திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் பற்றியும், பெண் பத்திரிகையாளர்களையும் மிகவும் அவதூறாக விமர்சித்து பதிவிட்டது தமிழ்நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
பெண்களை தெய்வமாக மதிக்கக்கூடிய நாடு தமிழ்நாடு. ஆனால் பெண்களை எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் குடும்பத்தில் பெண்கள் இல்லையா. வேறு யாராவது அவர்கள் குடும்ப பெண்களை இவ்வளவு இழிவாக பேசினார்கள் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா. நம்ம வீட்டு பெண்கள்தான் பெண்கள். மற்ற வீட்டு பெண்களெல்லாம் பெண்கள் இல்லை என்று நினைக்கிறார்களா. சட்டம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்.
பெண் நிருபரிடம் நடந்து கொண்ட விதத்திற்கு எதிர்ப்பு வந்ததும் ஆளுநர் மன்னிப்பு கேட்டு பிரச்சனை முடிவுக்கு வரும் தருணத்தில் எஸ்.வி.சேகர் ஏன் இதனை பதிவிட வேண்டும். பாஜக ஆட்சியில் எட்டு வயது குழந்தையை கோயிலில் வைத்து 8 பேர் சித்தரவதை செய்துள்ளனர். கோயிலில் வைத்து நடக்குமா என்று எச்.ராஜா குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். எஸ்.வி.சேகர் ஒரு பெண் பத்திரிக்கையாளரை இழிவுப்படுத்தி பதிவிட்டுள்ளார். இதற்கு பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காதா.
பெரியாரைப் பற்றிப் பேசியபோதே எச்.ராஜாவை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கைது செய்யவில்லை. அதற்கு பின்னர் எச்.ராஜா எல்லோரைப் பற்றியும் காது கொடுத்து கேட்கக்கூடாத வார்த்தைகளால் பேசுகிறார். ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக என்றால் தமிழக அரசுக்கு பயமா.
ஜெயலலிதா இருந்திருந்தால் எஸ்.வி.சேகர் இப்படி பேசியிருப்பாரா. இந்த தைரியும் எஸ்.வி.சேகருக்கு வந்திருக்குமா. இன்று தமிழக அரசு வாயை பொத்திக்கொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஏன் கண்டனங்களை தெரிவிக்கவில்லை. பெண்களை இழிவாக சித்தரிப்பவர்களுக்கு நிச்சயமாக கடும் நடவடிக்கை தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டும்.
யாரோ அனுப்பினார், நான் அதை பார்வேடு செய்துவிட்டேன் என்பதை ஏற்க முடியாது. பெண்களை பற்றி இழிவாக இருக்கிறதே, நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே என்ற எண்ணம் எஸ்.வி.சேகருக்கு ஏன் வரவில்லை. செய்வதை செய்துவிட்டு மன்னிப்பு கேட்பது என்பது ஏற்கக்கூடியது அல்ல. இந்த விசயத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுப்பதுதான் பெண்ணினத்திற்கு செய்யும் மரியாதை. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் பொதுவாழ்க்கையில் இருப்பதற்கு எந்த தகுதியும் இல்லாதவர்கள். இவர்கள் இரண்டு பேர் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.