
தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் கா. அமுதரசனை சந்தித்து நாம் பேட்டி கண்டோம். அதில் பல்வேறு விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதில் சிறு பகுதியை இங்கு தொகுத்துள்ளோம்....
“மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் போஸ்டர்களை ஒட்டினர். அவர்களுடைய மாநாட்டின் தோல்வியை மறைக்க திமுகவின் போராட்டத்தைக் காரணம் காட்டுகின்றனர். எங்களுடைய போராட்டத்தைப் பார்த்து அதிமுக தான் பயப்படுகிறது. அவர்களுடைய மாநாடு பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்று தான் நாமும் சொல்கிறோம். அவர்களே இப்போது தான் அதிமுக என்கிற கட்சியை குத்தகைக்கு எடுத்து வண்டி ஓட்டி வருகிறார்கள்.
அண்ணாமலைக்கு செல்லும் இடமெல்லாம் செருப்படி என்கிற நிலையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக எடுக்கும் எந்த முன்னெடுப்பும் எடுபடாது. எனவே இவர்களை நம்பி தமிழ்நாட்டில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ மோடி தயாராக இருக்க மாட்டார். அதையும் மீறி அவர் வந்தால் அதற்கான பலனை அவர் அனுபவிப்பார். மோடியை வீழ்த்திய மண் ராமநாதபுரம் மண் என்கிற பெருமையைப் பெறலாம். கச்சத்தீவை மீட்பேன் என்று அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. ஆனால் ஆந்திராவில் செம்மரம் வெட்டியதற்காக தமிழர்கள் கொல்லப்பட்டபோது கூட ஜெயலலிதாவால் எதுவும் செய்ய முடியவில்லை. கச்சத்தீவை மீட்கும் எண்ணம் பாஜக அரசுக்கும் இல்லை. இந்த 9 ஆண்டுகளில் பாஜக செய்துள்ள 7 ஊழல்களை சமீபத்தில் வெளியான சிஏஜி அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஊழலாக பாஜக செய்த ஊழல்கள் இருக்கின்றன. ஊழல் செய்து இவர்கள் போட்ட சாலைகளின் தரமே இவர்களின் ஊழலுக்கான சாட்சி. மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில்கள் மாடுகள் இடித்தாலே உடைந்து விடுகின்றன. மோடியின் ஊழல்கள் பற்றிப் பேச ஊடகங்கள் மறுக்கின்றன. பாஜக செய்துள்ள 18 லட்சம் கோடி ரூபாய் ஊழல் வரும் தேர்தலில் மிகப்பெரிய அளவில் எதிரொலிக்கும். மோடி அடுத்த வருடம் திகார் சிறையில் தான் கொடியேற்றுவார். சமூக செயற்பாட்டாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் பாஜக ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள். பாஜகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் டம்மி கட்சிகள்” எனத் தெரிவித்துள்ளார்.