தற்போது கர்நாடகவை ஆளும் பா.ஜ.க அரசு கால்நடை வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதில் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. நேற்று இதுகுறித்து கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பேசுகையில், “இன்னும் ஒன்று இரண்டு நாட்களுக்குள் கால்நடை வதை தடுப்பு அவசரச் சட்டம் கொண்டு வரப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். கடந்த புதன்கிழமை, கர்நாடக மாநில மேலவையில் இந்த மசோதாவைச் சட்டமாக இயற்ற இருந்தார்கள். ஆனால், அந்தச் சபை ஒத்திவைக்கப்பட்டுவிட்டதால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மசோதாவில் கால்நடை என்று அவர்கள் வரையறுக்கப்பட்டதில், பசு, காளை, வண்டிமாடுகள், கன்றுகள். இவை மட்டுமல்லாமல், எருமைகளையும் சேர்த்துள்ளனர். இதன் மூலம், இது ‘பொவைன்’ இன வதை தடுப்புச் சட்டமாகிறது.
மற்ற மாநிலங்களில் உள்ள சட்டத்தில் ‘போஸ் டாரஸ்’ வகை மாடுகளைக் கொல்லத்தான் தடை இருக்கிறது. மேலும், அதில் பசுக்கள், காளைகள், வண்டிமாடுகள், சேர்க்கப்பட்டன. ஆனால், ‘புபாலஸ் புபாலிஸ்’ வகையைச் சேர்ந்த எருமை மாடுகள் அதில் சேர்க்கப்படவில்லை. விலங்குகள் வகை பிரித்தல்படி ‘கேட்டில்’ என்பது ‘போஸ் டாரஸ்’ வகை. கேட்டில் மற்றும் எருமைகள் என இரண்டையும் சேர்த்துவிட்டோமனால் அது ‘பொவைன்’ இனத்தைக் குறிப்பிடுகிறது.
தற்போதைய கால்நடை வதை சட்டத்தில் கர்நாடகாவிற்கு முன்னோடியாக இருப்பது மஹாராஷ்ட்ரா. கடந்த 2015ஆம் ஆண்டு பா.ஜ.க சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, தேவேந்திர பத்நாவிஸ் முதல்வரானார். அப்போதுதான் இந்தக் கால்நடை வதை தடுப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டது. 2015ல் மஹாராஷ்ட்ரா விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் மேலும், காளைகளும், வண்டிமாடுகளும் சேர்க்கப்பட்டது. மாட்டிறைச்சிக்காக இவை கசாப்புக் கடைகளுக்கு அனுப்பப்படுவது குற்றம் என்றும், மீறினால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்றும் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு முன்பாக இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு, மஹராஷ்ட்ராவை ஆண்ட பத்நாவிஸின் அரசை மிஞ்சிவிடும் வகையில் செயல்பட்டுள்ளது. மாடுகளை இறைச்சிக்காக, கசாப்புக் கடைகளில் விற்பவர்கள் அல்லது அறுப்பவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுவதாக இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசுக்காவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் உத்திரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்தியப் பிரதேசத்தை ஆளும் சிவராஜ் சிங் சவுகான் கூட எடியூரப்பாவை போல மசோதா கொண்டுவரவில்லை என்பது ஆச்சரியம்தான்.
மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வகை மாடுகளும் 13 வயதான பின்னர் கசாப்பிற்காக அறுக்கலாம் என்ற சலுகை தரப்பட்டுள்ளது. ஆனால், பால் விவசாயிகளின் பார்வையில் பார்த்தால் ‘இது உதவிகரமான ஒன்று இல்லை’ ஏனென்றால், பசுக்கள் இனப் பெருக்கத்திற்குத் தயாராவதற்கு, சுமார் 17-18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன. சினையான பசுக்கள் 9-10 மாதங்கள் கன்றுக்குட்டி ஈன எடுத்துக்கொள்கிறது. அப்போதிலிருந்து 27 மாதங்கள் முதல் 28 மாதங்கள் வரை பால் தருகிறது. அடுத்தடுத்து கன்று ஈனுவதால், 13 மாதங்கள் பசுக்களுக்கு ஓய்வு தரப்படுகிறது. பசுக்களை ஐந்து முதல் ஆறு வருடங்கள் வரையில்தான் இனப்பெருக்கம் செய்ய வைக்கின்றனர். அதன்பிறகு அதனைக் கவனிக்கும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பதால், எட்டு ஆண்டுகள் வரையில்தான் விவசாயிகள் பசுக்களை வைத்துக் கொள்கின்றனர்.
இதே நிலைதான் எருமைகளுக்கும். அதிகப்படியாக விவசாயிகளால் ஒரு எருமையை 9 முதல் 10 ஆண்டுகள் வரையில்தான் பராமரிக்க முடிகிறது. ஆனால், கர்நாடக அரசின் மசோதாவில், 13 வயதிற்கு மேற்பட்ட மாடுகளை மட்டும் கசாப்பிற்கு அனுமதித்துள்ளதைப் பார்க்கும்போது விவசாயிகளைப் பற்றி யோசிக்காமல் வாக்கு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அப்படிக் காத்திருந்து, கசாப்பிற்கு அனுப்பினாலும் அந்த மாட்டிற்கான சரியான தொகை கிடைக்காது என்பதும் விவசாயிகளுக்கு ஒரு சோகமான விஷயம்.
2012-2019 ஆண்டு, இந்த இடைப்பட்ட காலத்தில், பா.ஜ.க ஆட்சி செய்த மாநிலங்களான உ.பி., ம.பி., குஜராத், மஹராஷ்ட்ராவில் மாட்டிறைச்சி தொழில் மிகவும் மோசமாகத் தேய்ந்துவிட்டது. எனினும் இந்த மாநிலங்களில்தான் எருமைகள், மாட்டிறைச்சிக்காக கசாப்புக் கடைகளுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் பஞ்சாப் மற்றும் ஆந்திரா மாநிலங்களிலும் பசுக்களைத் தாண்டி எருமைகளே அதிகமாக மாட்டிறைச்சிக்காக கசாப்புக் கடைகளில் அறுக்கப்படுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி தொழிலில் உ.பி-யின் இடத்தை தன்வசமாக்கியது மேற்கு வங்கம். இதில் முரண் என்னவென்றால் மிருகவதை தடைச் சட்டம் மேற்கு வங்கத்திலும் உள்ளது. அதே வேளையில் இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதில் கட்டுப்பாடு வேண்டும் என்பதற்கான சட்டமும் உள்ளது. கேட்டில் வகையோ அல்லது எருமை வகையோ கசாப்பிற்குத் தகுதியாக இருந்தால் கால்நடை மருத்துவர்கள் அனுமதி வழங்குகிறார்கள்.
இப்படிக் கொண்டுவரப்போகும் சட்டமானது கால்நடைகளைப் பாதுகாக்கும் நோக்கில்தான் என்று கூறப்பட்டாலும், கால்நடைகளை நன்கு பராமரித்துக் கவனித்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு, இது ஒரு சோகமானதே. இந்திய மக்கள் தொகையில், 15 சதவீதம் பேர் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர். ஆட்டிறைச்சி வாங்கும் அளவிற்கு வசதியற்றவர்களுக்கு மாட்டிறைச்சிதான் சிறந்த அசைவ உணவாக விளங்குகிறது. இதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் போராடிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு, இதுபோன்ற அதிக ஊட்டச்சத்துக் கொண்ட உணவை எடுத்துக்கொள்ளத் தடையாக இதுபோன்ற மசோதா இருக்கும். ‘ரைட் டூ ஃபூட்’ என்னும் ஒருவரின் அடிப்படை உரிமையிலேயே கை வைக்கிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்த பின்னர் பசுக்காவலர்கள் (பசுக்குண்டர்கள்) நடத்திய அவலங்கள்தான் எத்தனை? இந்த மசோதா பசுவைக் காப்பாற்றுவதாகக் கூறி கும்பல் தாக்குதலை நடத்தி, கொலை செய்பவர்களுக்குத் துணைபோகுமே தவிர, மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இல்லை. 2015 - 2018 ஆண்டுகளுக்கு இடையே 44 பேர் இந்த பசுக்குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுபோன்ற மசோதா சட்டமானால்?