Skip to main content

"பகவத் கீதை தெற்கே வரும்போது திருக்குறள் ஏன் வடக்கே செல்லவில்லை.." - ஆளுர் ஷானவாஸ் ஆவேசம்!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

திருக்குறள் தொடர்பான விவாதங்கள் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவிப்பது, அவரின் சிலைக்கு மை அடிப்பது, சிலையை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசிகவை சேர்ந்து ஆளூர் ஷானவாஸ் தெரிவித்த கருத்துகளை காண்போம். இதோ அவரின் அதிரடி பேட்டி,

திருவள்ளுவர் படத்துக்கு காவி உடை அணிவித்து, ருத்ராட்சை மாலை அணிவித்து இந்துத்துவ வாதி திருவள்ளுவர், இந்துமதம் சார்ந்த கருத்துக்களை பரப்பினார் என்று தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாஜக திருவள்ளுவரை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?

திருவள்ளுவரை கொண்டாடுவது என்றால் என்ன? திருவள்ளுவரை எப்படி எல்லாம் கொண்டாடினார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்த கொண்டாட்டங்களை சொல்லுங்கள். கொண்டாடுவது என்றால் என்ன? உங்களை உங்கள் நிறுவனத்தின் தலைவர் கொண்டாடுகிறார் எனறால், வெறும் வாய் பேச்சில் மட்டும் அது இருந்துவிட்டு, உங்களுக்கான ஊதியத்தை தரவில்லை என்றால், அதற்கு பெயர் கொண்டாட்டமா? இதை போன்றதே பாஜகவின் திருக்குறள் பாசம். உலகம் முழுவதும் பிரதமர் போகிறாரே, அங்குள்ள பல்கலை கழங்களில் பேசி திருக்குறளை ஒரு பாடத்திட்டமாக வைக்க ஏதேனும் முயற்சியில் ஈடுபட்டாரா? அப்படியான தகவல் இதுவரை உங்களுக்கு தெரிந்து வந்துள்ளதா? எங்கள் நாட்டில் எந்த மதத்தையும் சாராத, எந்த சாதியையும் குறிக்காத ஒரு நீதிநெறி நூல் இருக்கிறது. அதனை நீங்கள் பாடத்திட்டமாக வைத்து பயன்பெறுங்கள் என்று அவர் ஏன் கூறவில்லை. உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டிற்கும் பிரதமர் சென்றுவிட்டாரே! அவரை யார் அதற்கான முயற்சி எடுக்க வேண்டாம் என்று கூறியது. வெளிநாட்டுக்கு செல்லும் இடங்களில் இரண்டு திருக்குறளை சொல்வதினால் திருக்குறளுக்கு உரிமை கோரலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறு தமிழர்களை ஏமாற்ற முடியாது.

திருக்குறள் மீது இவ்வளவு பாசம் இருப்பதாக கூறும் அவர்கள், ஹார்வேடு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு உதவி செய்தார்களா? சமஸ்கிருதத்துக்கு பல இருக்கைகள் இருக்கும் போது, தமிழுக்கு ஒரு இருக்கையாவது வேண்டும் என்று தமிழகம் அதற்கான பணிகளில், நிதி வசூலில் ஈடுபட்ட போது அதற்கு மத்திய அரசு ஆதரவை வழங்கியதா? குறிப்பாக தமிழகம் முழுவதும் அந்த இருக்கைக்காக ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று வசூல் செய்தார்கள். தமிழக அரசு தன் பங்கிற்கு நிதி அளித்தும் அந்த நிதியை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு மத்திய அரசு எப்படி எல்லாம் இடையூறு செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். அமைச்சர் மாஃபா பாண்டியரஜனை கேட்டால் அதுக்குறித்து முழு விவரத்தையும் சொல்வார். ஆனால் இப்போது கூறுவாறா என்று தெரியவில்லை.  ஆனால், திருக்குறளின் பெருமையை யார் வேண்டுமானாலும் பேசலாம் என்கிறார். ஹார்வேடு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் நிதி அளித்தது. பாஜக அப்போது என்ன சொன்னது தெரியுமா? இப்போது தெலுங்கானா ஆளுநராக இருக்கின்ற தமிழிசை என்ன சொன்னார் தெரியுமா?  அந்த இருக்கை அமைவதற்கு பாஜக நிதி அளிக்காது என்று தெரிவித்தார். அவர்கள் திருக்குறளின் பெருமையை உலகுக்கு எடுத்துக்கூற இதுவரை எந்த ஆக்க பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை. அதனை மறைக்கவே இப்போது அதுக்குறித்து இல்லாத பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.
 

df



இவர்கள் திருவள்ளுவருக்கு என்ன அடையாளம் கொடுக்க முயல்கிறார்கள். வைணவ அடையாளம் கொடுக்க முயல்கிறார்கள். இந்து தத்துவஞானி, இந்துத்துவ கருத்துக்களை திருவள்ளுவர் பேசியதாக அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். இந்து என்பதும், வைணவம் என்பதும் எத்தனை ஆண்டுகாலமாக இந்தியாவில் இருக்கிறது. ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் எந்த வைணவ மடம் திருக்குறளை ஏற்றுக்கொண்டது. திருவள்ளுவரின் புகழை பரப்பியது. அப்படி ஏதேனும் தகவல் இருக்கிறதா? பகவத் கீதை ஒரு வைணவ நூல். அதை தமிழகம் வரை கொண்டு சேர்க்க அவர்களால் முடிந்துள்ளது என்றால், திருக்குறள் ஏன் வடக்கே செல்லவில்லை. அவர்கள் வட மாநிலங்களில் அதன் புகழை பரப்ப வேண்டியதானே. அவர்களை யாரேனும் தடுத்தார்களா? தலைநகரில் வள்ளுவருக்கு சிலை இருக்கிறதா? அவர்கள் ஆளும் மாநிலங்களிலாவது அவருக்கு சிலை அமைத்துள்ளார்களா? அல்லது அந்த மாநிலங்களில் உள்ள பல்கலை கழகங்களில் உள்ள பாடத்திட்டத்தில் ஆவது திருக்குறள் இருக்கிறதா? அப்படி எந்த தகவலாவது அவர்களிடம் இருந்தால் அதனை வெளியிட வேண்டியதானே?  அவர்கள் இவ்வளவு நாள் என்ன செய்தார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வயது நூறு. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரத்தில் வந்துவிட்டார்கள் தானே? அப்புறம் என்ன, பகவத் கீதை மாதிரி திருக்குறளை வடபுலங்களில் கொண்டு சேர்ந்திருக்க வேண்டியதானே?

திருக்குறள் வைணவ நூலாக அவர்கள் சொல்வது போல இருந்திருந்தால் காஞ்சி சங்கரமடம் அதை ஏற்றுக்கொண்டிருக்குமே? சங்ராச்சாரியார்கள் அதனை ஆதரிப்பார்களா? திருக்குறளை வைணவ நூலாக உரிமை கொண்டாடும் நீங்கள் இதனை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். குமரியில் விவேகானந்தருக்கு சிலை வைக்க ஆர்எஸ்எஸ் உதவி செய்யவில்லையா? திருவள்ளுவருக்கு குமரியில் சிலைவைக்க ஐம்பது ஆண்டுகள் கலைஞர் போராடினார். திராவிட ஆட்சியாளர்கள் வந்தபிறகே திருக்குறளுக்கான அங்கீகாரம் கிடைக்க பெற்றது. ஆகையால் இப்போது இவர்கள் மேற்கொள்ளும் நாடகம் எல்லாம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. திருக்குறளை ஆயுதமாக்கி தமிழகத்தில் கால் பதிக்கலாம் என்று அவர்கள் நினைப்பார்களே என்றால் ஏமாறுவது அவர்களாகத்தான் இருக்கும்.