“சுடும்வரை நெருப்பு
சுற்றும்வரை பூமி
போராடும் வரை மனிதன்
நீ மனிதன்”
என்ற என் கவிதை வரி எவருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ சகோதரர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்கு பொருந்தும்.
வாழ்க்கைக்கு மத்தியில் போராட்டம் என்பதுபோய், போராட்டத்திற்கு மத்தியில் வாழ்வு என்பதே அவர் எதிர்கொண்டிருக்கும் எதார்த்தம். அருப்புக்கோட்டையிலிருந்து ஒரு கூழாங்கல் அளவு பணத்தோடும், இமயமலை அளவு நம்பிக்கையோடும் புறப்பட்டு வந்த அந்த கிராமத்து மனிதன் இன்று ஊடகத்துறையில் உலகறிந்த ஒருவராய் உயர்ந்து நிற்பதற்குக் காரணம் அவரது முயற்சி, முனைப்பு, வீரம் மற்றும் விவேகம்.
இந்தச் சரிந்துபோன சமூக அமைப்பில் ஒரு மனிதன் பதவிக்கும் பணத்துக்கும் புகழுக்கும் கொடுக்கும் விலையைவிட உண்மைக்குக் கொடுக்கும் விலையே மிகமிக அதிகமாகிவிட்டது. சற்றே காலத்தின் முதுகுப்புறம் நின்று யோசித்துப் பார்த்தால் எல்லாக் காலங்களிலுமே மனிதக்கூட்டம் உண்மைக்குத்தான் அதிகபட்ச விலையாக உயிரைக்கூட கொடுத்து வந்திருக்கிறது என்று விளங்குகிறது.
தன் உடலுக்கு - உடைமைக்கு - உயிருக்கு நேரும் ஊறுகளைத் தாண்டித்தான் நக்கீரன் பத்திரிகையை இத்தனை ஆண்டுகாலம் உணர்ச்சியோடு ஓங்கி நடத்தி வருகிறார் நக்கீரன் கோபால் அவர்கள். ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்த செய்தி என் கவிதை மனத்தை கனக்கச்செய்தது. “என் மீது போடப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 211. இதில் ஒன்பது வழக்குகள் கொலை, கடத்தல், பொடா போன்ற பயங்கர வழக்குகள். இதற்காக நான் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் செலவழித்த தொகை நான்கரைக் கோடி ரூபாய். ஆனாலும் எந்த விதத்திலும் நாங்கள் சோர்ந்தோ, அடிபணிந்தோ போகவில்லை”. வலியிலும் வணங்காமைதான் நக்கீரன் கோபாலின் தமிழ்த்தனம்.
தமிழ்நாட்டு இதழியல் வரலாற்றில் வெளிவந்த பத்திரிகைகள் சில ஆயிரங்களைத் தாண்டும். எத்துணை பத்திரிகைகள் கால்நூற்றாண்டுக்கு மேல் நிலைத்திருக்கின்றன என்று கணக்குப் பார்த்தால், அந்த நெருப்பாற்றில் கருகிப் போனவை எத்துணை என்ற கணக்குத் தெரியும்.
பூகம்பங்களும் எரிமலைகளும் சுனாமிகளும் தாக்கித் தகர்த்த பொழுதும், சாம்பலுக்குள்ளிலிருந்து ஜனிக்கும் ஃபீனிக்ஸ் பறவையாய் நக்கீரன் மீண்டும் மீண்டும் உயிர்த்து மேலெழுந்து பறந்திருக்கிறது.
நக்கீரன் என்ற சொல்லுக்கே ஒரு குறியீட்டுப் பொருள் உண்டு. உண்மை சொன்னால் சாமி எரிக்கும் அல்லது சமூகம் எரிக்கும். ஆனால், எரிக்கப்பட்டாலும் சாம்பலுக்குள்ளிருந்து உண்மை எழுந்து வரும். அப்படித்தான் ஆட்சியாளர்களால், அரசுகளால், சமூக விரோதிகளால், முதலாளித்துவத்தால் எத்தனையோ எதிர்ப்புகளை எதிர்கொண்ட பிறகும் நக்கீரன் உண்மையை இறுகப் பற்றிக்கொண்டு உயிரைக் காப்பாற்றி வருகிறது.
ஈழத்தமிழர்களின் இதயத் துடிப்பாய் இயங்கியவர் நக்கீரன் கோபால். உயிரைப் பணயம் வைத்துக் கன்னட ராஜ்குமாரை மீட்டெடுத்தவர் நக்கீரன் கோபால். கலைஞருக்குச் செல்லப் பிள்ளையாக இருந்தாலும் அவரையும் செல்லமாக விமர்சித்தவர் நக்கீரன் கோபால். செல்வி ஜெயலலிதா என்ற பேராளுமையை எதிர்கொண்டு மீண்டவர் நக்கீரன் கோபால்.
உலகமயமாதலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தவரும் அவரே. உழைக்கும் மக்களுக்கும் நடைபாதை வாசிகளுக்கும் பாதிக்கப்பட்ட பாமரர்களுக்கும் நீதிகேட்டு நிற்கும் பத்திரிகையாளரும் அவரே.
மீசையால் முரட்டுத் தோற்றத்தை உருவாக்கிக்கொண்டாலும், சபையில் நல்ல தமிழை ரசித்துக் கரவொலி செய்து கரகமாடும் குழந்தையும் அவரே.
பத்திரிகைத்துறையில் பல மாமனிதர்கள் தங்கள் முகங்காட்ட விரும்புவதில்லை. ஆனால், வாழும் பத்திரிகையாளர்களில் சமூகத்தின் முகத்தை அறிந்தவரும், தன் முகத்தை சமூகத்திற்கு அறியச்செய்தவரும் நக்கீரன் கோபால் என்றால் அது மிகையாகாது.
தன் பத்திரிகைக் குடும்பத்து உறவுகளுக்கு இவரைப்போல் உயிர் கொடுக்கும் சகோதரர் எவருமில்லை.
அவர் ஆரோக்கியத்தோடு வாழவேண்டும்; அவர் வாழ்வு நீளவேண்டும். ஊடகத்துறையில் உச்சங்களைத் தொடவேண்டும். விரைவில் நக்கீரன் தொலைக்காட்சி தொடங்கப்பெற வேண்டும்.
மீசைத் தமிழரை ஆசைத் தமிழால் வாழ்த்துகிறேன்.