தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் கடந்த பல வருடங்களாக தேநீர் கடை நடத்தி வரும் தங்கவேலனார் மாணவர்களுக்கு தினசரி திருக்குறள் வகுப்புகள் எடுப்பதுடன், பட்டிமன்றங்களில் பேசும் போது திருக்குறளை உதாரணமாக முன்வைத்து பேசுவது வழக்கமாக கொண்டுள்ளார்.
அதே போல திருவள்ளுவர் தினத்தில் எத்தனை பேர் வந்தாலும் ரூ ஒன்றுக்கு தேநீர் வழங்குவதும் வழக்கம்.
இந்த நிலையில் தான் திருவள்ளுவர் சர்ச்சை கிளம்பிய பிறகு திருவள்ளுவர் மீது இளைஞர்களுக்கும் பற்றுதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் முதல் முறையாக மக்கள் நலன் இயக்கத்தின் சார்பில் திரண்ட இளைஞர்கள், உலகப் பேராசான் திருவள்ளுவர் பிறந்த தினத்தில் கடைக்கு வரும் அனைவருக்கும் ரூ ஒன்றுக்கு தேநீர் வழங்கியதுடன் ஒரு மரக்கன்றையும் இலவசமாக வழங்கினார்கள். கூடவே மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களையும் வழங்கினார்கள்.
இதைப்பார்த்த ஒரு ஆசிரியர், "திருவள்ளுவரைப் பற்றி இளைஞர்கள் அறிந்திருந்தாலும் தொடர்ந்து அவரை பின்பற்றுவதில்லை. ஆனால் கடந்த சில மாதங்கள் முன்பு அவருக்கு காவி சாயம் பூசப்பட்டதால் வெகுண்ட இளைஞர்கள் இப்போது திருக்குறளையும் திருவள்ளுவரையும் பாதுகாப்போம் என்று கிளம்பியுள்ளது பாராட்டத்தக்கது" என்றார்.