நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வடசென்னை தொகுதியில் அ.தி.மு.க. வாக்குகளைச் சேகரிப்பதோடு, குறைவான வாக்குகளைப் பெறக்கூடிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்களாம். இத்தொகுதியில், ராயபுரம், திரு.வி.க. நகருக்கு ஜெயக்குமாரும், ஆர்.கே. நகர், பெரம்பூருக்கு ராஜேஷும், திருவொற்றியூருக்கு மாதவரம் மூர்த்தியும், கொளத்தூருக்கு வெங்கடேஷ் பாபுவும் தேர்தல் பொறுப்பாளர்களாகப் பணிகளைப் பார்க்கிறார்கள். திரு.வி.க. நகர் பகுதிக்கு கூடுதல் தேர்தல் பொறுப்பாளராக சீனிவாசனை நியமித்துள்ளார்களாம்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க.வுக்கென இருக்கும் நிரந்தர வாக்குகளோடு, சிறுபான்மையினரின் வாக்குகளையும், இளைஞர்களின் வாக்குகளையும் பெறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளனராம். கடந்த முறை பா.ஜ.க. கூட்டணி காரணமாகக் கிடைக்காத சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர்வதற்காக, அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்குமிடையே எந்தவிதத் தொடர்பும் இல்லையென்பதை எடுத்துரைத்து வாக்குகளைத் திரட்டுகிறாராம் ராஜேஷ். அதேபோல் திருவொற்றியூர் மணலி ஆயில் பிரச்சனைக்கு இதுவரை எவ்விதத் தீர்வும் எட்டப்படாததைக் கூறியும் மக்களைத் திரட்டுகிறாராம்.
கொளத்தூரில் மட்டும் தி.மு.க. பலம்வாய்ந்ததாக இருப்பதால் ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளில் அ,தி.மு.க.வுக்கான வாக்கு சதவீதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது அ.தி.மு.க. தலைமை. ஆனால், திரு.வி.க. நகர் பகுதிக்கான பொறுப்பாளரான ஜெயகுமாரோ, தென் சென்னையில் போட்டியிடும் வாரிசுக்கு நிலவரம் கலவரமாக இருப்பதால், வடசென்னையில் ஈடுபாடில்லாமல் செயல்படுகிறாராம். வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் வசிக்கும் திரு.வி.க. நகர் பகுதியில், அவர்களின் வாக்குகளைக் கவர்வது குறித்து ஆர்வமின்றி இருக்கிறாராம். ஏற்கெனவே பூத் கமிட்டிக்காக 5 கட்டமாக ஒதுக்கப்பட்ட நிதியில், தற்போதுதான் முதற்கட்ட நிதியையே ரிலீஸ் செய்துள்ளாராம். இதுபோன்ற உள்ளடிகளைப் புரிந்துகொண்டு தான் தலைமையே திரு.வி.க.நகருக்கு சீனிவாசனை கூடுதலாக பொறுப்பாளராக்கியது. சீனிவாசனையும் முதலில் செயல்படவிடாமல், ‘நீ பேப்பர் ஒர்க்கை மட்டும் பார்த்துக்கொள்’ எனக்கூறி அவரைத் தடுத்திருக்கிறார் ஜெயக்குமார். இதுகுறித்தும் தலைமைக்கு செய்தி போக, தற்போது சீனிவாசனும் தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளார்.
இப்படி சின்னச்சின்ன பிரச்சனைகளைச் சரிசெய்த பின்னர், வடசென்னையில் வெற்றிபெறும் இலக்கோடு உற்சாகத்தோடு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் ராயபுரம் மனோ. தொகுதியிலிருக்கும் எளிய உழைப்பாளிகளான இளநீர் விற்பவர்கள், துணி தைப்பவர்கள், ஹோட்டலில் தோசை சுடும் மாஸ்டர் என ஒவ்வொருவரின் பணிகளிலும் தானும் ஈடுபட்டு, அவர்களின் மனதைக் கவர்வதோடு வாக்குகளையும் கவர்ந்தபடி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகிறார்.