பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 6ம் தேதி சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் சேலத்தில் இன்று (ஜூலை 29, 2018) செய்தியாளர்களிடம் கூறியது,
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலம் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், அவர் குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியனின் உடல் நலமும் நன்றாக உள்ளது. விரைவில் அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்கள்.
விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சேலம் - சென்னை பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு விவசாயிகளின் ஆதரவு உள்ளதாக தொடர்ந்து பொய்யான தகவலை முதல்வர் திரும்ப திரும்ப கூறி வருவது கண்டிக்கத்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத வகையில், காவல்துறையினரை வைத்து மக்களை மிரட்டி இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துகின்றனர்.
இயற்கை வளங்களை, நீர்நிலைகளை அழித்து கொண்டு வரப்பட உள்ள இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். பாதிக்கப்பட்ட மக்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர், இதுவரை கடைமடை பகுதிக்குச் செல்லவில்லை. தென்மேற்கு பருவமழை தொடர்பாக முன்கூட்டியே தகவல் அறிந்து, டெல்டா மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீரை வீணடிக்காமல் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்திட அரசு தவறி விட்டது. இதனால் தினமும் 5 டிஎம்சி நீர் கடலில் வீணாக கலக்கிறது. திமுக ஆட்சியாக இருந்திருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது.
கர்நாடகா மாநில முதல்வர் மேகதாதுவில் அணை கட்டுவதாக கூறுவதை ஏற்க முடியாது. இதனை தமிழக அரசு தடுத்திட வேண்டும். கர்நாடகா முதல்வர் குமாரசாமி இதுகுறித்து பேச வந்தால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும்.
அரசின் எந்த பொறுப்பிலும் இல்லாத ஒருவருக்கு ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்திட அனுமதி வழங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். சொத்துக்குவிப்பு புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள துணை முதல்வர பன்னீர்செல்வமும் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்