தேர்தல் தந்த படுதோல்வியால் தினகரனின் அ.ம.மு.க.விலிருந்து அ.தி.மு.க.விற்கோ, தி.மு.க.விற்கோ ஜம்ப் ஆவதற்கு அக்கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலர் தயாராக உள்ளனர். இந்த நிலையில்தான், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்றுடன் வெளியேறிய தென் ஆப்பி ரிக்கா அணியைப் போல் இருக்கும் அ.ம.மு.க.வை கரையேற்ற என்ன செய்யலாம் என விவாதிக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு திருச்சி வயலூரில் கடந்த 22-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தார் தினகரன்.
21-ஆம் தேதி இரவே திருச்சி வந்து சங்கம் ஓட்டலில் தங்கினார் தினகரன். ஓட்ட லுக்கு வந்த மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் ரெடிமேட் சிரிப்பை உதிர்த்துவிட்டு, உணவுக்குப் பின் உறங்கச் சென்றுவிட்டார். மறுநாள் காலை பத்து மணிக்கு ஓட்டலிலிருந்து கிளம்பிய தினகரன், அல்லித்துறை நால்ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, கூட்டம் நடக்கும் வயலூரை நோக்கி கிளம்பினார்.
வழக்கம் போல் வழி யெங்கும் இருந்த ஃப்ளக்ஸ் பேனர்களில் பளீர் சிரிப்புடன் இருந்தார் தினகரன். மேளதாளம், முளைப்பாரி வரவேற்பு என எல்லாம் முடிந்ததும் வயலூர் முருகன் கோவில் பிரசாதத்தையும் வெள்ளி வேலையும் பெற்றுக் கொண்டு கூட்ட அரங்கிற்கு வந்தார். திருச்சி வடக்கு, தெற்கு மாநகர மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். சிலர் மட்டுமே மேடையில் அமர வைக்கப்பட்டனர். அ.ம.மு.க.வின் திருச்சி வேட்பாளராக போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் பேசும்போது, ""ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி போல தினகரனும் தமிழகம் முழுவதும் நடைபயணம் போகவேண்டும்'' என்றார். மாநகரச் செயலாளர் சீனிவாசனோ, வோட்டிங் மிஷின்ல 1 ஓட்டுப் போட்டா 9 ஓட்டு அவர்களுக்கு விழுகிறது... இப்படி இருந்தா எப்படி?''’என புலம்பினார்.
கடைசியாக மைக் பிடித்த தினகரன், இங்கிருக்கும் மேல் மட்ட தலைவர்களும் சுயநல வாதிகளும் எப்போது வேண்டுமானாலும் கட்சி மாறலாம். ஆனால் தொண்டர்கள் இங்கு தான் இருப்பார்கள். முக்கால்வாசி பூத்துகளில் நமக்கு ஒரு ஓட்டுகூட விழல. என் வீடு இருக்கும் பூத்திலேயே 14 ஓட்டுதான் விழுந்திருக்கு. "அப்பா நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?'ன்னு என் பொண்ணு கேட்குற அளவுக்கு நிலைமை ஆகிப்போச்சு. இத என்னன்னு சொல்ல, என்னத்த சொல்ல''’என விரக்தியில் புலம்பிய தினகரன், "இரட்டை இலை யை நிச்சயம் மீட்பேன்' என்ற வழக்கமான வார்த்தையைச் சொல்லவும் தவறவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்தும் பல சந்தேகங்களை எழுப்பி, கண்டனம் தெரிவித்தார்.