விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஏரியிலிருந்து அளவுக்கதிகமாக மண்ணெடுத்து நெடுஞ்சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டிவனம் அருகே உள்ளது பட்டணம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும் பாலானோர் விவசாயத்தை நம்பியே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அதேபோல் இங்கு உள்ள விவசாய பெருமக்கள் இப்பகுதியில் உள்ள சுமார் 173 ஏக்கர் பரப்பளவு உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் மழை நீரினால் ஏரி பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் கடந்த 22 ஆம் தேதியிலிருந்து சுமார் தினசரி 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் 5 யூனிட் அளவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மண் திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மண் எடுக்கும் பகுதிக்கு சென்று அவர்களிடம் கேட்டதற்கு தாங்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்தான் மண் அள்ளுவதாக தெரிவித்தனர். அதேபோல் அதற்குரிய ஆவணங்களும் எங்களிடம் உள்ளது என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் கொடுத்த ஒப்புதல் அறிக்கையில், இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் இந்த ஏரியை தூர்வாருவதற்காக கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த ஏரியில் மண் எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் பொதுமக்கள் தரப்பில் யாரும் கோரிக்கை வைத்ததாக தெரியவில்லை. அதற்குரிய கோரிக்கை மனுவும் வழங்கப்படவில்லை. மேலும் அதில் ஒரு மீட்டர் அளவிற்கு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அந்த மண் எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த எந்தவித வாசகமும் இடம் பெறவில்லை. ஏரியில் சுற்றுப்பகுதி முழுவதும் ஒரு மீட்டர் அளவில் ஆழப்படுத்தி அந்த மண்ணைக் கொண்டு ஏரி கரையை பலப்படுத்தினால் மட்டுமே நீர் ஆதாரத்தை பெருக்கி அந்த நீரைக் கொண்டு அப்பகுதி விவசாயிகள் பயன்பெற முடியும்.
அதைவிடுத்து ஏரியின் மையப்பகுதியில் சுமார் மூன்று மீட்டர் அளவிற்கு ஆழப்படுத்தப்பட்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பட்டணம் ஏரியில் மண் எடுப்பது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரித்தேன். அதற்கு அவர் அரசு அனுமதியோடுதான் மண் எடுப்பதாக கூறுகிறார். ஆனால் மண் தோண்டுபவர்கள் அவர்கள் வைத்திருக்கும் அந்த அனுமதி உத்தரவை இந்த மண் இதற்காக எடுக்கப்படுகிறது, எங்கே கொண்டு செல்லப்படுகிறது எத்தனை ரோடு முன்னெடுக்கப்படும் இப்படி எந்த விபரமும் இல்லை.
மேலும் ஏரி என்று இருந்தால் அதில் உள்ள வண்டல் மண் மட்டும்தான் எடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் சுரங்கம் போல தோண்டுகிறார்கள். இது பிற்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும். காரணம் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் பட்டணம் ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின்படி ஊர் மக்கள் வேலை செய்தார்கள். அப்போதே கண்டபடி மண் தோண்டி ஆங்காங்கே மிக ஆழமான பள்ளங்கள் இருந்ததால் 100 நாள் வேலை செய்தவர்கள் மீது ஏரி மண் சரிந்து அதில் நாலு பேர் இறந்து போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதிகாரிகள் இந்த ஏரியில் மண் எடுத்து சம்பந்தமாக நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். மண்ணெடுத்த பகுதிகளை சமப்படுத்த வேண்டும் கரையை பலப்படுத்த வேண்டும் என்கிறார், இந்த ஏரியின் மூலம் பாசனம் பெறும் விவசாயி.
ஊரல் கிராமத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அண்ணாதுரை, எடுக்கப்பட்ட பள்ளத்தில் மழைக்காலங்களில் தேக்கி நிற்கும் நீரில் அப்பகுதி சிறுவர்கள் ஆழம் தெரியாமல் அதில் இறங்கி குளிக்கும்பொழுது உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதேபோல் பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் வெளியேற வழியின்றி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே வருடங்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏரியில் மண் எடுக்கப்படும் சம்பவத்தால் விளைநிலங்கள் நீரின்றி கருகும் அபாயம் உள்ளது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஏரி பகுதியில் ஆய்வு செய்து சரியான முறையில் மண் எடுக்கப்படுகிறதா என்றும் அதேபோல் அரசு அனுமதி வழங்கிய 500 லாரிகள் மட்டுமே எடுத்துச்செல்லப்படுகிறதா? என்றும் அதிக அளவில் மண் கொள்ளையடிக்கப்படுகிறதா? என்று ஆட்சியர் ஆய்வு செய்து, அதிகளவில் கொள்ளையடிக்கபடுபவை தடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். பட்டணம் ஏரியில் வரைமுறையற்ற அளவில் சுரங்கம் போன்று மண்ணெடுப்பது சம்பந்தமாக செய்திகள் வெளியானதை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் எடுக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஏரிப் பகுதியில் கீழே உள்ள கெட்டியான மண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதிகாரிகளோ மேற்பரப்பிலுள்ள பயனற்ற மண்ணை அவர்கள் வெட்டிய குழியில் கோட்டி சமன்செய்து ஒரு மீட்டர் அளவில் உள்ளதுபோல் வைத்து அதனை புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பும்படி கூறிச் சென்றதாக தெரிகிறது. இந்த ஏரி மண் எடுக்கப்படுவதில் அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏரி தூர்வாரல் என்ற பெயரில் சுரங்கம் தோண்டப்படுகிறது. பொதுவாக பொதுப்பணித்துறை ஏரிகளில் குறிப்பிட்ட அளவிற்கு படிந்துள்ள வண்டல் மண்ணை அந்தந்த பகுதி விவசாயிகள் எடுத்துச்சென்று நிலத்திற்கு அதை உரமாக பயன்படுத்துவார்கள். இதன்மூலம் ஏரி தூர்வாரப்படும் அந்த ஏரிகள் மூலம் நீர் நிரம்பி பாசனம் பெறும் விவசாயநிலங்கள் வண்டல் மண் நிரப்பப்படுவதன் மூலம் மண் வளம் பெருகி விவசாய மகசூல் அதிகரிக்கும். இதுதான் காலம்காலமாக நடைமுறையில் உள்ள பயன்பாடுகள். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு ஏரிகளில் ஏற்கனவே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டபோது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த பல்வேறு ஏரி குளங்ளில் இதேபோன்று அளவுக்கதிகமாக மண்ணை தோண்டி எடுத்து சாலைக்கு பயன்படுத்தினார்கள். அந்த ஏரிகளில் ஏற்பட்ட அளவுக்கதிகமான மேடு பள்ளங்களை சமன் செய்யாததால் இதனால் மழைக்காலங்களில் ஏரி குளங்களில் நீர் நிரம்பி குளிக்கச் செல்லும் பள்ளி, கல்லூரி இளைஞர்கள் பெண்கள் என பல பேர் அவ்வப்போது நீரின் ஆழம் தெரியாமல் இறங்கிக் குளிக்கும்போது மூழ்கி இறந்து போகிறார்கள்.
இது விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பட்டணம் கிராமத்தின் பாசன ஏரியில் அளவுக்கு அதிகமாக சுரங்கம் தோண்டி அக்கிராம மக்களை ஆபத்தில் சிக்க வைக்கப் போகிறார்கள். மேலும் ஏரியை அளவுக்கதிகமாக தோண்டுவதால் மழைக்காலங்களில் அதிக நீர் வரத்து வரும் அப்படி வரும் நீரை தேங்கி நிற்கும் அளவிற்கு கரை பலம் இல்லாததால் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலையும் உள்ளது. இப்படிப்பட்ட எதார்த்த நிலைமைகளை உணராமல் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான போக்கினால் ஏரிகளை மராமத்து செய்கிறேன் என்ற பெயரில் சுரங்கம் தோண்டி கிராம மக்களை அதில் சாகடிக்க போகிறார்கள் என்கிறார்கள். ஏரி தூர்வாரி நீரம்பி அதன் மூலம் விவசாயம் செழிக்க வேண்டும். அப்போதான் விவசாயிகளால் வாழ முடியும் அவர்கள் உழைத்து உணவு அளித்தால்தான் நகர மக்களும் வாழமுடியும். எனவே பொதுப்பணித்துறை ஏரிகளை தூர்வாரும் பணியில் முறையான அளவில் ஏரி தூர்வாரும்போது அதன் கரைகளையும் பலப்படுத்த வேண்டும் என்கிறார்கள் பட்டணம் கிராம மக்கள்.