தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை குறிவைத்து நடந்த ரெய்டு, 11.5 கோடி ரூபாய் பணம் பறிமுதல், இவற்றால் நிறுத்தப்பட்ட வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நிறுத்தப்பட்டபோது வேட்பாளர்களாக இருந்த தி.மு.க. கதிர் ஆனந்தும், புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகமும், நாம் தமிழர் தீபலட்சுமியும் இப்போது மீண்டும் களம் காண்கிறார்கள்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் பணத்தை தண்ணீராக வாரி இறைத்திருந்ததோடு... குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் தாராளமாக செலவு செய்திருந்தார். வேலூர் எம்.பி. தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் இரு எம்.எல்.ஏ. தொகுதிகளின் தேர்தல் நடந்து, இரண்டிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
வேலூர் எம்.பி. தொகுதிக்குள் அடங்கிய வேலூர், குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) சட்டமன்றத் தொகுதிகள் எடப்பாடியின் நேரடி மேற்பார்வையிலும்; வாணியம்பாடி, அணைக்கட்டு, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிகள் ஓ.பி.எஸ்.சின் நேரடி மேற்பார்வையிலும் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது ஆளும்கட்சி. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 4 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள், அவர்களுக்கான தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி. வேட்பாளர் ஏ.சி.எஸ்., தேர்தல் பணியாற்றும் ஆளும் கட்சியினரை மகிழ்விக்க, ஆம்பூர், வாணியம்பாடி, ஆற்காடு பகுதிகளில் இருக்கும் பிரியாணி மாஸ்டர்களை மொத்தமாக புக் பண்ணிவிட்டாராம். ஏ.சி.எஸ்.ஸின் தாராளம், வேலூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடம் சுறுசுறுப்பைக் கூட்டியுள்ளது.
தொகுதியில் இருக்கும் 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகளைக் கவர்வதற்கு ஸ்பெஷல் திட்டம் ஒன்றையும் வைத்துள்ளாராம் ஏ.சி.எஸ். அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக செய்துவிட்ட பரமதிருப்தியுடன் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் 11-ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார் ஏ.சி.சண்முகம்.
அதிரடி காட்டும் ஏ.சி.எஸ்.ஸை எதிர்கொள்ள எதிரடி வியூகத்திற்கு தயாராகிவிட்டது தி.மு.க. பணம் பறிமுதல் தொடர்பாக கதிர் ஆனந்த் மீது வழக்கு உள்ளதால், வேட்புமனு பரிசீலனையின்போது, ஆளும் கட்சி ஏதாவது குடைச்சல் கொடுத்தால் சமாளிக்கும் திட்டத்தை கையில் வைத்திருக்கிறார் துரைமுருகன்.
கதிர் ஆனந்த் வெற்றி பெறக்கூடாது என சாதி ரீதியாக நடக்கும் மூவ்மெண்டுகளையும் ஈகோ பிரச்சனையால் விலகி நிற்கும் சொந்தக் கட்சி நிர்வாகிகளையும் எச்சரிக்கை பாணியில் சமாளித்திருக்கிறார் துரைமுருகன். அதே சமயம் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களைத் தேடிச் சென்று நெருக்கம் காட்டி வருகிறார்.
இதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் ஜெகத்ரட்சகன், ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு பொன்முடி, அணைக்கட்டு தொகுதிக்கு ஐ.பெரியசாமி, கே.வி.குப்பத்திற்கு கே.என்.நேரு, குடியாத்தம் தொகுதிக்கு தா.மோ.அன்பரசன், ஆம்பூருக்கு எ.வ.வேலு, வாணியம்பாடிக்கு ஈரோடு முத்துசாமி என தி.மு.க. வி.ஐ.பி.க்களையும் தேர்தல் பணிக்காக களத்தில் இறக்கியுள்ளார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.