Skip to main content

பாஜகவை பயமுறுத்திய ஒற்றை வார்த்தை, பரபரப்பான நாடாளுமன்றம்...

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

இன்று தமிழ்நாடு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
 

periyar



அனைத்து தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்களும் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். ஒவ்வொருவரும் வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பெரியார், வாழ்க அம்பேத்கர் என தமிழ், தமிழ்நாடு, தலைவர்கள் சார்ந்து முழக்கமிட்டனர். இவையனைத்திற்கும் பாரத் மாதாக்கி ஜே போன்ற எதிர்குரல்கள் வந்தன. 

இப்படியாக முதல்நாளே மொழி பிரச்சனை தொடங்கியது. இந்த முறை அந்தந்த மாநில மொழிகளில் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதனால் நேற்றிலிருந்தே பிறமொழிகளில் பதவியேற்றபோது சலசலப்பு இருந்தது. இன்று 39 உறுப்பினர்கள் தொடர்ந்து தமிழில் பதவியேற்றவுடன் அந்த சலசலப்பு அதிகமானது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி நாடாளுமன்றதொகுதி உறுப்பினர் கனிமொழி, தனது பதவியேற்பின் முடிவில் வாழ்க பெரியார் எனக்கூறினார். அப்போது உடனடியாக ஜெய் ஸ்ரீராம் என கோஷங்கள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இப்படியாக முதல்நாளே தமிழ்நாடு மக்களவை உறுப்பினர்கள் தங்களின் வலுவான குரல்களை பதிவுசெய்துள்ளனர். 

ஒருவர் குறித்து கூறியவுடன் உடனே எழும் எதிர்ப்புதான், அவர் கூறிய கொள்கையும், அவரின் வழிகளும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கான சாட்சி. அந்தவகையில் இன்றும் பெரியார் என்று கூறியவுடன், உடனே ஜெய் ஸ்ரீராம் என எழுந்த கோஷம்தான் அவர் கொள்கையும், அவரின் கோட்பாடும் இன்னும் உயிர்ப்புடனும், வலுவாகவும் இருக்கிறது என்பதற்கு சாட்சி.

முன்பு பெரியாரின் சிலைகள் வலதுசாரி இயக்கங்களின் கண்களை உறுத்திக்கொண்டிருந்தது, அதனால் அவரின் சிலைகள் உடைக்கப்பட்டன. இன்று அவரின் பெயரே அவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், பீதியை கிளப்புவதாகவும் அமைந்துள்ளது. பெரியார் இன்றும், என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். வாழ்க பெரியார்...