டிஜிட்டல் யுகத்திலும் கையெழுத்துப் பிரதிக்கு மவுசு!
டிஜிட்டல் யுகம் உலகை அடுத்தகட்டத்திற்கு கூட்டிச் சென்றிருக்கிறது. ஸ்மார்ட்போன்களே விரல்நுனியின் தகவல்களைத் தந்துவிடுவதால், அச்சிடப்பட்ட புத்தகங்கள் அவற்றிற்கான மவுசினை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகின்றன. அதேசமயம், எப்போதும் காலம் பழைமையை மீட்டுருவாக்கம் செய்து, அந்தப் பழைமையின் மீதான புதிய ஈர்ப்புகளை சமகாலத்தில் ஏற்படுத்தும். அந்த வகையில், கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்கள் சிலர் நடத்தும் கையெழுத்துப் பிரதி இதழ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த பொருளாதரம் மற்றும் புள்ளியியல் அரசு துறையைச் சேர்ந்த ஊழியர்கள், மலையாள மொழியைக் காக்கும் வகையில் இந்த இதழை நடத்திவருகின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள புள்ளியியல் சார்ந்த ஆய்வுகள் மற்றும் கணிப்புகளை முழுக்க முழுக்க மலையாளத்தில் வெளியிடும் இந்த இதழுக்கு, அவர்கள் ‘நிரவு’ எனப் பெயரிட்டுள்ளனர்.
கையெழுத்துப் பிரதிகள் ஒரு காலத்தில் மிகப் பிரபலமானவையாகவும், மலிவான விலையிலும் கிடைக்கக் கூடியவையாக இருந்தன. அவற்றின் மீதான அதீத ஈர்ப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இருந்தது எது? அவற்றில் வரும் கட்டுரைகள் கேல்லிகிராஃபி எனப்படும் சித்திரமொழியில் எழுதப்பட்டிருந்ததுதான் ஈர்ப்புக்கு காரணம். இதேபாணியை எர்ணாகுளம் ஊழியர்களும் கடைபிடித்து வருகின்றனர். இவர்களின் இந்த முயற்சியைக் கண்டு, கோட்டயம் மற்றும் வயநாடு பகுதிகளைச் சேர்ந்த சில ஊழியர்களும் கையொப்பு மற்றும் கதிர் உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

ஒரு கையெழுத்துப் பிரதி இன்னமும் அழகாகத் தெரிவதற்கு முக்கியக் காரணம், அதை மெருகூட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் மெனக்கிடல்கள்தான். நிரவு பத்திரிகையைப் பொருத்தவரை சித்திரமொழி அதற்கான சுமைகளை எடுத்துக் கொள்கிறது. சாதாரண கையெழுத்துப் பிரதியில் இருந்து மாறுபட்ட தோற்றத்தைப் பெற்றிருப்பதால் நிரவு பத்திரிகை இயல்பாகவே வாசகர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்றுள்ளது.
90 பக்கங்களைக் கொண்ட இந்த நிரவு பத்திரிகையில் ஒவ்வொரு பக்கத்திலும், ஊழியர்களின் உழைப்பு பிரதிபலிக்கிறது. வண்ண எழுத்துகள், ஓவியங்கள் என அசத்தலான வேலைகளுடன் வெளிவரும் நிரவு பத்திரிகையில் கொஞ்சம் கூட அச்சு வேலைகள் இல்லை என்கின்றனர் அதன் எழுத்தாளர்கள்.
என்னதான் கையெழுத்துப் பிரதி என்றாலும், அதை உருவாக்கியிருப்பவர்கள் தொழில்நுட்பத்தில் இருந்து தூரம் சென்று விடவில்லை. பல நகல்களாக கையில் அது கிடைத்தாலும், டிஜிட்டல் வடிவில் புத்தகங்களாகவும் அனுப்பி, மலையாளத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் இளைய தலைமுறைக்கு பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சமகாலத்தில் சிறந்து விளங்கும் பல எழுத்தாளர்கள், தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியிருப்பார்கள். அவற்றின் மூலம் தங்களை வளர்த்திருப்பார்கள். சுதந்திரப் போராட்ட சமயங்களில் கையெழுத்துப் பிரதிகளின் மூலமாகத்தான் விடுதலை வேட்கை பெரும்பாலானவர்களின் மனதில் விதைக்கப்பட்டதாக வரலாறுகள் சொல்கின்றன. எழுத்தும், வாசிப்பும் உலகை புதுமையாக்கும். அது எந்த வடிவில் இருந்தாலும்.
- ச.ப.மதிவாணன்