அதிமுக அரசின் மிக மோசமான யோசனைகளில் ஒன்று. மழை வரவேண்டும் என்பதற்காக யாகங்கள் செய்ய சொன்னது. இத்தனை வருட தமிழ்நாட்டின் ஆட்சியில் இப்படியொரு திட்டத்தை யாரும் செய்ததில்லை. மழை வருவதற்கான எந்த வழியையும் செய்யாத அதிமுக அரசு யாகம் நடத்திவிட்டால் மழை வந்துவிடும் என நம்புவது எவ்வளவு முட்டாள்தனம்.
கடந்த ஏப்ரல் 29ம் தேதி மழைவரவேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் செய்யவேண்டும் என கோவில்களின் நிதி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளும் அரசு துறையான அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை மற்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போதும் மழைவேண்டி யாகம் நடத்த அதிமுகவினருக்கு கூட்டாக உத்தரவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோட்டிலுள்ள ஒரு கோவிலில் யாகம் நடத்தியுள்ளார். புயல்வந்தபோது வீழ்ந்த மரங்களுக்கெல்லாம் மாற்று நடவடிக்கைகளாக என்ன செய்தீர்கள் என்ற நீதிமன்றத்தின் கேள்விக்கு விடையில்லை, முறையாக பராமரிக்க வேண்டிய இயற்கை கொடைகளை பராமரிக்கவில்லை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதியளித்ததனால், ஆண்டாண்டு காலமாக தானாக வளர்ந்த மரங்களெல்லாம் அரை நிமிடத்தில் வெட்டப்பட்டது. முறையாக தூர்வாரி நீர் சேமிக்கவேண்டிய இடங்களையெல்லாம் தூர்வார நடவடிக்கை இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக போராட்டம் நடந்து, நீதிமன்றம் தடைபோட்ட எட்டுவழிச்சாலையை மீண்டும் கொண்டுவருவோம் என முதல்வர் கூறியிருக்கிறார்.
இப்படியாக செய்வதையெல்லாம் செய்துவிட்டு மழைவேண்டும் என்று யாகம் நடத்தினால் எல்லாம் சரியாகிவிடுமா. இதுஒரு சங்கிலிதொடர் நாம் ஒரு இடத்தில் செய்யும் தவறு ஒட்டுமொத்த சுழற்சியையும் பாதிக்கும். காலம்காலமாக நாம் செய்த தவறின் விளைவைதான் இங்கு நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
அதே தவறை மீண்டும் செய்யாமல், அதை சரிசெய்ய என்ன செய்யலாம் என்ற வழியைக் காண்பதும், அதை செயல்படுத்துவதும்தான் அறிவியல் பார்வையும், சரியான பார்வையும் கூட. அதைவிட்டுவிட்டு மூடநம்பிக்கையில் திளைத்து யாகம் செய்வது தவறானதாகும். நீங்கள் தனிமனிதர்கள் அல்ல, ஒரு அரசாங்கம் அதை கருத்தில்கொண்டு செயல்படவேண்டும். இதையெல்லாம் தெரியாமல் செய்கிறீர்களா அல்லது அனைத்தும் தெரிந்தும் இப்படி செய்கிறீர்களா என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.