கமல், நேரில் சந்தித்து விட்டார்... ரஜினி ட்வீட் போட்டுவிட்டார்... விஷால் பேட்டியளித்துவிட்டார்... ராகுல் காந்தி கூட ஆதரவளித்துவிட்டார். மெர்சலுக்குத்தான் இத்தனையும். இது எப்படி நிகழ்ந்தது? "சென்னையை விட சின்ன நாடான சிங்கப்பூர்... தனி நாடாக உருவான போது இப்படி இருந்தது...இப்பொழுது இப்படி இருக்கிறது...நமது நாட்டில் ஏன் இது சாத்தியமில்லை?", என்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் 'அந்நியன்' கேள்வியெழுப்பியபொழுது, கொஞ்சம் சிந்திப்பவர்கள் எல்லோருமே கோபப்பட்டனர், கேலி பேசினர், சிங்கப்பூருடன் இந்தியாவை ஒப்பிடுவது அபத்தமென்று. இப்பொழுது, "7 பெர்ஸன்ட் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூர் இலவச மருத்துவம் வழங்கும் பொழுது, 28 பெர்ஸன்ட் வாங்கும் இந்தியா ஏன் மருத்துவ சேவையை இலவசமாக அளிப்பதில்லை?", என்று 'மெர்சல்' விஜய் கேட்டபொழுது, ஒப்பீடுகள் ஏதுமின்றி கைதட்டல் பெற்றது. அந்த வசனங்களை எதிர்த்தவர்களுக்கு எதிராக, மெர்சலுக்கு ஆதரவாக பேரலை கிளம்பியுள்ளது. ஏனெனில், இந்த முறை பேசப்பட்ட விஷயமும், அதை எதிர்த்த கட்சியும் மக்களுக்கு ஏற்படுத்திய பாதிப்பு அப்படி. ஆம், எதிரிகள் ஜிஎஸ்டியும், பாஜகவும் என்பதால், மெர்சலுக்கான ஆதரவு யாருமே எதிர்பார்க்க முடியாத அளவு எழுந்துள்ளது.
எதிர்ப்பா? உதவியா?
"டீவியும் மிக்சியும் இலவசமாகக் கொடுக்கும் அரசால், ஏன் மருத்துவம் தர முடியாது?", "7 பெர்ஸன்ட் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூர் இலவச மருத்துவம் வழங்கும் பொழுது, 28 பெர்ஸன்ட் வாங்கும் இந்தியா ஏன் மருத்துவ சேவையை இலவசமாகக் கொடுப்பதில்லை?", "மெடிசின்க்கு பனிரெண்டு பெர்ஸண்டாம்...பல தாய்மாரோட தாலியக்குற சாராயத்துக்கு ஜிஎஸ்டி இல்லயாம்",
"ஒரு அரசாங்க மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டர் இல்ல, அதுக்கு காரணம் ரெண்டு வருஷமா சப்ளை பண்றவங்களுக்கு பணம் கொடுக்கலையாம், இன்னொரு மருத்துவமனையில இன்குபேட்டர்ல வச்சிருந்த குழந்தையை பெருச்சாளி கடிச்சது", என்று ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும் பல நாட்களாக வளம் வந்த பிரச்சனைகளைத் தான் வசனங்களாய்ப் பேசினார் விஜய். ஆனாலும், இத்தனை நாளாய் தனித்தனியாக பேசப்பட்டது, திரைப்படம் என்னும் வெகுஜன ஊடகத்தில், ஒரு பிரபலமான நடிகரால் பேசப்பட்டதால் கைதட்டல் பெற்றது. ஒரு முதல்வரின் மரணத்தையே மர்மமாக வைக்கும் மருத்துவமனைகளைப் பார்த்த மக்களுக்கு, பணம் புடுங்கும் சில மருத்துவமனைகளின் மீதான கோபமே அந்தக் கைதட்டல். மருத்துவத்தை வியாபாரமாக ஆக்கியிருக்கும் சில மருத்துவர்களையும், நவீன மருத்துவமனைகளின் நடைமுறைகளையும் விமர்சிக்கும் காட்சியும் வசனங்களும் இருந்தன. அதற்கு சில மருத்துவர்களும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால், மக்களின் ஆதரவு இருந்தது. ஏற்கனவே 'கத்தி' படத்தில், விவசாய பிரச்சனையும், 2ஜி ஊழலும் வசனங்களாகப் பேசப்பட்டது. ஆனால் அது இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, கவனத்தை ஈர்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். படம் வெளிவந்த அடுத்த நாள், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இந்த வசனங்களைக் கண்டித்து, நீக்க வேண்டும் என்று கூறினார். பின்னர், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, 'மெர்சல்' பட வசனங்களை விமர்சிக்கும் பொழுது, இன்னும் ஆழ்ந்து சென்று 'ஜோசஃப் விஜய்' என்று, அதிகம் அறியப்படாத, பேசப்படாத, விஜயின் பெயரால் குறிப்பிட்டு, மதத்தால் அடையாளப்படுத்தினார். இந்த இரண்டும் நிகழ்ந்த பின்னர் தான், ஒரு வழக்கமான 'ஷங்கர்'தனமான வணிக படத்தின் வசனங்கள் இவ்வளவு தூரம் விவாதிக்கப்பட்டன. எப்பபொழுதும் விஜய் ரசிகர்களால் நிறையும் முதல் வாரத் திரையரங்குகள், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. #மெர்சல்vsமோடி (#mersalvsmodi) என்ற டாக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. ரஜினி முதல் ராகுல் வரை மெர்சலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர். தேசிய ஊடகங்கள் விவாதித்தன. மூன்றாம் நாளுக்குப் பிறகு படத்திற்கு கூட்டம் அதிகரித்திருக்கிறது. இத்தனைக்கும் காரணம், மெர்சல் வசனங்களை எதிர்த்தவர்கள். அவர்கள் எதிர்ப்பதை ஆதரிக்க இப்படி ஒரு அலை ஏற்படும் அளவுக்குதான் இருக்கிறது அவர்களின் நிலை. இன்னும் ஆழ்ந்து யோசித்தால், எதிர்த்ததன் மூலம், தமிழக பாஜக, விஜய்க்கு பிரச்சனை கொடுத்திருக்கிறதா, அல்லது உதவியிருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
திரை அரசியல்
தனது ஐம்பதாவது படமான 'சுறா'வில் தன் மக்களை நேசிக்கும் இளைஞன், மீனவ சமூகத்தின் மீட்பராக, தலைவராக உருவாகுவதாய் நடித்திருந்தார் விஜய். அந்தப் படம் தோல்வியடைந்தது. சுறா வெளியீட்டுக்கு முன்னர் தான் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து 'விஜய் மக்கள் இயக்க'மாக மாற்றினார். பின்னர் சிறிய இடைவேளைக்குப் பிறகு 'தலைவா'வில் மும்பைத் தமிழர்களின் தலைவனாக வந்தார். தலைவரற்ற ஒரு மக்கள் கூட்டத்திற்கு, இவர் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய தருணம் வருவதாகப் படம் உருவாக்கப்பட்டது. டைம் டு லீட் ('Time to Lead') என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டது. அப்போதைய அதிமுக ஆட்சியாளர்களை இது உறுத்த, 'டைம் டூ ரிலீசே' தள்ளிப் போனது. அதற்கு முந்தைய 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து, அதன் வெற்றிக்குத் தன் ரசிகர்களை அணிலாக உதவச் செய்தும் விஜய்க்கு இந்த நிலை ஏற்பட்டது. இப்படி தள்ளிப் போனது விஜயின் 'தலைவா' திட்டம். பின்னர், கத்தியில் விவசாயிகள் பிரச்சனை, 'தெரி'யில் சிறுசேரியில் ஐடி பெண் கொல்லப்பட்டது, 'பைரவா'வில் கல்விக் கொள்ளை, 'மெர்ச'லில் மருத்துவக் கொள்ளை, ஜிஎஸ்டி என மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் தன் படங்களில் தொட்டு, அரசியலை நோக்கிய தன் அடிகளைப் பொறுமையாக, ஆனால் அழுத்தமாக வைக்கிறார். கலைஞர், எம்.ஜி.யார் காலத்தில் திராவிடமும் விஜயகாந்த் காலத்தில் தேசப்பற்றும் பேசப்பட்ட தமிழ் திரைப்படங்களில், இன்று தமிழுணர்வு பேசினால் தான் எடுபடும் என்பதை உணர்ந்து 'ஆளப் போறான் தமிழன்' பாடல், நம் பாரம்பரிய வேட்டி பற்றிய பெருமித வசனம் என சரியாக சேர்க்கப்பட்டிருந்தது. இளைய தளபதி, தளபதியாகவும் மாறியிருந்தார்.
நிஜ அரசியல்
தனது மன்றத்தை 'விஜய் மக்கள் இயக்கமாக' 2009 ஆம் ஆண்டு மாற்றி, மாவட்டம், வட்டம் அளவு வரை பலப்படுத்தி வருகிறார். அரசியல் அனுபவமுள்ள புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ வான 'புஸ்ஸி' ஆனந்தை தன் மக்கள் இயக்கத்தின் தலைவராக நியமித்தார். ஆரம்பத்தில் திமுக வட்டாரத்தில் நெருக்கமாக இருந்தார் விஜய். உதயநிதி ஸ்டாலின், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்தார். அந்த உறவில், 2006 ஆம் ஆண்டு, டெல்லியில் நடந்த விழாவில், பொங்கல் சிறப்பு தபால் தலையை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட விஜய் பெற்றுக் கொண்டார், தயாநிதி மாறன் உடனிருந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டில் ஒரு நாள் திடீரென்று காங்கிரஸ் இளைஞர் அணி பொறுப்பாளராக இருந்த ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி சென்றார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அப்பொழுது கட்சிக்கு இளரத்தம் பாய்ச்ச ராகுல் உழைத்துக்கொண்டிருந்ததால், அரசியல் ஆலோசனை இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. விஜயின் தந்தை எஸ்.ஏ.சியும் விவரங்களை வெளியிடாமல் சஸ்பென்ஸ் காத்தார். பின்னொரு நாள் இது பற்றி ராகுலிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்ப, "இளைஞர் காங்கிரசில் சேர விரும்பினார் விஜய். ஆனால், அதற்கான வயதை அவர் தாண்டிவிட்டார்" என்று கூறி விஷயத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கினார் ராகுல்.
திரைப்பட வர்த்தக விஷயங்களால், திமுக நட்பிலிருந்தும் விலகி, காங்கிரஸ் கிசு கிசுவும் பொய்யாகி இருந்த நிலையில், 2011 தேர்தலில் ஜெயலலிதாவை சந்தித்து, விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவைத் தெரிவித்தார் விஜயின் தந்தை எஸ்.ஏ.சி. அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின் விஜயும் அவரது தந்தையும் இணைந்து சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். வெளியே வந்து செய்தியாளர்களிடம், "அதிமுகவின் வெற்றிக்கு ராமனுக்கு அணில் உதவியது போல் நாங்கள் உதவினோம் என்பதில் மகிழ்ச்சி", என்று விஜய் தெரிவித்ததுடன் முடிந்தது அதிமுகவுடனான உறவு. தயாரிப்பாளர் சங்கத்திலும் எஸ்.ஏ.சந்திரசேகரின் பலம் குறைந்தது. பின்னர் நிகழ்ந்தது தான் 'தலைவா' பிரச்சனை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் விருப்பத்தின் பேரில், கோயம்புத்தூரில் அவரைச் சந்தித்தார் விஜய். கடைசியாக மெர்சல் பட வெளியீட்டில் ஏற்பட்ட தடைகள் தொடர்பாக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். பணமதிப்புநீக்க நடவடிக்கை, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ரகசியமாகக் கலந்துகொண்டது என்று, இப்படி பல ஆண்டுகளாகவே திரைப்படங்களிலும், திரைப்படங்களுக்கு வெளியிலும் அரசியலுடனேயே நடந்து வந்திருக்கிறார் விஜய். இப்படி, இதற்கு முன்னர் அரசியலுக்கும் அவருக்குமான உறவு, சரியாக அமையாமலேயே இருந்த நிலையில், மெர்சல் படத்தில் வந்த வசனங்களுக்கு தமிழிசையும், ஹெச்.ராஜாவும் தெரிவித்த எதிர்ப்பு, இந்திய அளவில் கவனத்தையும் ஆதரவையும் மெர்சலுக்கும் விஜய்க்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு கமர்ஷியல் சினிமா, கழகக் குரலாகவும், கருத்து சுதந்திரப் போராகவும் பார்க்கப்படுகிறது.
செயலும் புகழும்
தமிழ்நாட்டில், ஆரம்பத்திலிருந்தே ஆண்டாண்டுகாலமாக களத்திலிருந்து செயல்படுபவர்கள் அடையாத புகழையும் வெளிச்சத்தையும், திரைப்படங்களில் நடித்தவர்கள் எளிதில் பெற்றுவிடுவது நிகழ்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர் இதற்கு சிறந்த உதாரணமென்றாலும், அப்படி சினிமாவிலிருந்து வந்தவர்கள் அனைவருமே வெற்றியும் பெறவில்லை. சிவாஜியிலிருந்து பாக்யராஜ் வரை பல உதாரணங்கள் உண்டு. என்றாலும், மெர்சல் படத்தில் பேசப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் தொடர்ந்து பேசி வரும் சீமான், திருமுருகன் காந்தி போன்றோரின் செயல்பாட்டைத் தாண்டிய தேசிய வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறது இந்த ஒரு படம். அது போல, திரைப்படங்களை எடுத்துக்கொண்டாலும், கருத்து ரீதியாகவும், வலிமையாகவும் பன்மடங்கு அழுத்தமாக மக்கள் பிரச்சனைகளைப் பேசிய படம் 'ஜோக்கர்'. ஆனால், அந்தப் படம் இந்த அளவு விவாதிக்கப்படவில்லை. அந்தப் படம் குற்றம் சாட்டியவர்கள் யாரும் காட்டாத எதிர்ப்பும், அப்போதைய அரசியல் சூழலும் காரணம். மேலும், பிரபலமான நடிகர் இல்லாததும் ஒரு காரணம்.
நடிகர்களின் அரசியல் போட்டி
போர் வரும்வரை காத்திருக்கும் ரஜினியும், நூறு நாட்களில் தேர்தல் வைத்தாலும் போட்டியிடத் தயாராய் இருக்கும் கமலும் ஏற்கனவே நிற்கும்போதும், அவர்களைத் தாண்டிய வெளிச்சமும், தைரியமாக பிரச்சனைகளைப் பேசுகிறார் என்ற பிம்பமும் 'மெர்சல் பிரச்சனை' விஜய்க்கு அளித்த பரிசு. விஜய்க்கு இருக்கும் அரசியல் நோக்கத்துக்கு இது கொடுத்திருக்கும் மைலேஜ் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒவ்வொரு பெரிய பிரச்சனையும் நேரும்போது, அதை திசைதிருப்பும் வகையில் சில சின்ன பிரச்சனைகள் எழுவது வாடிக்கை. தமிழகத்தில் டெங்கு ஏற்படுத்தி வரும் மரணங்கள் தொடரும்பொழுது, நாட்டில் உள்ள அனைவருமே அறிந்த, ஏற்கனவே எதிர்ப்புகள் இருப்பது தெரிந்த பிரச்சனைகளைப் பேசும் வசனங்களுக்கு, சென்ஸாரெல்லாம் கடந்து வெளியான பின்பு எதிர்ப்பு தெரிவித்து, இவ்வளவு தூரம் அதை பேசுபொருள் ஆக்கியிருப்பதும் யோசிக்க வைக்கிறது. எது எப்படியோ, தமிழிசையும், ஹெச்.ராஜாவும் காட்டிய எதிர்ப்பு, 'மெர்சல்' படத்தின் வசூலுக்கும், எதிர்ப்புகளுக்கு கருத்தோ, எதிர்ப்போ தெரிவிக்காமல் மௌனம் காத்து வரும் விஜயின் அரசியலுக்கும் பா.ஜ.க
தெரிந்தோ (?) தெரியாமலோ செய்திருக்கும் பேருதவியே...
வசந்த் பாலகிருஷ்ணன்