திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் மருத்துவர் V.P.B.பரமசிவம். இவரது தந்தை V.P.பாலசுப்ரமணியன் முன்னாள் சபாநாயகராவார். சுறுசுறுப்பான இளம் எம்.எல்.ஏவாக பெயர் எடுத்திருக்கும் இந்த மருத்துவர், அமைச்சர்களுக்கு செல்லப்பிள்ளையாகவும் தொகுதி மக்களுக்கு அனுசரணையாகவும் இருக்கிறாராம்.
அணைகளைச் சீரமைத்தது, புதிய தடுப்பணைகளைக் கட்டியது, புதிய தாலுகாவை உருவாக்கியது, மின்மயானத்துக்காக 20 கி.மீ. தூரமுள்ள திண்டுக்கல் நகருக்குச் சென்று கொண்டிருந்த மக்களுக்கு வசதியாக தொகுதிக்குள் மின்மயானம் அமைத்தது எனத் தொகுதி முழுவதும் பரவலாக பல பணிகளை மேற்கொண்டுள்ளார் பரமசிவம்.
மருத்துவ முகாம்களைப் பொறுத்தவரையில், தான் அரசியல் பற்றி யோசிக்காத காலத்திலிருந்து இன்று வரை தொய்வில்லாமல் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த டாக்டர் எம்.எல்.ஏ. மேலும், தன்னுடைய குடும்பத்தில் நிறைய மருத்துவர்கள் இருப்பதால், தொகுதி மற்றும் ர.ர.க்கள் மத்தியில், 'அண்ணணை நம்பிச் சென்றால் மருத்துவ உதவி நிச்சயம்' என்ற நிலையிருக்கிறது. கட்சியிலும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் என்ற முக்கிய பொறுப்பை எட்டியுள்ள பரமசிவம், மக்களின் ஆதரவும் முதல்வர் உள்பட அமைச்சர்களின் அரவணைப்பும் இருப்பதால் இன்னொரு வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் !