எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. குறிவைத்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில்தான் 18-ந் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தலை விட வாக்குப்பதிவு விறு விறுப்பாகத் தொடங்கியது. தேர்தல் நாளன்று எடப்பாடி தனது சொந்தஊரான எடப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த சிலுவம்பாளையம் கிராமத்திற்குச் சென்று வரிசையில் நின்று வாக்களித்தார். அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில்தான் எடப்பாடி படித்தார். கொஞ்ச நேரம் மலரும் நினைவுகளில் மூழ்கிய எடப்பாடி, உடனடியாக சேலம் நகரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிவிட்டார். சேலத்தில் அவர் தங்கியிருப்பதால் அங்கே ஒரு மினி கண்ட்ரோல் ரூம் உருவாக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து சட்டமன்ற இடைத்தேர்தல் நிலவரங்களை கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தமுறை ஒரு வித்தியாசமான அணுகுமுறையை அ.தி.மு.க. மேற்கொண்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதுமுள்ள அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்களுக்கு 3 லட்ச ரூபாய் முதலில் கொடுக்கப்பட்டது. கிளைச் செயலாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அளிக்கப்பட்டது. தினமும் வாக்கு கேட்டுச் செல்லும் மக்களுக்கு தினசரி படியளப்பதற்கு என இந்தத் தொகை அளிக்கப்பட்டது. இந்த தொகை ஓரளவு செலவு செய்யப்பட்டது. அதனால்தான் எடப்பாடி உட்பட அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்குபெற்ற கூட்டங்களில் ஓரளவு கூட்டம் கூடியது.
கடைசிக்கட்டமாக பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஐநூறு ரூபாய், சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வாக்குக்கு நாலாயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டது. வாக்குப் பதிவுக்கு முந்தைய தினம்வரை வழங்கப்பட்ட இந்த பணத்தை விநியோகிக்கும் பொறுப்பு அமைச்சர்களுக்கு தரப் பட்டது. தஞ்சாவூர் மண்டலத்தில் பண விநியோகப் பொறுப்பை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் நெருங்கிய உறவினரான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான தவமணி என்பவர் நிர்வகித்தார்.
வாக்காளர் பட்டியல்படி கட்சி நிர்வாகிகள் இரண்டுபேர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த பணம் ஒழுங்காக போய்ச் சேர்ந்ததா என்பதை மூன்றுபேர் போய் சோதனை செய்வார்கள். அதில் ஒருவர் போலீஸ்காரர். அந்த போலீஸ்காரர், சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி.யின் சைபர்செல்லுக்கு தகவல் தெரிவிப்பார். அந்தத் தகவல் சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யான ஜாபர்சேட்டுக்கு சென்றடையும். ஜாபர்சேட் இந்த விவரங்களை முதல்வர் எடப்பாடியிடம் சொல்வார்.
பண விநியோகத்தில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பொறுப்பெடுத்துக்கொண்ட டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சரியாக அந்த வேலையைச் செய்யவில்லை. உள்துறை தலைவரான சத்திய மூர்த்தியையும் எடப்பாடி நம்பவில்லை. எதிர்க் கட்சியான தி.மு.க.வின் வியூகங்களை நன்கு தெரிந்த ஜாபர்சேட்டையே எடப்பாடி நம்பினார். ஜாபர் சேட்தான் தொகுதிக்கேற்ப வாக்காளர்களுக்கான தொகையை முடிவு செய்தார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினரும், காவல்துறையைச் சேர்ந்தவர்களும்.
"இந்தத் தேர்தல் முடிந்ததும் எடப்பாடியின் அரசியல் ஆரம்பமாகும் என வெளிப்படையாகவே சவால் விட்டதற்கு இந்தப் பண விநியோகமே தெம்பு தந்தது. அதைப் புரிந்து கொண்ட தி.மு.க.வினர், வாக்காளர்களுக்கு 300 ரூபாய் என பண விநியோகம் செய்தனர். தினகரனின் அ.ம. மு.க.வினர் 250 ரூபாய் கொடுத்தனர்' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். பல ஆயிரம் கோடிகளை வாரியிறைத்த பிறகும் எடப்பாடிக்கு தேர்தல் தொடர்பான நல்ல ரிப்போர்ட்டை போலீஸார் தரவில்லை. அ.தி.மு.க.வின் பண விநியோகம் வழக்கமாக இலைக்குப் போடும் பெண் வாக்காளர்களை இம்முறை கவரவில்லை. ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்கிறார்கள் என அ.ம. மு.க.வினர் மீது நடத்திய போலீசின் துப்பாக்கிச் சூடு, "எதிர்பார்ப்புடன்' உள்ள மக்களிடம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, எடப் பாடியை எட்டியது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் இழுத்துப் பிடித்து அ.தி.மு.க. முன்னேறுகிறது என ஏற்கனவே மாநில உளவுத்துறை போலீசார் தெரிவித்திருந்த நிலையில்... இந்தத் திடீர் சூழல் எடப்பாடியை பதற வைத்தது. ஆண்டிப்பட்டியைப் போலவே மிகக் கடுமையான போட்டியில் பெரியகுளம் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு சாதகம் என போலீசார் கணித்திருந்தனர்.
தினகரனின் அ.ம.மு.க., அ.தி.மு.க.வின் வாக்குகளை அதிகமாகவே பிரிக்கும் என்பதையும் எடப்பாடிக்கு நோட் போட்டுள்ளதாம் உளவுத்துறை. அவர் குறிவைத்த இடைத்தேர்தல் தொகுதிகளில் சில சாதகமாகவும், சில வேறு மாதிரியாகவும் இருப்பதாக ரிப்போர்ட் வந்ததால், 18-ந் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் எடப்பாடியின் முழுக்கவனமும் அடுத்ததாக பிறகு தேர்தல் நடக்கும் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் நோக்கி திரும்பிவிட்டது. ஒட்டுமொத்த தமிழக அமைச்சர்களும், அந்த நான்கு தொகுதிகள் நோக்கி பயணிப்பார்கள். அங்கு அதிகம் பணம் பாயும் என முன்னறிவிப்பு தருகிறார்கள் அ.தி.மு.க.வினர்.