Skip to main content

முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது! - ரெட் அலர்ட் குறித்து ரமணன்  

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
ramanan

 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 7ம்தேதி (07.10.2018) ‘ரெட் அலர்ட்’ இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ரெட் அலர்ட் குறித்தும், மழை அறிவிப்பு குறித்தும் சென்னை மக்கள் மத்தியில் பல்வேறு தகவல்கள் பரப்பப்படுகின்றன. எது உண்மை, ரெட் அலெர்ட் எவ்வளவு சீரியஸானது என்பது குறித்து சென்னை வானிலை மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணனிடம் கேட்டோம்... 

 

நேற்று ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. அதில் இன்று ஏதும் மாற்றமிருக்கிறதா?

 

இன்றைக்கு கிடைத்த தகவல்களின்படி, அதில் ஏதும் மாற்றமில்லை. அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால்தான் ரெட் அலர்ட் விடப்பட்டிருக்கிறது.

 

ஒருவேளை 7ம்தேதி ரெட் அலர்ட் உண்மையானால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

 

ரெட் அலர்ட் என்பது அதிகனமழைக்கான எச்சரிக்கைதான், வேறொன்றுமில்லை. முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

 

7ம் தேதி பயங்கரமான மழை பெய்யும். அதனால் தங்களுக்கு தேவையானவற்றை முன்னரே வாங்கிக்கொள்ளுங்கள் என வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அவ்வளவு வலிமையானதாக இருக்குமா? 

 

ஒரு சில இடங்களில் அதிகனமழை வர வாய்ப்பு இருக்கிறது. அதற்கேற்றார்போல் நாம் நடந்துகொள்ளவேண்டும், அவ்வளவுதான். வாட்ஸ் அப் என்பது அதிகாரப்பூர்வமில்லாத ஒரு செயலி. அதனால் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டும் நம்புங்கள். வானிலை ஆராய்ச்சிக் கழகமோ, பேரிடர் மேலாண்மை குழுவோ அல்லது ஆணையரோ (CRI) கூறியிருந்தால் மட்டும் நம்புங்கள்.

 

2015ல் வெள்ளம் ஏற்பட்டபோது உண்டான பாதிப்புகள் போன்று இருக்க வாய்ப்பிருக்கிறதா?

 

இத்தனை நாட்கள் மழை இல்லாததால் பூமி காய்ந்திருக்கும். மழை வரும்போது பூமியை அதை உள்வாங்கிக்கொள்ளும். இரண்டாவது, மழையால் மட்டும் வெள்ளம் ஏற்படாது. அது ஏற்பட பல்வேறு காரணங்கள் உண்டு. ஆதலால் அவையனைத்தும் வைத்துதான் தீர்மானிக்க முடியும்.