திருக்குறள் தொடர்பான விவாதங்கள் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவிப்பது, அவரின் சிலைக்கு மை அடிப்பது, சிலையை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திருக்குறள் தொடர்பாகவும், திருவள்ளுவர் தொடர்பாகவும் மு.பெ சத்தியவேல் முருகனார் அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். நம்முடையை கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
கடந்த சில நாட்களாக திருக்குறள் பற்றிய சர்ச்சைகள் அதிகம் எழுவதை பார்த்திருப்பீர்கள். தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும், உத்ராட்சை மாலை போட்டும் புகைப்படம் வெளியிட்டு இருந்தார்கள். கடவுள் வாழ்த்து பாடியிருக்கின்ற திருவள்ளுவர், கடவுள் பற்றி பேசியிருக்கின்ற திருவள்ளுவர், அந்த காலத்தில் வேறு எந்த மதமும் இருக்க வாய்ப்பில்லாத நிலையில் அவர் இந்துவாக இருக்கவே வாய்ப்பிருப்பதாக அவர்கள் காரணமாக கூறுகிறார்கள். அந்த அடிப்படையில் நாங்கள் திருவள்ளுவரை கொண்டாடுகிறோம் என்று கூறுகிறார்கள். எந்த அடையாளமும் இல்லாத ஒருத்தரை நாங்கள் எங்கள் அடையாளத்தோடு கொண்டாடுகிறோம் என்கிறார்கள். இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
இதைவிட ஒரு போலியான வாதத்தை யாராலும் வைக்க முடியாது. அவர்கள் சொல்வது உண்மை போல தெரிகின்ற பச்சையான பொய். அதில் துளியளவு கூட உண்மை இல்லை. வள்ளுவர் எப்படி இருந்தார் என யாருக்கு தெரியும். வள்ளுவர் புகைப்பட நிலையத்திற்கு சென்று ஏதாவது புகைப்படம் ஏடுத்தாரா? நாமாக எதுவும் சொல்லக்கூடாது. எந்த கொள்கைக்கு எதிராக அவர் பேசினாரோ அதற்கு ஆதரவாக நாம் அவரை வைத்து பேசக் கூடாது இல்லையா? அவருக்கு கோயில் இருப்பது இன்னபிற விஷயங்கள் எல்லாம் தங்களுக்கு தோன்றியவாறு அவற்றை உருவாக்கியவர்கள் வகைப்படுத்திக் கொண்டார்கள்.
திருவள்ளுவர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று தான் தொடங்குகிறார். எனவே அவர் இறை நம்பிக்கையோடும், சமய நம்பிக்கையோடும் அவர் இருந்ததாக ஒருசாரார் கூறுகிறார்களே?
இல்லை, இதில் ஒரு தெளிவு வேண்டும், வள்ளுவருக்கு இறை நம்பிக்கை இருந்தது. ஆனால் சமய நம்பிக்கை இல்லை. சமயம் என்று ஒரு செட் ஆப் பாலிசி. அதில் வள்ளுவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், மனிதனை மீறிய ஒரு சக்தி உண்டு என்று அவர் உறுதியாக நம்பினார். அந்த வகையில் அவருக்கு இறை நம்பிக்கை இருந்ததாக நம்பலாமே அன்றி, சமயநம்பிக்கை இருந்ததாக எங்கும் அவர் சொல்லவில்லை. மயிலாப்பூரில் உள்ள கோயிலில் கூட திருவள்ளுவர் சம்பந்தமான ஆபாச கதைகள் இருக்கிறது. ஆதி பகவன் என்பதற்கு அவர்களுக்கு மனதிற்கு பிடித்தவாறு கதைகளை உண்டாக்கி சமூகத்தில் உலவ விட்டுள்ளார்கள். மேலும் திருவள்ளுவர் பூணூல் போட்டிருந்தார் என்று இட்டுகட்டிய பொய்களை கூறுகிறார்கள். அதுவும் அவருக்கு கலைஞர் துண்டு போட்டு அதனை மறைத்துவிட்டதாகவும் சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி எல்லாம் எதுவும் இல்லை.
அவரை தவறாக சித்தரிக்க முயல்பவர்கள் கூறும் பொய்கள்தான் இவை. அடுத்து அவர் காவி உடை அணிந்தார் என்று கூறுவது. அது முற்றிலும் தவறான ஒன்று. வள்ளுவர் எப்போதும் காவி உடை அணியவில்லை. ஏனென்றால் காவி தமிழகத்துக்கு எப்போது வந்தது என்று முதலில் பார்க்க வேண்டும். அசோகர், அவருடைய காலத்தில் பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்காக முதலில் இலங்கைக்கு சென்று அங்கு அதனை துவங்க வேண்டும் என்று விரும்பினார்கள். இது முதலாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்ததாக கூறுவார்கள். இதற்காக அவர்கள் தமிழகம் வழியாக இலங்கை சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் காவியை அணிவர்கள். அவர்கள் வழியாகவே இந்த காவி இங்கு வந்தது. அதற்கு முன்னரே வாழ்ந்த திருவள்ளுவருக்கும் இந்த காவிக்கும் சம்பந்தமில்லை.