தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினம் விரைவில் கொண்டாடப்பட இருகிறது. வாழ்நாள் எல்லாம் மனிதத்தையும், இயற்கையையும் நேசித்த அவர் இந்த பூமியில் அவதரித்த இந்த நன்நாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு அவருடைய பிறந்தநாளை இயற்கை விதைகள் மீட்பு மற்றும் பராமரித்தல் விழாவாக கொண்டாட முடிவுசெய்யப்பட்டு, அதன்படி சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கல்லூரியில் 'விதை விதைத்தாய்' என்ற பெயரில் நாளை இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பூபேஷ் நாகராஜன் மற்றும் நல்லகீரை நிறுவனத்தின் தலைவர் ஜெகநாதன் ஏற்பாட்டில் நடைபெற இருக்கும் இந்த விழாவில், சமகால தலைமுறையால் கைவிடப்பட்ட உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும் 150 நாட்டு காய்கறி விதைகளை மீட்டெடுத்து, அவைகளை பயிரிட்டு, பாதுகாக்கும் நிகழ்ச்சியாக அது அமையவிருக்கிறது.
மேலும், செயற்கை கருவூட்டல் முறையில் உற்பத்தியாகும் காய்கறிகளால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை காட்டிலும், நிலத்திற்கு ஏற்படும் தீமை சொல்லிமாளாது. இயற்கை உரங்கள் பயன்படுத்தியபோது வராத வியாதிகள் எல்லாம் இப்போது, புதிதாத பிறப்பதற்கு நன்மை பயக்கும் நாட்டு காய்கறி விதைகளை எல்லாம் கால ஓட்டத்தில் நாம் புறந்தள்ளியதே காரணம் என்பதை இந்த விழா அனைவருக்கும் உணர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உடல் நலத்தின் முக்கியத்துவத்தையும், மண்ணின் மகத்துவத்தையும் இன்றைய நவீன கால இளைஞர்களுக்கு புரிய வைக்கும் ஒரு அற்புதமான நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் தலைவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், ஆசிரிகள்கள் என பெருந்திரளானவர்கள் பங்கேற்க இருகிறார்கள். இந்த நவீனகாலத்தில் நாம் இயற்கையை வளப்படுத்த எதையும் செய்ய இயலவில்லை என்றாலும், நாம் உடலுக்கு வளம் தரும் எதையெல்லாம் இழந்தோம் என்பதை கண்டறிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி பேருதவியாக இருக்கும் என்பதே உண்மை.