம் வந்து சேர்ந்துவிட்டனர். அந்த சமயத்தில் இளையராஜா இல்லாத படங்கள் இல்லை. தயாரிப்பாளர்கள் முதலில் இளையராஜாவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டுதான் படமே தொடங்குவார்கள். டிஸ்ட்ரிபியூட்டர்களும் இளையராஜா இருந்தால்தான் வாங்குவார்கள். யார் நடித்திருக்கிறார் என்பதுகூட தேவையில்லை. இளையராஜா புகைப்படம் வைத்து 'ராகதேவனின் இசையில்'னு போஸ்டர் ஒட்டினாலே போதும், படம் விற்றுவிடும்.
அப்படிப்பட்ட காலத்தில் கூட அவரிடம் செல்லாதவர் பாலச்சந்தர். அவர் மட்டும் எதிரே நின்றுகொண்டிருந்து வேடிக்கை பார்த்தார். அவர்தான் இளையராஜாவிடம் கடைசியாக வந்தது. அவர் இளையராஜாவுடன் சேர்ந்து, எடுத்த முதல் படம் சிந்துபைரவி. பாலச்சந்தர், 'இளையராஜாவிடம் சென்று அவருக்கு சவால்விடும் வகையில் பாட்டுக்களை வைக்கவேண்டும், அப்படியொரு கதையோடுதான் செல்லவேண்டும்' என்று காத்திருந்துள்ளார். சிந்துபைரவியில் இணைந்த இளையராஜா அதில் பாடல்களுக்கான சூழல்களைப் பார்த்து, 'இவரை தேடியல்லவா நாம் சென்றிருக்க வேண்டும்' என்று இசை அமைத்துள்ளார். இளையராஜா இயக்குனர்களை அதிகமாக பாராட்டிப் பார்த்ததில்லை. ஆனால் அவரே கர்நாடக சங்கீதம் ஒன்றைப் பாடிவிட்டு 'இது மாதிரி பாட்டெல்லாம் யாருக்கு நான் போடுவது, இது மாதிரி சிச்சுவேஷன் கொண்டு வந்தால் போடலாம்' என்று பாலச்சந்தரை பாராட்டியுள்ளார். இளையராஜா இவ்வாறு வெளிப்படையாகப் பாராட்டியது, அதுவும் அவரை விட்டு போன பின்பு என்றால் அது பாலச்சந்தர் ஒருவரை மட்டும்தான்.
இளையராஜாவுடன் இணைந்த கடைசி இயக்குனராக இருந்த பாலச்சந்தர்தான், அவரை உடைத்துக்கொண்டு வெளியே சென்ற முதல் இயக்குனரும் ஆவார். அந்த காலகட்டத்தில் இளையராஜாதான் தமிழ் சினிமா என்றாகிவிட்டது. பாலச்சந்தர்தான் முதன் முதலில் தன்னுடைய கவிதாலயா நிறுவனத்தில் இளையராஜா அல்லாத இசை இயக்குனர்களை வைத்து படம் எடுத்தவர். ஒரு படத்தில் அப்படி செய்தால் தனியாகத் தெரியும் என்று, தன்னுடைய மூன்று படங்களிலும் இளையராஜா இல்லை என்று சொல்லி அறிவித்தார். ஒன்று ரோஜா, இரண்டு வானமே எல்லை, மூன்று அண்ணாமலை. அவர் இயக்கிய வானமே எல்லை, தயாரித்த அண்ணாமலை, ரோஜா என மூன்று படங்களும் பெரு வெற்றியடைந்தது. அப்போதுதான் இளையராஜா இல்லாமல் ஒரு தமிழ் சினிமா எடுத்து வெற்றிபெறலாம் என்று எல்லோரும் பார்த்தனர். இதைத்தான் அவர் செய்ததில் சிறப்பான ஒன்றாக நான் பார்க்கிறேன். தன் வீட்டை மட்டும் உடைப்பது பெரிதல்ல அந்த மொத்த அமைப்பையுமே உடைப்பதுதான் பெரிது.