ராஜீவ் படுகொலை வழக்கின் சிறைவாசிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் காரசாரமான விவாதத்தை நடத்தியது தி.மு.க. இந்த நிலையில், அவர்களின் விடுதலை குறித்து மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றி அதிர்ச்சியை தந்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

நீண்ட வருடங்களாக சிறைக் கொட்டடியில் தவிக்கும் 7 பேரின் விடுதலையை மாநில அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி முடிவு செய்துகொள்ளலாம் என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதன் தொடர்ச்சியாக, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பி வைத்தது முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அமைச்சரவை. அதன் மீது எவ்வித முடிவையும் எடுக்காமல் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கிடப்பில் வைத்திருக்கிறார் ஆளுநர்.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த 11-ந்தேதி நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் வந்தபோது, "ஏழுபேர் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கடந்த 2018-ல் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தற்போது வரை நிலுவையில் இருக்கிறது'' என தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்டது.

அதனை உற்றுக் கவனித்த நீதிபதிகள், "ஆளுநர் என்பவர் ஒரு அரசின் பிரதிநிதி. உயர் அதிகாரம் படைத்தவர். இந்த விவகாரத்தில் அவருக்கு எப்படி நாங்கள் அழுத்தம் கொடுக்க முடியும்? கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தாங்கள் பரிந்துரைத்த தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என ஆளுநரிடம் மாநில அரசுதான் கேட்க வேண்டும். ஏழு பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் கவர்னரிடம் ஏன் இவ்வளவு காலம் நிலுவையில் உள்ளது? அதன் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
இந்தச் சூழலில்தான், 7 பேர் விடுதலை விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க, சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. இது குறித்து சட்டப் பேரவையில் 19-ந்தேதி கேள்வி எழுப்பிய தி.மு.க.வின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், "தர்மபுரி பஸ் எரிப்பில் மாட்டிக்கொண்ட அ.தி.மு.க. கட்சிக்காரர்களை உடனடியாக விடுதலை செய்த இந்த அரசு, ஏழு பேர் விடுதலையில் மெத்தனமாக இருக்கிறது'' என குற்றம்சாட்டினார்.

அப்போது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், "ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டு மென்பதுதான் இந்த அரசின் கொள்கை. அதனால்தான் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதுமே அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்திருக்கிறோம். அவர்களின் விடுதலையில் அரசுக்கு உரிய அதிகாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் கவர்னர் முடிவெடுப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை. இருந்தாலும் நல்ல முடிவை விரைந்து எடுப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என தெரிவித்தார்.

இதில் திருப்தியடையாத தி.மு.க. தலைவரும் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், "கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை என கேட்கும் அதிகாரம் அரசுக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் சொல்லியுள்ள நிலையில், கவர்னரிடம் கேள்வி எழுப்பினீர்களா? முடிவெடுக்க வலியுறுத்தும் சூழ்நிலையை எடுத்தீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் பேரவையில் வாதங்கள் சூடுபிடித்தன. ஒரு கட்டத்தில், "கவர்னர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். இதே கருத்தைத்தான் மத்திய அரசும் சொல்லியிருக்கிறது. அதனால் நல்ல முடிவு வரும். அந்த நம்பிக்கை இருக்கிறது'' என்றார் முதல்வர் எடப்பாடி. இதனையடுத்து சபை அமைதியானது.
பேரவையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளிடையே அவர்களின் விடுதலை சாத்தியமாகும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தாலும், இரண்டு வாரத்துக்குள் அவர்களின் விடுதலை குறித்த முடிவை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், கவர்னரின் முடிவை தெரிந்து கொள்ள எவ்வித அக்கறையையும் காட்டவில்லை எடப்பாடி அரசு.
அதேசமயம், "கவர்னர் முடிவெடுக்க காலதாமதம் செய்வதால் நாங்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம்'' என்பதை சுட்டிக்காட்டி நளினி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் 20-ந்தேதி வந்தபோது, "சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர்களின் விடுதலை குறித்து மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல் விடுதலை செய்ய முடியாது. அவர்களின் விடுதலை குறித்த தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானமும், அவர்களது பரிந்துரைகளும் வெறும் பூஜ்ஜியம்தான். விடுதலை செய்ய எந்த அதிகாரமும் தமிழக அரசுக்கு கிடையாது என கடுமையாக வாதிட்டார் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜகோபால். இந்த வாதம் வழக்கறிஞர்களிடம் ஏக அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், கவர்னருக்கு பரிந்துரைப்பதோடு எங்களின் கடமை முடிந்துவிட்டது. அதனால் கவர்னர்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் நாங்கள் தலையிட முடியாது'' என தெரிவித்ததோடு அமைதியானார். இதனால் மேலும் மேலும் அதிர்ச்சிகள் அதிகரிக்க, மத்திய அரசு வழக்கறிஞர் கூறுவது சரி அல்ல. அவர் பேசுவது நீதிமன்ற அவமதிப்பாகும். அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. அமைச்சரவையின் பரிந்துரைகளை கவர்னர் ஏற்க வேண்டும்'' என வலியுறுத்தினார் நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன். இதனையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறது உயர்நீதிமன்றம்.
இதே நீதிமன்றத்தில் இதே வழக்கின் முந்தைய விசாரணையின் போது, "இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை. ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்'' என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல் முடிவெடுக்க முடியாது என அவர் தெரிவித்திருப்பது 7 பேர் விடுதலையை எதிர்பார்க்கும் அரசியல் கட்சிகளையும் ஜன நாயக அமைப்புகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இதன் பின்னணிகள் குறித்து விசாரித்தபோது, "ஏழு பேர் விடுதலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது விந்தையாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மாநில அரசு, ராஜ்பவன் மூன்றுமே அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளன. அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் "விடுதலைக்கு நாங்கள் எதிரி இல்லை' என காட்டிக்கொள்கிறது எடப்பாடி அரசு. அமைச்சரவையில் முடிவெடுத்தாலும் கவர்னரின் முடிவில்தான் அவர்களின் விடுதலை இருக்கிறது என அரசுக்கு தெரியும் என்பதால், கவர்னரை சுட்டிக்காட்டி எடப்பாடி தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்.
அரசுக்கு அக்கறை இருக்குமானால், "எனது அமைச்சரவையின் பரிந்துரை மீது என்ன முடிவு எடுத்தீர்கள்? ஏன், காலதாமதம்?' என கேள்வி கேட்க எடப்பாடி அரசால் முடியும். சட்ட ரீதியாக இதற்கு இடமில்லையெனினும் தார்மீக அடிப்படையில் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. ஆனால், அந்த உரிமையை பயன்படுத்த அரசு நினைக்கவில்லை. அதேபோல, இந்த விவகாரத்தில் சுயமாக முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரமிருந்தாலும் மத்திய அரசின் விருப்பத்தை அறிந்துகொள்ளவே ஆர்வமாக இருக்கிறது ராஜ்பவன்.
மத்திய அரசோ, 7 பேரையும் விடுதலை செய்வதில் என்ன அரசியல் ஆதாயம் இருக்கிறது என திட்டமிடுகிறது. அதனாலேயே, அவர்களின் விடுதலைக்கு தற்கால தடையை கவர்னர் மூலம் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மத்திய பா.ஜ.க. அரசு நினைத்தால் மட்டுமே அவர்களின் விடுதலை சாத்தியமாகும் என்கிற எதிர்பார்ப்பும் சூழலும் தமிழகத்தில் பரபரப்பாக இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்காகத் தான் நீதிமன்றங்களின் மூலம் அதிர்ச்சிகளையும், ஆனந்தத்தையும், பரபரப்புகளையும் மாற்றி மாற்றி உருவாக்கி வருகின்றனர் மத்திய ஆட்சியாளர்கள்.
இந்த விவகாரத்தில் இரண்டு திட்டங்களை வைத்திருக்கிறது டெல்லி. அதாவது, எடப்பாடி ஆட்சி நீடித்தால், சட்டமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ஆளுநருக்கு சில உத்தரவுகள் பறக்கும். அப்போது, அவர் டெல்லிக்கு பறப்பதும் சென்னைக்குத் திரும்புவதுமான சூழலை உருவாக்கி அதன்பிறகு விடுதலைக்கான கோப்பில் கையெழுத்திடுவார்.
ஒருவேளை எடப்பாடி ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமையும் சூழலை உருவாக்கி அப்போது விடுதலை கோப்பில் கவர்னர் கையெழுத்திடுவது போன்ற நிலையை ஏற்படுத்துவது என்கிற 2 திட்டங்களை போட்டு வைத்திருக்கிறது. அதனால், தேர்தலுக்காக அவர்களின் விடுதலையை தடுத்து நிறுத்தியிருக்கும் மத்திய அரசு, தேர்தல் சமயத்தில் மட்டுமே தடையை உடைக்கும். அதுவரை இப்படி கண்ணாமூச்சி ஆட்டங்களை மூன்று தரப்புமே ஆடிக்கொண்டிருக்கும்'' என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.
இந்த விவகாரத்தில் இப்படியான சூழல்கள் உருவாகி வரும் நிலையில், 7 பேர் விடுதலையும் ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கும் ஒரே திசையில் பயணிக்கின்றன. அதாவது, ஒரு பிரச்சனையின் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்கிற காலக்கெடுவிற்கான சட்ட விதிகள் எதுவும் கவர்னருக்கும், சட்டமன்ற சபாநாயகருக்கும் கிடையாது. குறிப்பிட்ட பிரச்சனை மீது எவ்வித முடிவையும் இவர்கள் எடுக்காத நிலையில், எடுத்தே தீர வேண்டும் என அவர்களுக்கு சட்ட ரீதியிலான எவ்வித அதிகார நெருக்கடியை தர முடியாது. அதனால், காலநிர்ணயம் குறிப்பிடப்படவில்லை என்கிற விதியை சாதகமாக பயன்படுத்தி கவர்னரும் சபாநாயகரும் தங்களின் ஜனநாயக கடமையிலிருந்து விலகி நிற்கிறார்கள்.